தங்கேஸ் கவிதைகள்கவிதை 1
உன் விழிகளில்
இடமிருந்து வலமோடுகிறது
பால்யம் மாறாத குட்டி
 முயல் ஒன்று
பார்வையாலே ஈர முத்தமிட்டு
குதித்தோடச் சொல்லி
அனுப்பிவைக்கிறேன்
விரைந்து வரும் நதியொன்று
பாதையற்றுப்போன இடத்தில்
சுழன்று திரும்புகிறது
அருகிலிருக்கும்  துறையை நோக்கி
சேரும் இடம் தெரியாமல் ஆர்ப்பரிக்கும் கூச்சலில்
கரைகள் உருகுகின்றன
நதியின் துகளாவதற்கு
தரையில் செதில்கள் விரிக்கும்
கெண்டை மீனின்
இரத்த நிற
சதைக்கோளத்தில் நீ இருந்தாய்
ஒரு கணம்
கட்டவிழ்த்த களிறுகளாகக்
 கூடிக் குலவுகின்றன
கருமுகில்கள்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்
சூட்சுமமான நட்சத்திரம்
தகித்துக்கொண்டிருக்கிறது
தான் உருகுவதும் தெரியாமல்
இன்று  ஒரு பனை உயரம் அதீதமாய் வளரும்
கரும் இருளுக்குள் கருப்பிடித்து மிதக்கும்
சகல ஜீவராசிகளையும் போலவே
நானும் சிறுகருவாக மிதந்து
 துரும்பாக அலைகிறேன்
 வெட்ட வெளியில்
என் இடத்தைத் தேடி


கவிதை 2
ஒற்றைக் குடையின் கீழ் 
குருவிகள் கூடுகட்டிக்கொள்ளும்  விட்டங்களாக இருந்தன மனங்கள்
பன்றிகளின் வசிப்பிடங்களாக மாறுவதற்கும் முன்பு
நிணங்களைப் பொசுக்கும் கருணையற்ற தீயில்
விழுந்துவிட்ட வரலாறு
மொட மொடப்பான கருக்குத் தாளாகி
இன்னும் உதிராமல் நிற்கிறது
லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு
சிக்கி முக்கி கற்களின்  உரசலிலிருந்து பறந்த
சிறுபொறி தான்
வாயில்லா விட்டில்களை இரையாக்கும் தீக்கொழுந்தாக
இன்னும் மனதோரங்களில் நடனமிட்டுக்கொண்டிருக்கிறது
மோசஸின் பத்துக் கட்டளைகளும் சின்ன சின்ன கேப்சூல்களில்
அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்த பின்
அருள் வாக்குகளும் உபதேசங்களும் பூண்டு மாத்திரைகளும்
வந்தவண்ணமேயிருக்கின்றன
பூமிக் கூந்தலின் ஒரு பகுதி இன்னும் இரத்தத்தில்
தோய்ந்தபடி மிதந்து கொண்டிருக்கிறது
ஒற்றைக்குடையின் கீழ் எல்லோரும் வந்த பின்பும்
பக்கத்துவீட்டுக்காரனின் முகம் மட்டும் இன்னும்
பரிச்சயமாகவேயில்லை
 தங்கேஸ்
தமுஎகச
தேனி