தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems) - Thanges Kavithaikal | உயிரை வதைத்திடும் ஒரு சொல் காலத்தை நீரூற்றுப் போல பீறிட்டெழச் செய்கிறது

தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems)

உயிரை வதைத்திடும்
ஒரு சொல்
காலத்தை நீரூற்றுப் போல
பீறிட்டெழச் செய்கிறது

ஒரு சிறுவனோ சிறுமியோ
இளைஞனோ யுவதியோ
மண்ணுக்கடியிலிருந்து
தாவரம் போல்
முளைத்தெழுகிறார்கள்

பாசி படர்ந்த குளத்தில்
பச்சை தவளைகள்
தங்கள் பங்கிற்கு
முட்டைக் கண்களை உருட்டியபடி
“க்ரக் க்ரக் ” என்ற சப்தம்
எழுப்புகின்றன

தண்ணீர்ப் பாம்புகள்
தலை தூக்கிப் பார்க்க
உறங்கும் மீன்கள்
செதில்களை அசைக்க
குளம் கொஞ்சம்
புரண்டு படுக்கிறது
அலைகள் மறுபடியும்
ரீங்காரம் செய்கின்றன

சுடுமணலில் விழுந்த
கெளுத்தி போல
இப்போது தன்னைத்தானே
சிராய்த்துக் கொண்டிருக்கிறது
அந்த வார்த்தை

மாம்சம் வார்த்தையாகித்
துடிக்கும் போது
தேவனாலும்
ஆகக் கூடிய காரியம் ஒன்றுமில்லை

பால்யமும் இளமையும் முதுமையும்
தண்ணீரில் வரையப்ட்ட சித்திரங்களாக
மிதந்து கொண்டிருக்கின்றன

உயிரின் நேசத்தை
கையளிக்க முடியாத
இதயங்கள்
வால் இழந்த பல்லிகள் போல
மெளனத்தின் இடுக்குகளில்
குமைந்து கிடக்கின்றன

உழன்று கொண்டிருக்கும்
மொழி மீது
உன்மத்தம் ஏறிப் படுத்திருக்கும் கருஞ்சாரை
இரையை எதிர்பார்த்தபடி
பிளவு பட்ட
இரட்டை நாக்கை நீட்டி நீட்டி
இஸ் இஸ் என
இரைச்சலிட்டுக் கொண்டிருக்கிறது

தங்கேஸ்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *