தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems): சாதியம் - சாதியை வருடமெல்லாம் தின்று கொழுத்தவனுக்கு அது இரத்தத்தில் உப்பாகப் படிந்திருக்கிறது

தங்கேஸ் கவிதைகள்

1♦ காட்சிகள்

முன்னிரவில் கொடிக்கயிற்றில் ஆடும் உடல்களை
வெறும் உடைகளே என்று சத்தியம் செய்தாலும்
நம்புவதற்கு கடினமாக இருக்கிறது

யானை ஒடித்துத் தின்ற ஈத்தைச் செடிகள் போல
நம் தெருக்களெங்கும் முறிந்து கிடக்கின்றன
மேயாத நினைவுகள்

பசுவைப் போல அசை போடும் மனதுதான்
ஆனால் ஒட்டகத்தைப்போல நிர்ப்பிவைத்திருக்கிறது
தன் ராட்சத வயிற்றினை

முகம் மறைக்கும் இருளில்
எட்டுக் கால் பூச்சிகள் போல ஊர்ந்து போகும் மனிதர்கள்
தாங்கள் பசிக்கு தங்களே இரையாவதே
இந்த நாளில் அதிகபட்ச சுவாரஸ்யம்

தெருவினை அழுத்தாமல் நடக்க எத்தனித்த ஒருவன்
தோல்வியுற்றதும்
எலும்புகளுக்கு தோல் போர்த்தப்பட்ட
பலவீனமானதொரு தெரு நாய்க்கு
ஒரு ரொட்டித் துண்டை வீசி எறிகிறான்

அதன் சொட்டும் உமிழ் நீரில்
அழிந்து கொண்டிருந்த உலகம்
சட்டென வாஞ்சை தழும்பி நிற்கும்
அதன் பளபளக்கும் கண்களுக்குள் போய்
மறுபடியும் சுழல ஆரம்பிக்கிறது

2♦ சாதியம்

தங்கேஸ் கவிதைகள் (Thanges Poems): சாதியம் - சாதியை வருடமெல்லாம் தின்று கொழுத்தவனுக்கு அது இரத்தத்தில் உப்பாகப் படிந்திருக்கிறது

சாதியை வருடமெல்லாம்
தின்று கொழுத்தவனுக்கு
அது இரத்தத்தில் உப்பாகப்
படிந்திருக்கிறது

நீரை அருந்தும் நீரைப் போல
அவன் நெடுங்காலமாகக் குருதியை
அருந்தி வருகிறான்

அரிவாளைக் கண்டு பிடித்தது
சாதிக்காகத்தான்
என்ற புளங்காகிதத்தில்
அலைகிறவனைக் கேட்டால்
ஆயுதம் ஏந்திய கைகளோடு தானே
இங்கே அருள் பாலிக்கிறார்கள்
கடவுள்கள் என்கிறான்

உழைப்பினைச் சுரண்டி
உண்டு கொழுப்பவனுக்கு
ஏதற்கடா இத்தனைப்

பட்டங்கள் என்றால்
அவன் பரமாத்துமமாக
ஆலயங்களைப் பார்த்துதான்
கைகளை நீட்டுகிறான்

இந்த தேசத்தில் தான்
ஒட்டுண்ணிகளெல்லாம்
உயர்ந்த இடத்தில் உள்ளன

உதட்டில் கண்டனங்களும்
உள்ளத்தில் புளகாங்கிதமும்
கொண்டு அலையும்
சாதி நடிகர்களை
கண் கொட்டாமல்
பார்த்துக் கொண்டுதானிருக்கிறான்
நியாண்டர்தல் மனிதன்

மனிதர்கள் மீது
மனிதர்கள் நின்று
கூம்பு வடிவமாக
உயர்ந்து போகும்
கோபுரத்தின் உச்சியின் மீது
அமர்ந்திருக்கும்
சாமியின் மீதும்
ஒருவன் ஏறி நிற்க முயற்சிப்பதுதானே
உங்கள் நவீன சனநாயகம்

எழுதியவர்:
தங்கேஸ்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *