கவிதை 1
கடவுள் தன்மையோ
பெரும்பாறையாய் அசைவற்ற பொழுதுகள்
அசைவற்ற பொழுதுகளை
அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது
காற்றோடு புணரும்
ஓர் அரசமரத்திலை
எந்த அரூபத்தின் பவனியை தரிசிக்க
திடீரென்று கோடிக் கண்கள் முளைத்து விடுகின்றனவோ
புழுதி படிந்த . இந்த வீதிக்கு ?
நிலவு நதியாகும் தருணம்
உறங்கா மீன்களின் சுவைக்குப்
பலியாகின்றது
உடைந்து போன விடியலின் கரு
புதையுண்ட சொல்லொன்று
சுயம்பாக முளைத்தெழ
கனவெங்கும் பறந்து கொண்டிருக்கின்றன
மழைத் தட்டான் பூச்சிகள்
கசாப்புக் கடையில் கட்டப்பட்டிருக்கும்
திசையறியா ஆட்டுக்குட்டி
இரவின் திரண்ட சாபத்தை
கத்திக் கத்தித் தீர்க்கும் போது
நினைவில் வந்து போகிறது
முதுகு வளைந்த கூர்மையான வெட்டுக் கத்தி.
கவிதை 2
படைப்பு
ஒவ்வொரு மதமாக தன் விலாசங்களை மாற்றிக் கொண்டிருந்த கடவுள்
ஒரு நாள் காணாமல் போகிறார்
இடிக்கப்பட்ட கோவில்கள் மசூதிகள் தேவாலயங்களிலெல்லாம்
தேடிய பிறகு
அவரின் இல்லாமை பச்சை குருதியென பெருக்கெடுத்து ஓடுகிறது
வெறுமையின் வெளியில்
குற்ற உணர்ச்சி கொண்ட மனங்கள்
அரற்றுகின்றன ஆற்றாமையில்
இரக்கத்தில் சுயம்புவாக
ஆண் பாலில் தோன்றுகிறார்
வெள்ளையுடையணிந்த கடவுள்
இனி அவர் தன்னை நிரூபிக்க
அற்புதங்கள் புரிந்தாக வேண்டும்
நீரிலும் நிலத்திலும் ஆகாயத்திலும்
மிதக்கும் மனிதர்கள் மேல்
மோதி விடாமல் நடக்கும்
அசகாய சூரத்தனம்
தூக்கத்தைக் குலைக்கிறது
கழுத்தை அழுத்துகிறது
விற்பன்னர்களின் நீதியைச் சுமந்து செல்லும் போது
நெஞ்சில் முட்கள் முளைக்கின்றன
முட்களோடு சேர்த்து இதயத்தையும்
கழற்றி வைக்கிறார்
மீதியிருக்கும் மனதின்
குற்ற உணர்ச்சிகளின் வழி
சாத்தான் சாமர்த்தியமாக
உள்நுழைகிறார்
சாத்தான் சாத்தான்களையும்
கடவுள் கடவுள்களையும்
படைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
ஆனால்
சின்ன வெங்காயம்
கிலோ என்ன விலை என்று மட்டும்
யாருக்குமே தெரியவில்லை …
கவிதை 3
எதிர்பாராமல்
அறுந்த பல்லி வாலுக்கு
வெண்சுவர் என்பது
இனி என்றுமே
நுழைய முடியாத கடந்த காலமல்லவா ?
இடமும் வலமும் துடித்து விழும்
அதன் வலியைப் பாட
ஒரு கவிஞனில்லை
பசுவின் வாலென்றால்
பக்கம் பக்கமாக பாட ஆளிருக்கிறது
யானையில் வாலென்றால் கூட
கானகத்தையும் சேர்த்தே
பாடி விடுவார்கள் கவிஞர்கள்
ஆனால் அறுந்து தொங்கும்
சிறு தசைக் கோளத்தைப் பாட
யார் இருக்கிறார் நம்மோடு?
சற்று நேரத்தில்
இறந்த காலம் நுழைந்து விடும் எதிர்காலத்திற்குள்
எறும்புகளின் வழியே
தவிர சுவரில் அப்பியிருக்கும் மொட்டைப் பல்லிக்கு
சற்றுக் கவனப் பிசகு
இழந்து போன தன் வாலை விட
எதிரிலிருக்கும் ஈசல் பூச்சி மேல்தான்
முழுக்கவனமும் இப்போ
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மூன்று கவிதைகளும் அபாரம். பல்லி கவிதை எளிமையாக இருப்பதால் அதிகமாய் ஈர்க்கின்றது. அருமை தங்கேஸ் தோழர்
மிக்க நன்றி