தங்கேஸ் கவிதைகள்கவிதை 1: நட்சத்திரத்தின் சாயல் கொண்ட காலம்
நட்சத்திரத்தின் சாயலில்
சிறகுகள் அசையும் காலம்
பிடறியில் படரும் வெம்மை
தீயின் ஓவியமாய் தீட்டுகிறது
உனது மூச்சை
கழுத்திலிருந்து கீழிறங்கும் விரல்களில்
கூர்மையான நண்டின் கொடுக்குகள்
இதயத்தை ஒரு அற்ப காகிதம் போல
கத்தரித்து தள்ளுகிறது
தடைகற்கள் ஏதுமற்ற என் விசுவாசத்தின் மீது
பாதம் பதித்தபடி நீ சுற்றுலா சென்று கொண்டிருக்கிறாய்
என்னை அபகரித்துக்கொண்டிருக்கும் உன்னை
நானும் அபகரிக்க முடியுமென்றாலும்
அன்பின் பொருட்டு நிராகரித்து
சமத்துவத்தின் பெயரால்
நீ என்னை கொல்ல அனுமதிக்கிறேன்
இன்று காணாமல் போகும் கடல்
எப்படியும் ஓர் நாள்
நம் நினைவில் புரளப் போகிறது
கால் தடம் பதிய ஈரமண்ணில்
காத்துக் கொண்டிருப்பேன் நான்


கவிதை 2
என் மேனியெங்கும் நீரூற்று
 பொங்கி பீறிடும் போது
உன் முகத்தை அடையாளம் கண்டு கொள்கிறேன்
நேற்று கனவில் உதிர்ந்த நட்சத்திரம்
மீண்டும் உச்சி வானில் வந்து
கண் சிமிட்டுகிறது
ஆற்றோரம் கிடந்த கூழாங்கல் ஒன்றை
கையில் எடுத்து உச்சி முகர்ந்து படி
“அட என் நதியின் புராதானக் காதலனே
உனக்குள் ஓடிக் கொண்டிருக்கும்
நீர் கவிதையை எனக்கு மட்டும்
வாசித்து காட்டேன் “
என்று  கெஞ்சுகிறேன்
நடவு வயலில் இறங்கி
ஈரக் களிமண்ணை அள்ளி
கொஞ்சம் முகத்தில் பூசிக் கொண்டு
மீதியை புழு கொத்திகொண்டிருக்கும்
வெண்கொக்கின் சிறகினை நோக்கி
வீசியெறிகிறேன்
தெருவில் நுழைந்து
சிறுவர்கள் துரத்தும் சங்கிலி நாய்க்கு
ஐந்தாறு ரொட்டித் துண்டுகளை
பிய்த்து போட்டு விட்டு
 மீதமிருந்த  உணவுப் பொட்டலத்தையும்
இருளில் சுருண்டு கிடக்கும்
கன்னங்கரிய உருவத்தின்
கைகளில் திணித்துவிட்டு
காலாற நடந்து கொண்டிருக்கிறேன்


கவிதை 3: இப்போது இல்லாது போகும் காலம்
ஓ பறவையே !
மெழுகில் தோய்த்த உன் அலகை
தீக்குள் புதைக்கும் போது
இதழ்கள் பற்றி எரிகின்றன
நானொரு நெருப்பு ஏரியென அறியாமல்
என் நினைவில் அதை நனைத்துக்கொள்ள பறந்து வந்த நீ என்னில் மூழ்குகிறாய்
இப்போது நீ ஏரியின் மூலக்கூறு
நான் மெல்ல குளிர்கிறேன்
குளிர்ச்சி தாங்காமல்
நடுங்கிக் கொண்டிருக்கிறாய்
சிறகோடு அள்ளி உன்னை
மார்போடு அணைத்துக்கொள்கிறேன்
நீ கதகதப்பான ஒரு புறாக்குஞ்சாக மாறியிருக்கிறாய்
நமக்கு இப்போது இல்லாது போய்கொண்டிருக்கும் காலம்
பிறிதொரு சந்திப்பில்
 நிரம்பி விடக் கூடும் கேள்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்