இதயங்கள்…
இருளின் முலைக்காம்பை
சப்பியபடி
விழித்துக் கொண்டிருக்கும்
ஒற்றை நிலவை
பார்க்கச் சகிக்கவில்லை
எட்டினால் அப்படியே கையோடு
அழைத்துக் கொண்டு வந்துவிடலாம்
மடியில் அமர்த்திக்கொள்ள
இங்கே இப்படி
இருளில் கைவிடப்பட்ட
எத்தனை எத்தனை இதயங்கள் பரிதவித்துக் கொண்டு
இருக்கின்றனவோ யார் கண்டது?
மொழியில் துயரத்தை
இறக்கி வைக்க முடியாத மனிதன் தான்
அதைக் கவிதைகளில்
இறக்கி வைக்க முயற்சிக்கிறான்
அது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
அந்த துயரத்தைச் சுமந்து கொண்டு
ரத்தச் சிவப்பில் கன்றிப் போய் இருக்கிறது
கரையான் புற்றைச் சுற்றிலும்
நொண்டியடித்துக் கொண்டிருக்கும் ஈசல்களை ஒவ்வொன்றாக
பிடித்துத் தின்றபடியே இருக்கின்றன.
காட்டுப் பூச்சிகள்
எப்போதும் உலகத்திலேயே இயலாததொரு காரியம்
உட்கொண்டவற்றை செரிக்க முடியாமல்
சுமந்தலைவதாகத்தானே இருக்கிறது.

