1. கடவுளே!

இந்த வாழ்க்கையை
இதயத்தில் ஏந்திக்கொள்வது இருக்கட்டும்
யார் யார் இதைச் சில்லறைக் காசு போல
சட்டைப் பையில் போட்டுக் கண்டு திரிகிறார்களோ
யார் கண்டது?

யார் இதை சிகரெட் துண்டைப் போல
புகைத்துக் கொண்டு அலைகிறார்களோ?

யார் மதுப் புட்டியைத் தீர்ப்பதற்கு
ஊறுகாயாக தொட்டுக் கொள்கிறார்களோ?

யார் உடல் இச்சையைத் தீர்ப்பதற்கு
இதை மாத்திரையாகப் பயன்படுத்துகிறார்களோ?

யார் தன் பால் ஈர்ப்புக்கு
இதை ஒரு சமிஞ்ஞையாக
அழைப்பு விடுக்கிறார்களோ ?

யார் பிணம் புதைக்கும் நேரத்தில்
இதை வாய்க்கரிசியாய்ப் பயன்படுத்துகிறார்களோ?

யார் பச்சைக் களிமண்ணைப் போல
இதை நீரில் கரைத்து விட்டு
நதியை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களோ
யார் கண்டது ?

2. நட்சத்திர மனது

ஒரு நட்சத்திரம் தான்
முதலில் கண்ணில் பட்டது
பிறகு நோக்க நோக்க
இந்த வானம்  என்பது
எண்ணற்ற நட்சத்திரங்களால்
உருவாக்கப்பட்டது என
அறிந்து கொண்டேன்

ஆனால் துளியூண்டு மனதுக்கு
அத்தனை நட்சத்திரங்களையும்
கூழாங்கற்களாகப் பொறுக்கி
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமென்று
அத்தனை ஆசை

அதே நேரம் எந்தத்  துளியூண்டு மனது
இந்த பேராசைக்கார மனதை
ஒரு சின்னஞ் சிறிய கல் துளியாக
இதயத்தில் ஏந்திக் கொள்ள
ஆசைபட்டுக் கொண்டிருக்கிறதோ
யார் கண்டது ?

3. கண்ணாடிக்குள் ஒரு பிம்பமென
முழுக்கோப்பையின்
ஒரு மிடறை உனதன்பிற்காக
பருகினேன்
ஆஹா அந்த
கருந் திராட்சை உதடுகள்
வாழ்க!

விரைந்தேகும் ஓவியன் போல
ஒவ்வொரு நாளும் நமது வாழ்வை
சித்திரமாகத் தீட்டிக் கொண்டேதான்
செல்கிறான்
காலதேவன்

வளம் கொழித்த இளமை
உன்னிடமிருந்து விடைபெற்றுச்
சென்று விட்டது
முதுமை ஒரு கொசுவலையைப் போல
உன் மீது கவிந்திருக்கிறது

கற்சிலை போல் விம்மியிருந்த
மதர்த்த மார்பு
தொய்ந்து ஊஞ்சலாட
கருங்குழற்கற்றை
தும்பைப்பூ போல
வெளுத்து கிடக்க
தூரத்தில் நடந்து வருவது நீ தானா ?

நானோ கேள்விக்குறியை
முதுகில் சுமந்தபடி
கருவறையின் குழந்தை போல
குறுகியபடியே போய் கொண்டிருக்கிறேன்

நம் உடலிருந்து மனது
தனியாக விலகிச் சென்று
முன்னே நடந்து கொண்டிருக்கிறது

இப்படித்தான் நாம்
பழையன கழிந்து
புதியன புகும்
இந்த பைத்தியகார உலகத்திற்குள்
சிற்றெறும்புகள் போல
ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறோம்

தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *