கவிதை 1
எங்கள் குளிர் சாதனப் பெட்டியை
அவர்கள் திறந்து பார்க்கும் போது
கொஞ்சம் இறைச்சி துண்டுகள்
இல்லாதிருந்தாலே போதும்
அவர்கள் எங்களுக்கு
சுதந்திரத்தை
வாரி வழங்கும்  கனவான்களாக
மாறி விடுகிறார்கள்
மூச்சு விடுவதற்கு
சப்தம் எழுப்புவதற்கு
உடைகளை அணிவதற்கு
உடைகளை அவிழ்ப்பதற்கு
உறவு கொள்வதற்கு
சிரிப்பதற்கு அழுவதற்கு
சிந்திப்பதற்கு .
சளிப் பிடித்த மூக்கைச் சீந்துவதற்கு
அதற்கு இதற்கு
சமயங்களில்
அனுமதி பெற்று
அவர்களை எதிர்ப்பதற்கு


கவிதை 2
எதையுமே பார்க்க தோன்றாத போது தான்….
எதையுமே பார்க்கத் தோன்றாதபோதுதான்
காணக் கிடைக்கிறது
 உதிர்க்கப்பட்ட புள்ளியாக
பளீரிட்டுக்கொண்டிருக்கும்
உதிரும் நட்சத்திரம்
அரச மரத்திலை போல
கையகலகத்திற்கு  மனதிற்குள்
படர்ந்து கொண்டிருக்கும்
இருளின் கருமை
மகிழ்ச்சியான. சொற்களைப் போல
பூத்து பூத்துக் குலுங்கும்
எதிர் வீட்டுப் பன்னீர் மரம்
அடி வயிற்றில் பசி கடித்துக் குதற
ஆற்றாமையில் ஊளையிடும்
 தெரு நாய்
நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிக்குள்
நடமாடும்  பசியின்நிழல்
மற்றும்
கையாகாலாத் தனமாய்
வாசலில் உமிழும்
மின்சார பல்புகளையே  வெறித்தபடி
விழி உருட்டிக்  கொண்டு நிற்கும்
ஆஜானு பாகுவான மூலவர்  சிலைகள்


கவிதை 3
இரவில் கூடடையாத பறவைகள்
 தலைக்குள் வந்தடைகின்றன
பறவைகளின் சப்தமென்பதும்
அதன் அன்றாட அங்கலாய்ப்புகளின்றி
வேறேது?
வானம் எத்தனை பெரியதாய்
இருந்தால் என்ன
அங்கே உறங்குவதற்கு ஒரு கிளையில்லையே
சிறகுகள் தான் பறவையென்றாலும்
கால்கள்  தானே பறவையின் இருப்பு
உறங்குவது போல் தான்
சாக்காடு என்றா லும்
நினைத்தால் உறங்கிவிட முடிகிறதா
அல்லது செத்துவிடவாவது?
இருப்பில் தகிக்கும்
அலகுகளின் துயரத்தை
முழு நீளப் பாடலாய் பாட முடியாதென்றாலும்
கீச்சுக் குரல்களால் கத்தித் தீர்க்க முடிந்தால் போதாதா ?


கவிதை 4
பாதி இருளும் மீதி வெளிச்சமும் .
கண்ணாடி தம்ளரில்
பனித் துண்டுகளாய்
மிதக்கும் நேரம்
என் தனிமை முழுவதும்
பறவையின்  எச்சங்கள்
இந்த மொட்டை மாடி  சுவர்களில்
நிழல் உ ற்பத்தி  செய்கிறேன் நான்
ஒரு பறவையை ஒரு விலங்கை
 ஒரு  பெயரற்ற உயிரினத்தை
என் சாயலில்
உற்பத்தி செய்கிறேன்
என்னிலிருந்து பிரியும்
என்  நிழல்கள் சூன்யத்தில்
சுதந்திரம் பெற்ற
நீர்க்குமிழ்களாய்
அலைய
நிழலுற்பத்தி செய்பவன்
நடமாடும் நிழலாகிறான்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *