தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் 34 Thanges Poems 34
கவிதை 1
கண்களை மூடிக்கொள்கிறேன்
இன்னொரு முறை விழிகளுக்குள் பறந்து போ பறவையே!
அந்த இளவேனிற் காலம் திரும்பி வரும்போது
ரேடியோப் பூக்கள் பூத்த மலைச்சரிவுகளில்
நாம் பசுந்தளிர்களிடம் உரையாடியபடி நடந்து கொண்டிருப்போம் !
பால்கொடிகள் என் மேனியெங்கும் பற்றிப் படர
மெய்சிலிர்ப்பில் நான் மீண்டும் பனிச்சிலையாகி விடுவேன்.

தெளிந்த வானமும்
அதன் மீது நிலவும்
அரைவட்டமடித்துப் போகும்
வெண்நாரைக்கூட்டங்களும்
மீண்டும் தோன்றும் போது
கடைக்கண்ணோரம் துளிர்க்கும்
ஒரு துளி கடலில்
நீ படைத்த அத்தனை உயிரினங்களும் உன் முன்னால்
இரகசியமாய் நீந்தி மறைந்து விடும் கண நேரத்தில்

கவிதை 2
கடவுள் புன்னகைக்க வந்து விடுவார்
காற்றில் மிதந்து வரும் வார்த்தைகளென
தாழப்பறக்கின்றன
அதிகாலையின் முதல் பதிவை எழுதும்
வண்ணத்துப்பூச்சிகள்

காலைப்பறவைகள்
பனித்துளிகளில் தேங்கியிருக்கும்
ஈரக்காற்றை இறக்கைகளால் கிழிக்காமல்
கவனமாக நீந்திப்போகின்றன
மரங்கள் தியானித்துக்கொண்டிருக்கின்றன
இன்னும் கண் திறக்காமல்

செங்கல் பொடியையும் சாம்பலையும்
வரிகளாய் உடம்பில் தெளித்திருக்கும்
சங்குப்பூனையும்
உறுத்தும் மியாவிற்குப் பயந்து
நீட்டி சோம்பல் முறிக்கும்
அருக்கம் புல் புதரிலிருந்து

தெருநாய்கள் அடையாளம் தொலைந்து
சண்டையிடாமல் இருக்கும்
சற்று வெயிலேறும் வரைக்கும்

நசுக்கப்பட்ட சிவப்புத்தக்காளியாய்
தோற்றம் கொள்ளக் காத்திருக்கிறது
இன்றைய அதிகாலைச்சூரியன்

இன்னொரு தென்னங்கீற்றாய்
தலைகீழாகத் தொங்கி கிடக்கிறது
பச்சை அரவம் ஒன்று
கடைசி இரவும்
சொட்டிக்கொண்டிருக்கிறது
இருள் நதியாய்
அதன்மீது

தாயின் வெப்பச் சிறகுகளுக்குள் பதுங்கியிருக்கும்
காக்கைக் குஞ்சுகளுக்கும்
தாய்ப் புறாவின் வெது வெதுப்பில்
கண்ணயர்ந்திருக்கும் புறா குஞ்சுகளுக்கும்
இந்த நாள்
இன்னும் ஒரு காணாத
கனவென
இருக்கக்கூடும்

டப் டப் டப்டப் டப் டப்
இன்றைய அதிகாலையின் முதல் பதிவு
பூமியின் தோலை கிழித்துப்பறக்கின்றன
நான்கு கால்கள் இரண்டு கால்கள்

பெட்ரோலைக் குடித்துப்
புகையைத் துப்பி
சற்றதிர்ந்து விழித்த
அதிகாலையின் முகத்தில்
கரியைப் பூசி
விரைகின்ற ஒரு காரியமாய்

தென்னையில் அமர்ந்திருந்த
குரங்கொன்று அதிர்ந்து
பட படத்து
கிளைக்குக் கிளை தாவ
காக்கைகள் பட படத்து
ஓலமிட்டு அலற

காயை காலை நீட்டி
கதை கதையாய்க் கதைத்து
நடக்கிறார்கள்
அஷ்ட கோணலாய்

கும்பல் கும்பலாய் நின்று
செய்கிறார்கள் சிரிப்பு வைத்தியம்
அணில் பிள்ளைகள்
தலை தெறிக்க ஓடுகின்றன
மறு கூடு தேடி

மது வாசனையும்
சிகரெட் புகையும்
ஊது வத்தி வாசனையும்
பரவ ஆரம்பிக்கிறது
தெருக்களில்

குப்பைத் தொட்டிக் கருகில்
குவிந்து கிடக்கின்றன
காலி மதுப்புட்டிகளும்
சுருட்டி மடக்கப்பட்ட
பேப்பர் பொட்டலங்களும்
தண்ணீர் பைகளும்
குரல் உயர்த்தாத தெருநாய்களும்

மற்றும் நைந்த துணிகளுக்குள்
நைந்த உடல்களும்
சற்று நேரத்திற்கெல்லாம்
கடவுள் வந்து விடுவார்
ஒரு உக்கிரக புன்னகையோடு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.