கவிதை 1
புல்லைப் போல வளர்கிறது
நம் நேசம்
கவனிப்பாரற்ற பசுமையை மாடுகளுக்கு அறுத்துப்போடுகிறான் இடையன்
நுனித்தளிரில் இடம்பிடிக்க வந்த பனித்துளிகள் வீணாக
மண்ணில் விழுந்து சாகின்றன
அசைபோடும் பசுக்களின் தாடைகளில் ஒட்டிக்கொண்டு
உறிஞ்சுகின்றன ஒட்டுண்ணிகள்
அவைகளோ காகங்களை வேண்டி
அழைக்க
சிங்கம் போல் வேட்டையாடும் காக்கைகள்
முதுகிலும் வாலிலும் அமர்ந்த படி
அதிர்ஷ்ட சவாரி செய்கின்றன
ஊரற்ற புற்களின் சுவைக்கு மதிமயங்கிய பசுக்களோ
காகங்களை மனதார துதிக்கின்றன
இவ்வண்ணம் காக்கைகள்
நம் நேசங்களுக்கு அதிபதியாகின்றன
கவிதை 2
சிறிய வெண் சங்குதான் வாசலில் தொங்குகிறது
கடலைச் சுமந்தபடி .
இரவானால் கொசுக்கள் உள்ளே அடைந்து கொள்ளும்
காதைப் பிளக்கும் ரீங்காரத்தில்
வேறு சப்தம் கேட்காது
நாட்பட நாட்பட
வெண் புள்ளிகள் மீது
ஒட்டடை வந்து படிந்து கொள்ளும்
சமயத்தில் குளவிகளின் வாசஸ்தலமாகி விடும்
பல காலமாய் கவனிப்பாரற்று கிடக்கும் அதனிடம்
காது கொடுத்தால் கிசுகிசுக்கும்
” இத்தனை காலம் தான் உயிர்த்திருப்பது
பழைய அலையின் சிறு தீண்டலுக்காகவே ” என்று …
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


நன்றி