கவிதை 1
சில சம்பவங்களின் தொகுப்பு
திறம்பட கொன்று முடித்துவிட்ட இரவை
ருசித்து ருசித்து உண்ண
இரகசியப் புற்று ஒன்றுக்குள்
இழுத்துக்செல்லுகின்றன
காலத்தை உண்ணும் சிற்றெறும்புகள்
சூன்யம் நிரம்பியிருக்கும்
திறவா மொட்டு ஒன்று
விடியா கருமையில் எறும்புப் புற்றாயிருக்கிறது
எறும்பு புற்றுக்குள்
பளபளக்கும் தன் நாவை சுழற்றியபடி
இரைக்காக
ஏற்கனவே காத்துக்கொண்டுதானிருக்கிறது
வெளிச்சமென்னும் எறும்புண்ணி
எறும்புண்ணிக்கு இரையாகும்
முட்டாள்தனத்தை சிறிதும் எண்ணாமல்
சாரை சாரையாகப் புற்றுக்குள் நுழைகின்றன
அறிவிலிகள்
தெளிவற்ற சிலகருப்பு வெள்ளை புகைப்படங்களை
தன் சிறகுகளில் ஏந்தியிருக்கும்
சிறு தட்டான் பூச்சி
இன்றெனும் ஒரு நாளை
மனிதர்களுக்கு அர்ப்பணிக்க
பறந்து செல்கிறது
சிலசம்பவங்களின் தொகுப்புகளாக மாறிவிட்ட
வாழ்க்கை என்னும் தொடரை பார்வையிட
தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்திருக்கிறோம்
நீங்களும் நானும்
கவிதை 2
உடல்களிலிருந்து எழும்பும் வாசனை
மலர்களிலிருந்து கிளர்வதைப் போன்று
அவ்வளவு மென்மையானதல்ல
சுய மயக்கத்தின் பிதற்றலைத் தாளாமல்
துள்ளும் மீனொன்று கொதிக்கும் கொப்பரைக்குள் பாய்ந்து
உயிரை மாய்த்துக் கொள்கிறது
கரையில் தூக்கி வீசப்பட்ட மற்றொன்றோ
கொத்தி தின்னும் ஒரு பறவையின் அலகை
பெயர் சொல்லி அழைத்து
வன் முத்தமிடுகிறது
அண்டங்களின் அச்சுக்களை
தன் உடலுக்குள் கண்டு அதிரும்
ஒரு சின்னஞ்சிறு பறவை
உடலுக்குள் ஒட்டாத ஒரு பேதை மனதை
சருகாகக் கவ்வி எடுத்துக் கொண்டுபோய்
தூரதூர தேசங்களில் தொலைத்து விட்டு வந்து விடுகிறது
தன்னை முற்றிலும் காலி செய்யும் பொருட்டு
தன் சின்னஞ் சிறிய சிறகுகளில்
மாபெரும் மின் சிலிர்ப்புகளை ஏந்தும்
அந்தச் சிறிய பறவையின் சிறகுகளிலிருந்தும்
எழும்பும் வாசனையோ
விண்ணையே நிறைத்து விடுகிறது
சமயத்தில்
விண்ணெங்கும் நிறைந்திருக்கும் வாசனையின் பித்தத்தில் தான்
தறிகெட்டுச் சுழல்கின்றன
பேரண்டங்கள்
–தங்கேஸ்

கவிதை 2 அருமை. மனதுக்கு இதம். தன்னைத் தொலைத்தாலும் விண்ணை மணத்தால் நிரப்பும் எண்ணம் அண்டமெங்கும் நிறையட்டும்.