கவிதை 1
வாசற்கதவை முகத்தில் அறைந்து சாத்துகிறது வாழ்க்கை
வறுமைமுகத்தில் படர
உடலை இலக்கற்று
சுமந்து போகின்றன கால்கள்
ஒரு கைபிடி அளவு
கடுகு பெற்றவள்
அது மரணம்நிகழாத
வீடு தானாவென்று ஐயம் கேட்கிறாள்
இல்லை என்றானதும் கைநிறைந்திருக்கும் கடுகை
விசிறித் தெருவில் இறைக்கிறாள்
இப்பொழுது கடுகுகள்
மரணம் நிகழாத
ஒரு வீட்டை நோக்கி
தெருவெங்கும் உருண்டோடிக்
கொண்டிருக்கின்றன
கவிதை 2
மதில் மேல் பூனை
மறுகி நிற்கிறது
மாலைப்பொழுது
மறுபுறம்
இருளின் கருப்பையாக பூமி
திறந்து கொள்கிறது
துக்கத்தின் கருமையிலிருந்து
தப்பிச் செல்ல
சின்னஞ்சிறு பறவையின் அலகுக்குள்
சிறுதானியமாக நுழைகிறேன்
ஒரு விரும்பத்தகா உயிரியாக
இந்த உலகை ஏளனம் செய்யும்
இந்த நிலவின் ஒளியிலிருந்து
தப்பி விட
அந்தரத்தில் எழுப்பி எழும்பி
தலைகீழாய் குதிக்கும் மனசாட்சியை
எந்த வாய்க்குள் அடைப்பது?
இரவுப் பூச்சிகளின் ரீங்காரமோ
தங்கள் பங்குக்கு
இரத்த தீற்றல்கள் மீது
குளிர்ந்த நீரைக் கொட்டிப் போகின்றன.
பெருந் தெய்வங்களும்
சிறுதெய்வங்களும்
கலந்திடாத
ஒரே ஒரு தூய கணத்தை
கண நேரம் எட்டி விட்டால்
கூடப் போதும்
களங்கமற்ற என் நதியில் மூழ்கி
மீட்சிமை பெற்று எழுந்து விடுவேன்
பிறகு கை நிறைய நுரைப் பூக்களை அள்ளி அள்ளி
இந்த இரவின் மீது தெளித்து விளையாடுவேன்
கவிதை 3
சிறு சிறு தூறல்களின் வழி இறங்கி வருகிறது
ஒரு பெரும் மழைக்காலம்
சில் வண்டாக இந்த நகரத்தில்
அடர் கூந்தலை விரிக்கிறாள்
நித்திய கன்னி ஒருத்தி
தரை தொட்டு புரள்கிறது தாரகைகளாக
சன்னல் வழி விரல் நீட்டும்
என் செல்ல மகளின் உள்ளங்கையில்
திரு திருவென முழிக்கும் ஒரு மொக்கு
ஒரு துளியோடு ஜனித்து
தெருவில் புரளும் அழுக்கோடு குதித்து
வீதி வரை ஓடோடி விட்டு வந்து
மறுபடியும் அடுத்த துளிக்குள் புக
காத்திருக்கும் இந்த கவிதை உயிரணுவாக
அன்றிலிருந்து இன்று வரை
இன்னும் எத்தனை காலமோ ?
வயிறு முட்ட கள் குடித்து வரும் கூடாண்டி தாத்தா
வயல் வழி லம்பி லம்பி வருகையில்
வழி நெடுக வசவுகளால் சபித்துக்கொண்டே வருகிறார்
போதையை தெளிய வைத்த உச்சி மழைக்கு
நச நசத்து கொண்டிருந்த ஒரு ஈர நாளில்
பாம்பில் நாயக்கரின் பம்பு செட்டு ரூமுக்குள்
பார்த்த நான்கு லஜ்ஜையற்ற கால்கள்
இன்னும் அப்படியே அப்பியிருக்கிறது
பால்யத்தின் கண்களில்
வயலுக்குப்போய் திரும்பும் பெண்கள்
உச்சித்தூறலுக்கு முந்தானையை
தலைக்குப்போர்த்துவது
சும்மாவாச்சும்
செல்லமாய் நனைவதற்குத் தானே
ஒரு மழைநாள் ஒன்றில் தானே
ஊரில் பெரியமாரி பெரியய்யா
வீட்டுச்சண்டைக்கு ரோக்கர் மருந்தை
குடித்து விட்டு
ரெட்டைப்புளிய மரத்தினடியில்
வாயில் நுரை தள்ள படுத்துக் கிடந்தது
இதே மழை விட்ட முன் சாமமொன்றில் தான்
சாவடிக்கு முன்னால்
புருசன் ‘பலவற்றை’ என்று கேட்டஒரு வார்த்தைக்கு
பழைய சுளகில் அப்பி வைத்திருந்த
அய்யாரெட்டு சிவப்பரிசி சோறை
ஒரு கவளம் பிசைந்து கையில் வைத்துக்கொண்டிருந்தவள்
குளிரில் ஒடுங்கிப்போய் வாலை பின்னங்கால்களுக்குள்
ஒடுக்கி வைத்துக்கொண்டு
கடவாயில் எச்சில் வடியப் பார்த்துக்கொண்டிருந்த
ஊர் நாய்க்கு மொத்தத்தையும் வைத்து விட்டு
ஓடிப்போய் ஊர் கிணற்றில் விழுந்து
செத்துப்போனாள்
எங்க வடிவு அக்கா
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.