கவிதை 1
என் அம்மு
உன்னைப் பார்த்ததும் தானாகத் திறக்கின்றன
என் ஊற்றுக்கண்கள்
திறந்துகொண்டிருக்கும் ஊற்றுக்கண்களின் வழியே
நான் ஒரு மலராக மலர்ந்து கொண்டிருப்பதை
விழிப்புடன் பார்த்துக்கொண்டேயிப்பவனும்
உன் நான் தான்
அந்த நான் அத்தனை சிலிர்ப்புடன் மலர்வதை
மூன்றாம் கிளையிலமர்ந்து
வைத்த கண் வாங்காமல்
பரவசமாகப் பார்த்துக்கொண்டிருக்கும்
அந்த பட்டாம் பூச்சியும் கூட
உன் நானே தான்
கவிதை 2
நட்ட நடு நிசி தாண்டியும்
நிற்காமல் நீளும்
உருவமற்றதொரு நாயின் குரைப்பு
இந்தத் தெரு நிறைத்து
சுழலும் சருகாகி
காற்றோடு போகிறது காணாத தூரம்
தனிமையின் வன்மமோ
இணையற்ற துயரமோ
நடனமிடும் நிழல்களென ஊசலாடும்
ஆன்மாக்களின் அதீதமோ
அடிவயிற்றில் கனன்று எழும்
அக்கினியின் உக்கிரமோ
கருணையற்ற காலத்தின்
மீது
வீசும் சாபமோ
யார் கண்டது
வெறும்
காலடிகளைப் புதைத்து புதைத்து
தன்னை
மயானக் காடாய் மாற்றி விட்ட
மனிதர்களை எண்ணி எண்ணி மாளும்
இந்த தெருவின் விகசிப்பே தானோ
என்னவோ ?
கவிதை 3
திட்டமிட்டு தன் பறத்தலைத் துவக்காத சின்னஞ்சிறிய பறவை ஒன்று
தன் பால்ய சிறகுகளால்
இந்த விண்ணின் மீது விசுவரூபம் எடுத்துக்கொண்டிருக்கும் வேளை
ஒரு கடைசி மழைத்துளி போல
இப்புவியை நோக்கி வந்து கொண்டிருக்கும்
வெளிச்சக்கீற்றை
தன் குட்டியூண்டு அலகால்
கொத்திக்கொண்டு செல்கிறது
சலனமற்று.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

