புரிதல்
*********
உவப்பான செய்தியை
எதிர்பார்ப்பவர்களிடம் தான்
எப்போதும் வந்து சேர்கின்றன
கசப்பான செய்திகள்
நெடுநாள் பிரிந்திருந்த
நண்பனைச் சந்தித்தது போல
சட்டென்று வந்து நெஞ்சில்
ஒட்டிக் கொள்கிறது
சோகம்
பழுத்த சருகுகள் போலே
அவ்வளவு லாவகமாக
உதிர்கின்றன
கண்ணீர் துளிகள்
ஒரு சுவர்ப் பல்லியைப் போல
இவ்வளவு நேரம் காத்திருந்த
துக்கம்
சட்டென்று பாய்ந்து வந்து
எதிர்ப் பற்ற ஆன்மாவை
கவ்விச் சென்று கொண்டிருக்கிறது
கதைகளை விஞ்சும் திருப்பங்கள்
கொண்ட நிஜத்தை
வைத்த கண் வாங்காமல்
ஆற்றாமையில் பார்த்துக் கொண்டிருப்பதற்குப் பெயர் தான்
வாழ்க்கை என்று புரியும் முன்னரே
அது முடிந்து போய் விடுகிறது
பலருக்கு
புரியவில்லை
******************
ஒவ்வொரு குரல்கள்
பாசி படர்ந்த செங்குளத்தின்
தவளைக் கூச்சல்
இப்பொழுது சன்னமாக
தண்ணீர்ப் பாம்பின் தொண்டைக்குள்
பிஞ்சு முருங்கை இலைகளின்
அநாதை அலறல்கள்
இப்போது
அசை போடும் வெள்ளாடுகளின்
தாடைக்குள்
பயிராகி வளர்ந்து புரளும் காலத்தை
உண்டு கொழுக்கின்றன
வன் குரல்கள்
மேய்ப்பர் அழைக்கிறார்
தந்தையும் கூட.
தலைவர்கள் அழைக்கிறார்கள்
தொண்டர்கள்
அலுவலர்கள் ஊழியர்கள்
மனைவி குழந்தைகள்
செவிப்பறைகளில் விழுந்திருக்கும்
அத்தனைத் துளைகளுக்குள்ளும்
துப்பாக்கி ரவைகளாக புதைந்திருக்க
அழைக்கும் மில்லியன் குரல்களில்
உனது குரல் எது?
அலைகளின் கரங்கள் கிழித்தெறிந்த
படகுத் துகள்கள்
இந்த கடல் வீதி எங்கும் தேடி அலையும் முகவரி தான் யாது?

