Thanges Poems 29 தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




கவிதை 1
எறும்பூரத் தேய்ந்த கல்லெங்கும்
ஃ ஆய்த எழுத்தின் சிற்பங்கள்

இரண்டு துளி காலம் வெம்மையாய்
என் உள்ளங்கையில் கொதித்துக்கொண்டிருக்கிறது
அயிரை மீன்களைப்போல
துள்ளிக்கொண்டிருக்கும் நினைவுகளை
வெறும் கண்ணீர் துளிகளென்று அழைக்க
எந்த முகாந்திரமுமில்லை

சாதி கங்கு கொண்டு
என் பால்யத்தின் சிறகுகளை கருக்கிய
அந்த மண்ணின் மீது
இன்னும் நேசம் குறையவில்லை

சீடையுருண்டையையும்
என்னையும்
முந்தானையின் இரு பக்கங்களிலும்
முடிந்து வைத்திருந்தாள் அம்மா

வன்மம் கொண்ட கரிசல் பூதம்
வாயை அகலத் திறந்தபடி
வெய்யிலை அள்ளி அள்ளிக்
குடித்துக் கொண்டிருக்கும்
சமயத்தில் பற்றாக்குறைக்கு
மனிதர்களின் இரத்தத்தையும்

இரத்தவெறி கொண்ட பூமி மீது
எந்த கோபமுமில்லை அவளுக்கு

சாமியாடுகிற அன்னிக்கு
மட்டும் தான்
தாத்தா காலுல அத்தனைப் பயலும் விழுவான்
மத்த நாள்ள
அவரு துண்டு கக்கத்துக்குத் தானா போயிரும்
“பிச்சுவட்டியான் பேரா”
கும்புடுறேன் சாமி

கள்ளு குடிச்சியா?
“ஒரு கப்பு எட்டணாவுக்கு சாமி”
சரி கருப்பனா
பாட்டை அவுத்து விடு…

” ஆலமரமுறங்க அடிமரத்து கொப்புறங்க
உன்னோடு நானுறங்க
உலகம் பொறுக்கலியே ”

ஏ….ரெண்டு சாமி பாட்டை படிப்பா
“..பட்டி பெருக வேணும்
பால் பானை பொங்க வேணும்”
சாதி மட்டும் மஞ்சக் கிழங்கு மாதிரி அப்படியே இருக்க வேனும்

கிழவனுக்கு நக்கலைப் பார்த்தியா?
“ஆமா நீங்க தான படியளக்கிறது”
“தாத்தா எனக் கொரு பாட்டு,
“மூச்சு குத்துப் புடிக்க ஆளுக வாராக
பெறகு வாடா பேராண்டி ‘

”சோளத்தட்டை ரெண்டும் வந்து தன்னால
ஒட்டனும் அப்பத்தான் பிடிப்பு சுகமாகும்”
“ஆத்தா மகமாயைவேண்டுக்கிட்டு”
“இன்னும் எத்தனை காலம் வேண்டுவ “?

“அவ கண் திறந்து பார்த்தா குடியிருக்க
ஒரு வீடு குடுப்பா”

“ஏ பெருசு வீடே வேண்டாம் மனுசனுக்கு மரியாதைதான் வேணும்
அத உங்க ஆத்தா கொடுப்பாளா”?

“அடி கொப்பான …..அக்கிரம் புடிச்ச
பெய்புள்ளைக..
” தாத்தா எனக்கு ?
உனக்கு புடிச்சதெல்லாம் சொல்லு..

எனக்கு
தீப்பெட்டி பொம்மண்டு
சீனிச் சேவு
அதிரசம்
கல் கோணா

தாத்தா கேட்குறியா?
கொர் கொர்.
தாத்தா எழுந்திரு?

தாத்தா இனி எப்பவும் எழுந்திருக்க மாட்டாருடா மகனே
பெரிய ஊரு போய் சேர்ந்துட்டாரு

இத்தனை வருசமா சொல்லிகிட்டேதான்
இருக்கேன்
எனக்குப் புடிச்சதை
தாத்தா கேட்டுக்கோ

இரட்டைப் புளிய மரம்
குட்டைக் காளாங்கண்டு
மாட்டு வண்டி பட்டா
தொலி வயலு
சிம்மி நாய்க்குட்டி
இரயிலு தட்டான்
சோளக்காடு
தாத்தாவைப் புதைச்ச இடு காடு
பச்சப் பசலை கீரை மாதிரி
களங்கமறியாத உன் குழந்தை முகம்

கவிதை 2
பெருவெளியில்
நேசமென்னும் பெருவெளியில்
நீலோத்பவமாய் உருளும்
மானுட சமுத்திரத்தில்
நானொரு துளி
என்னைப் பாலினத்தின் பெயரால்
மதத்தின் பெயரால்
சாதியின் பெயரால்
எல்லைக்கோடுகளின் பெயரால்
மற்றும் எது ஒன்றின் பெயரால் பிரித்தெடுத்துப் போகும்

எந்த மனிதனின் கைகளிலிருந்தும்
சிறகு முளைத்த வல்லூறென
வீறிட்டெழுந்து விண்ணில் பாய்வேன்
கருமேகத்தின் கருவாகிவிட

கவிதை 3
ஒரு திசையற்ற பயணம்,,,
விழிகளின் தீண்டல்களில்
விரல்களின் ஸ்பரிஸங்களில்
பொழிந்து விடுகிறது என் மேகம்.
ஒரு பார்வையின் கோடியிலோ
ஒரு உரையாடலின் துவக்கத்திலோ
நுரைத்துப்பொங்குகிறது
என் கடல்,,
ஒரு உதட்டுச்சுழிப்பிற்கோ
ஒரு இமையின் தாழலுக்கோ
சுருங்கிப்போகிறது
என் வானம்,,,,
ஒரு கண்ணீர் துளிக்கோ
ஒரு ஒற்றை வார்த்தைக்கோ
முடிந்து போகிறது
என் உலகம்,
ஒரு திசையற்ற பயணத்திற்கோ
ஒரு முடிவற்ற கணத்திற்கோ
தொடங்கிவிடுகிறது
என் பயணம்
காலத்தை மீறும்
ஒரு வெற்றிடத்திற்கோ
அல்லது வேறு எதற்கோ
பறந்து செல்கிறது
என் பறவை

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *