தங்கேஸ் கவிதைகள்

Thanges Poems 33 தங்கேஸ் கவிதைகள் 33




கவிதை 1
படபடக்கும் வெள்ளைத் தாள்கள்
குருவிகளாகும் ஒரு மாலைப் பொழுது
நம் முத்தத்தில் சிவந்த சூரியனுக்குக்
கொள்ளை அழகு

விரல் தீண்டும் இந்தச் சிறு கணத்திற்காகவா
இத்தனை காலங்கள் காத்திருந்தாய்?

ஆனாலும் உன்னை ஆதி அந்தமாய்
தழுவும் போது நான் சொல்வேன்
நின்னினும் என் தவம் பெரிதே கந்தர்வா!

கல்லாய்ச் சமைந்திருந்தவனை
உயிர்ப்பித்தது
ஒரு மாசற்ற சுவாசம் எனில்
அந்த ஒரே ஒரு மாசற்ற சுவாசத்திற்காக
உன் பெயரைச் சொல்லிச்ள சொல்லியே
கல்லைத் திரவாகமாய்க் கரைத்தவள் நான்

கவிதை 2
அந்த நதி இன்னும் ஓடிக்கொண்டே தானிருக்கிறது மனதில்
மனம் பிறழ்ந்த பொழுதொன்று
அதன் மீது குப்புற கவிழ்ந்து கிடக்கிறது

சாரமற்ற நிலவும்
கோலமாவைப் போல
பொடிப்பொடிப்யாக
அதன் மீது
தன்னைத் தூவிக் கொண்டிருக்கிறது

நீ ஒரு சொல்லை உதிர்க்கிறாய்
ஓசையின் இனிமையில்
அர்த்தத்தைத் தவற விடுகிறேன்
தவறவிடுவதே நம் இயல்பானதை எண்ணி
நீ ஆழமான புன்னகையைச் சிந்துகிறாய்

வழியைத் தவறவிட்டு
தலைக்கு மேல் பறந்து கொண்டிருந்த
கொத்துவெண் நாரைக் கூட்டமொன்று
கூடடையாத அந்தச் சொல்லை
அலகுகளில் கல்விப் போகிறது!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.