தங்கேஸின் நான்கு கவிதைகள்

Poet Theni Thanges Four Poems in Tamil Language. Book Day Website and Bharathi TV (Youtube) are Branches Of Bharathi Puthakalayam.கவிதை 1

சிறு முத்தத்திற்குப் பின்பு
புல்லாங்குழலிலிருந்து
கசியும் இசை சுவாசமாகும்
ஒரு பொழுது
மோப்பம் பிடித்து வந்த
என் ஆதி பூனையே !
திரைச்சீலைக்கு அந்தப்புறம்
உன் வாளிப்பான உடலை
ஏற்ற இறக்கங்களுடன்
ஒரு வாக்கியத்தைப் போல
அசைத்துக் கொண்டிருப்பதை
பார்த்துக்கொண்டே தானிருக்கிறேன்
அமைதி தவழும் முகத்துக்குள்
குருதிப்புத்தன்
சட்டென்று என் நிழலை மடித்து சட்டைப் பைக்குள்
வைத்துக்கொள்கிறேன்
காலம் மீறிப் போகிறது
ஒளி உமிழும் கண்களுக்குள்
குருதிப் புத்தன்
இரையாகும் இச்சையில்
வெளியே தாவிக்குதிக்கும் என் நிழல்
தாவிக்குதித்த நிழலை
அது அசையும் முன்பே
கபளீகரம் செய்து விட்டு
நாவால் முகவாய்க் கட்டையை
நீவிக்கொண்டிருக்கிறாய நீ
அடிவயிற்றில் சின்னஞ்சிறு
பித்தேறிய குமிழ்களாக
உருண்டு கொண்டிருக்கும்
என் இருப்பு கேட்கிறது
உலகம் முழுவதும் இரை தேடி உண்ணும் பூனைகள்
போன்ற தொரு
அசல் பூனை தானா நீ ?கவிதை 2: மழை நாட்களில் காணமல் போகிறவர்கள்

குட்டி குட்டி வட்டஇரவுகள்
தலைக்கு மேல்
நீந்திப்போகும் வேளையில்
அயிரை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன
தெருவெங்கும்
மனதில் ஒரு நதி உருவாக
கசியும் சிறு நினைவுகளே
போதும்
மழைநாட்களில்
வாலை இழுத்து பின்னங்கால்களுக்குள்
திணித்தபடி
குளிரில் விறைத்துக் கொண்டிருக்கும்
தெரு நாய்க்கு
அன்றாட குரைப்புக்கும்
இரை கிடைக்கப்போவதில்லை
எல்லாக் கதவுகளும்
அடை பட்டுக்கிடக்கும்
இந்த மழை நாளில்
குப்பைத் தொட்டிக்கு அருகில்
விழுந்து கிடக்கும்
கல் பொறுக்கி
எங்கே போய் தொலைந்தானோ
இந்த விடாமழையில்
மனநிலை சரியில்லாத நோயாளியாக
பிதற்றிக் கொண்டிருக்கும்
பின்னிரவு தூறல்களிலிருந்து
எப்படித் தான்
எனக்கு மட்டும்கேட்கிறதோ
இதே போன்ற ஒரு மழை நாளில்
உறவற்ற
வாழ்விலிருந்த திடீரென்று
காணாமல் போய் விட்ட
முத்தமம்மாவின் பிதற்றல்களும்
அவளை தேடி தேடி
சாகும் வரை ‘சிம்மி நாய்
இட்ட ஊளைகளும்கவிதை 3: வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறேன்

வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறேன்
காலமற்ற பொழுதில்
எவ்விதம் நிரம்புமோ இனி இது?

வெள்ளைத்தாளிலிருந்து முளைத்தெழுகின்றன
மரத்துகள்களின் விசும்பல்களும்
காகித கூழாவதற்கும் முன்பு
மண்ணின் ஈரலை முத்தமிட்டுக்கொண்டிருந்த
பிரிய வேர் ஒன்றின் முடிவற்ற தேம்பல்களும்

எல்லையற்ற வெளிதன்னை
தன் வழியே நிரப்பித்தீர்க்க
சின்னஞ்சிறிய சிறகசைத்து அலையும்
அந்த சிட்டுக்குருவியின்
பறத்தலில் கொஞ்சம்

ஜொலிக்கும் நட்சத்திரங்களுக்கு நடுவில்
சோபையிழந்து நடுங்கிக்கொண்டிருக்கும்
அந்த பலவீனமான கிழட்டு நட்சத்திரம்
இதில் உதிர்ந்து விழும்போது கொஞ்சம்
நிரம்பக்கூடும்
இந்த வெள்ளைக்காகிதத்தின் வெற்றிடம்

காற்றின் விரல்கள்
துழாவுகையில் சிணுங்கி நெளியும்
கொத்து அரளிப்பூக்களின்
ஏழாம் சிலிர்ப்பில் கொஞ்சம்

அடர்ந்த பச்சையத்திற்குள்
நாளை மலரத்துடிக்கும் மொட்டொன்றும்
அதே கிளையில் நாளை உதிர்ந்துவிடக் காத்திருக்கும்
சருகொன்றும்
இடம்மாறினால்
சற்று நிரம்பக்கூடும்
இந்த வெள்ளைக்காகிதத்தின் வெற்றிடம்

ஆனாலும்
எவ்வளவு நிரப்பினாலும் நிரம்பாமல்
நிரம்பியவையாவையும் மலைப் பாம்பாய்
விழுங்கிவிட்டு இரைக்காக காத்திருக்கும்
இந்த விநோத வெற்றிடத்தை
எவ்விதம் நிரப்புவேனோ
யாருமற்ற இந்த அகாலத்தில்?

காத்திருக்கிறேன் ஆண்டுகளாக
இன்றிரவும் சேர்த்தே

என்னை வெற்றிடமாகவும்
வெற்றிடத்தை நானாகவும்
மாற்றி வைத்துப்போன
அந்த மாயக்கரம்
என்னை நானாகவும்
வெற்றிடத்தை மறுபடியும்
வெற்றிடமாகவும்
வந்து மாற்றி வைத்துப்போகுமென்றுகவிதை 4: மழைக் காட்சிகள்

1

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு……

கலங்கிய குட்டைகளில் பறக்கும் கட்சிக்கொடிகளை
நையப்புடைக்கின்றது வலுத்த மழைத்துளி
முக்குளித்த பின்பு
நாற்புறமும் தெறிக்கின்றன
சேற்றின் தீற்றல்கள்

2
அடிவயிற்றில் குமட்டிக்கொண்டு வரும்
நாற்றத்தை அலட்சயித்து
மக்கிய குப்பைகளையும் மக்காத குப்பைகளையும்
கவனமாகக் குடைந்து கொண்டிருக்கும்

கருப்புருவத்தை தோல்வியுற்ற தேனீக்களாக
கொட்டித்தீர்க்கின்றன
வெறிகொண்ட மழைத்துளிகள்

3

மேலேயிருந்து உதிரும் ஈசல் பூச்சிகள்
சற்று நின்ற பொழுதில்
ஆருயிர் தலைவரின் கூட்டத்திற்கு சென்று வரும் வாகனங்கள்
நாலுவியாபாரம் நடக்கும்
கடைவீதியோரம் ஒதுங்குகின்றன
** ஏம்மா தங்கச்சி எங்க ஆட்சில
ஆப்பிள் கிலோ நூறு ரூபா தான
அதிசயமா இரு நூறுன்னு சொல்லிறேயே ?
அண்ணே இப்பல்லாம் கிலோ நூறு ரூபாய்க்கு
மனுசனை மட்டும்தான் வாங்க முடியும்
பார்த்துக்கோங்க ..

4
சோவென்று மழைக்குள்
எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்ட இடங்களை
தோண்டிகொண்டிருக்கிறார்கள்
தொலைக்காட்சியில்
பயமாக இருக்கிறது
நம் கால்கள் நின்று கொண்டிருக்கும்
இடத்திற்கு கீழே
என்ன புதைக்கப்பட்டிருக்கிறதோ?

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.