தேவதைகளும் பிசாசுகளும்
தேவதைகளின் குரலை விடவும் இனிமையானவை
பிசாசின் மொழிகள்
அலங்கார வார்த்தைகள்
பகட்டான சொற்றொடர்கள்
இவக்கண சுத்தம் என்று
தேவதைகள் உரையாடினாலும்
பாசாங்கில்லாமல்
 மனதில் பட்டதை
சுள்ளென்று உரைக்கும்
பிசாசுகளின் மொழி தானே யாவர்க்கும் பிடிக்கிறது
வெண் தூவிகள்
வானவிற்கள்
பட்டுடைகள்
இவைகள்இல்லாமல்
தரிசனம் தர
வெளியே வருவதில்லை
தேவதைகள்
பிசாசுகள் உங்களின் நிலையறிந்தவை
தெருமுனையிலோ
பெட்டிக்கடைகளிலோ
தேனீர் அருந்தியபடி  டீக்கடைகளிலோ நின்று
உங்களின் வருகையை
ஆவலோடு எதிர்பார்ப்பவை
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்
அவற்றிடம் உங்கள் இதயத்தை
திறந்து காட்டி
ஒண்டிக் கொள்ள
உனக்கொரு இடம்
இங்கேஇருக்கிறது
என்று காட்டுவது தான்
அல்லது உங்களின் கடவுளுக்குத் தெரியாமல்
நீண்ட நாள் காத்து வரும்
ஒரு குற்ற உணர்ச்சியை
சுட்டிக்காட்டி
இந்தா இதை உன் உணவாக எடுத்துக் கொள்
என்று சொல்வது அவ்வளவு தான்


கவிதை 2
உன்னை பார்த்ததும் என் இதயம்
எத்தனை வேகமாக துடிக்கிறதென்று
நீயே அங்கே
காதை வைத்துக் கேள் என்றாள்
நான் காதை வைத்துக் கேட்ட பின்பு
கேட்டாள்
என்ன கேட்டாய் தானே?
பொதுவாக முயல் குட்டிகளின் பாஷை
எனக்கு அவ்வளாக புரிவதில்லை என்றேன்
  தங்கேஸ்
  தமுஎகச
  தேனி


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *