கவிதை 1

யாருக்காக என்று

 

சாலையோரத்து மரங்கள் நிற்பது

தனக்காக என்று நினைப்பான் பயணி

கிளைகளில் அமரும் பறவைகள்

தமக்காக என்று நினைக்கும்

நிழலுக்கு இளைப்பாறும் தெருநாய்கள்

தமக்காகவே என்று நினைக்கும்

தமக்கு எண்ணிக்கையில் ஒன்று அதிகம்

என்று  நினைப்பான்

தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பாளன்

யார் யார் தன்னை தமக்கென்று நினைத்தாலும்

தான் யாருக்காக என்று நினைக்கவே தோன்றாது மரங்களுக்கு

Crow on top of Water Buffalo | House Crow attending to the n… | Flickr

கவிதை 2

பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும்

பரிவான செவிலியைப்போல

தயங்கி நிற்கிறது பொழுது

வைக்கோலை அசைபோட்ட படியே

வாலை ஆட்டிக்கொண்டு செல்லும்

எருமையின் நடுமுதுகில்

ஒட்டுண்ணியாய் உட்கார்ந்திருக்கிறது

வாழ்க்கை

ஒட்டுண்ணியை கொத்திக் கொண்டுபோகும்

காக்கைகளின் கூர் அலகுகளுக்காக

பரபரத்துக் கொண்டிருக்கின்றன

எருமையின் முதுகுகள்

திடுமென சப்தம் கேட்டுக் கண்விழித்த

தூங்கு மூஞ்சித் தெருக்கள்

இது வழக்கமான மாக்களின் சத்தம் தான் என

மறுபடியும் நெட்டி முறித்துக் கொட்டாவி விடுகின்றன

மூன்று மீன்கள் - இனிது

கவிதை 3

மீன்களின் சுவை தெரியும் யாருக்கும்

நீந்துதலின் சுவை தெரியாது

ஒரு கைப்பிடி நதியை

என் உள்ளங் கைகளுக்குள்

தேக்கி வைத்திருந்த சமயம்

வானமும் கடலும்

கூடிக் களிக்கின்றன

கத கதப்பான மீன்குஞ்சுகளின் செதில்கள்

விரல்களைப் பரிவாய்  உரசிச் செல்கின்றன

நுனி நதியில்  அட்சரம் எழுதிப்போகும்

நீர்ப் பூச்சிகளும்

சுழலில் கிறு கிறு வண்ணம் சுற்றும்

முதிர் சிறகுகளும்

அலை நெளிவுகளில்

புனல் நாட்டியம் பழகும் நீர்ப் பாம்புகளும்

படித்துறையில் வெண்பட்டு விரிக்கும்

நுரைப் பூக்களும்

கரையில் நிற்கும் ஒருவனுக்கு

கடவுள் சாட்சியாய்

நதியைத் தாரை வார்த்துக் கொடுக்கின்றன

 

தங்கேஸ்

தமுஎகச

தேனி

2 thoughts on “தங்கேஸ் கவிதைகள்”
  1. மூன்றாவது கவிதையில் மனதும் நதியாகிறது…
    என் அன்பு அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *