கவிதை 1
வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்ட
எலி போல
இருளுக்குள் போய் ஒளிந்து கொண்டது
இந்த நாள்
விழுங்க மனதில்லாத குழந்தைகள்
விரல்களில் உருட்டி விளையாடும்
கசப்பு குடுவை மாத்திரை போல
என் பொழுதுகளை உருட்டி
விளையாடிக்கொண்டிருக்கிறான்
என் முதலாளி
அவனிடம்
தினம் தினம் சட்டை உரிக்கும் பாம்பு உரிக்காத நாட்களில்
தோலையே சட்டையாக உரிக்க வேண்டியதிருக்கிறது
இரண்டே இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு
என் வீட்டு வாசலில் எச்சில் வழிய குழையும் சிம்மி நாய்க்கு
என் மீது கொஞ்சம் நம்பிக்கை இருப்பது
அதன் கண்களில் தெரிகிறது
என் சதைகளை ரொட்டித் துண்டுகளென
சுரண்டிக் கொள்ளும் முதலாளியோ
நீ நம்ப முடியாத ஒநாய் என்கிறான்
சுறாவுக்கு தப்பி வரும் சிறிய மீன்கள்
கடைசியில் இரையாகிப் போவது
தன் பசிக்கே தானோ?
பொறிக்குள் அகப்பட்ட எலியின்
பிதுங்கும் கண்களில்
எங்களின்வாழ்க்கை
விஷம் தோய்க்கப்பட்ட
ஒரு சிறிய தேங்காய் சில்லாக
சிரிக்கிறது.
கவிதை 2
சாதியத்திமிரில் துடிக்கின்றன ஆயிரக்கணக்கான ஆண்குறிகள்
ஒரு ஏழைச்சிறுமியை ஒரு மூதாட்டியை சிதைத்துவிட
அப்பனின் விந்துவின் வழி கடத்திவரப்படும் ஆணவ
நோய்க்கிருமிகள்ஒவ்வொரு மண்டைக்குள்ளும்
இலவசமாக புகுந்து விடுகின்றன
பரம்பரை புளகாங்கிதத்தில்
பெயருக்கு பின்னே ஒரு சிங்கம் புலி சிறுத்தையோ
நாயோ ஓநாயோ என காட்டு மிருகங்கள்
ஒடோடிவந்து ஒட்டிக்கொள்ளும் இலவச இணைப்பாக
ஒட்டிக்கொண்டவைகள் மீசை என்பது
வெறும் மயிர்கற்றையையும் தாண்டிய
வேறு ஒரு பெருமிதம் என்று உரைக்க
வியர்வைகளை காமுறும் ஓநாய்கள் நிறைந்த தேசத்தில்
எங்கள் பெண்கள் தங்களின் நிழலின் உடைகளையும்
சரி செய்த வண்ணமே
நடந்து கொண்டிருப்பார்கள்
கவிதை3
தீபாவளி,,,
மனிதர்களை முந்திக்கொண்டு
உடல்களை வெடித்து
ஒரு வாரத்திற்கும் முன்பே
உள்ளே நுழைந்து விடுகிறது தீபாவளி,,,,
பல ஆடுகளுக்கு அஞ்சலி செய்து
பல கோழிகளுக்கு மஞ்சள் தடவி
பலப் பல ஊர்வன பறப்பனவற்றிற்கு
நீத்தார் கடன் செய்து
முடித்து நிமிரும் முன் பே
தூரத்தில் கேட்கும் ஒரு வெடிச்சத்தத்தில்
தொற்றிக்கொள்கிறது தீபாவளி,,
ஒரு வீட்டிற்கும் முன்பு
வளரும்
வண்ணத்தீற்றல்களில்
தன்னையே கொண்டாடி மகிழ்கிறது
தீபாவளி
விஷங்களை கக்கும் மனதினை மாற்றி
துரோகங்களை துயரங்களை
புகையினில் மறைத்து
பூந்தொட்டியில் மனங்களை அமிழ்த்தி
ஈசல் பூக்களை வாசலில் பரப்பி
கடந்து போகிறது தீபாவளி
ஆறுதலாய் வருடமெல்லாம் வந்தாலென்ன தீபாவளி
என எண்ணும் வேளையில்
வாசலில் கெஞ்சுகிறது சிறுவர்களின் குரல்கள்
நேற்று மீந்து போன கொஞ்சம் உணவுகளுக்கும்
வெடிக்காத பட்டாசுகளுக்கும்
தங்கேஸ்
தமுஎகச
தேனி மாவட்டம்

