கவிதை 1
தெருவில் நிறுத்தியிருக்கும் ஆட்டோக்கள்
சிறு மதுபானக் கூடமாக மாறும் போது
புளித்துப் பொங்கும் காடி நெடி நாசியை நிறைக்கிறது
சாதி செத்து சுண்ணாம்பாக மிதந்து கொண்டிருக்கும் நேரம் இது தான்
கீழடிக்குள்ளிருந்து இரகசியமாக முளைத்தெழுகிறான் டாஸ்மாக் தமிழன்
” சட்டம் ஒழுங்கையெல்லாம் அவரே பார்த்துக்கிடுவாரு”
நீங்கள் எழுந்து மூன்று முறை கை தட்டுங்கள்
அதில் ஒட்டியிருக்கும் மிச்ச சொச்சங்களும் அப்படியே
உதிர்ந்து போகட்டும்
கவிதை 2
உங்களுக்கு ஒரு குட்டிக் கதை
ஒரு பேரரசர்
கைகளை ஆவேசமாக வீசி வீசி
எப்போதும் ஆணையிடுவார்
நாற்பது சிற்றரசர்கள் எப்போதும்
கப்பம் கட்ட வேண்டும்
அவர் கண்களில் கருணை தோன்ற
எப்பொழுதாவது புன்னகையோடு
அவர்களிடம் அளவளாவுவார்
இனி அடுத்த வாய்ப்ப்பு தான்
கத்துவதால் பயனில்லை
டப்புக்கு நாங்க இருக்கோம்
திரை செலுத்தி திரை செலுத்தி
நுரைதள்ளிவிடும் குடிமக்களுக்கு
மாண்பு மிகுக்கள்
மாற்று சகாயம் செய்வார்கள்
டாஸ்மாக் போ
இப்போ நீயும் அரசு ஊழியன் தான்
கடமையை செய் பலனை
எதிர்பார்க்காதே
தாலி அடகு கடை
நவீன சேட்டுகளுக்கு கொண்டாட்டம்
உரசிப் பாருங்கடா
எங்களை உரசிப் பாருங்கடா
“சலாம் அலைக்கும்”
காஜானா காலி”
எங்களுக்குத் தெரியாதா?
வெள்ள அறிக்கை
வெள்ளை அறிக்கை
எதை வாசிச்சா என்னா?
சேட்ஜி சொல்றான்
“நம்பள்கு உருப்படியா நாலு சுலோகத்தை சொல்லிட்டுப் போ”
கவிதை 3
ஒரு இட்லிக்குள்ள.
கருங்கல்லு கணக்கா
உருண்டுக்கிட்டிருக்கு ஜிஎஸ்டி
ஒரு கப் காபி சார்?
சுடுதண்ணீர் போதும்
அதுக்குத்தான் வரி கிடையாது
வீட்டு வாடகை பாக்கி
கரண்டு பில்லு பாக்கி
பலசரக்குக்கு பாக்கி
பால்காரனுக்கு பாக்கி
கேபிள் டிவிக்கு
வெத்தலை பாக்குக்கும் பாக்கி
பாக்கி பாக்கி எல்லாம் பாக்கி
இனி ஒன்னும் கிடையாது
நீ மட்டும் தான் டா பாக்கி
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.