நான் ஒரு எளிய கதை சொல்லி
உனக்கொரு சிறிய கதை சொல்வேன்
துயரத்தில் சாளரத்தில்
தென்படும்
மங்கலான முகம்
என்றும் உன் பார்வைக்குத் தெரியாது
@@@@@
கிணற்றுத் தவளை
இரவை சபிக்கும் கூக்குரலில்
பாம்புக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது
ஒரு சின்னஞ்சிறிய உயிரியால்
பெருங்கடலை குடித்து விட முடியுமா என்ன ?
ஒரு மனது ஒரு கடல் என்றால்
யார் நம்புவார்கள்?
விண்ணேகிப் போகும்
கடைசிப் பறவைகளுக்கு
என்ன கதியோ
அதுவே தான் உனக்கும் போ
கோல மாவில் வாசல் தெளித்தது போல
சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களை
கூட்டிப் பெருக்க
பெருமுயற்சி எடுத்து
தோற்றுக் கொண்டேயிருக்கும்
தென்னையின் கிளைகள்
நீண்டு நீண்டு
கடைசியில் தொடப் போவது
என்னவோ
உன் ஈரல் குலையைத்தான்
செக்கச் சிவந்து
கனன்று கொண்டிருக்கும்
காட்டுத் தீயில்
வேகும் உடலின்
ஊண் நெடி
எல்லை கடந்து வந்து
நாசியை நிறைக்க நிறைக்க
நீ ஒரு சின்னஞ்சிறிய
ஈசல் பூச்சியாகி
அலைந்து கொண்டேயிரு
மனமே
திக்கற்றவர்களுக்குத்
தெய்வம் துணையாக இருக்க
அந்த தெய்வத்திற்கே
நாம் துணையாக இருந்த காலம் தான்
இப்போது இந்த இருளை
விலாங்கு மீனைப் போல பிடித்து
நழுவ விட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறது
@@@@@
மொழியின் சிறகேறி
பறந்து போகிறது
கனத்த மவுனம்
ஒலிக் கூட்டைப் பிரிந்து போவது
உயிர் நீத்துப் போவது
போலத் தான் என்றாலும்
பிரியும் நேரம் வந்தால்
பிரிந்து தானே ஆக வேண்டும்
சின்னஞ்சிறு அலகு தாங்குமா
பூமியின் பாரத்தை
எல்லையற்ற பயணத்தில்
எங்கே நழுவ விடுகிறதோ
யாருக்குத் தெரியும்?
பெரும் வெடிப்பு நிகழலாம்
அல்லது பிரளயமே வரலாம்
பித்தனின் சடையில் விழுந்தாலும் சரி பெரும் கடலின்
மடியில் விழுந்தாலும் சரி
ஆயிரம் ஆண்டுகள்
அங்கேயே தான் கிடக்க வேண்டும்
காலம் நம்மை வந்து தீண்டாது
கடவுளின் மோனம் நம்மை
விட்டு அகலாது
கடைசியில்
ஒரு பெரிய மீனுக்கு
இல்லையென்றாலும்
சிறிய மீனுக்கு கூட அற்புதமானஉணவாகலாம்
கிடத்தலின் பெரும் சுகத்தை
சித்தன் அனுபவிக்கிறான்
நொண்டி அடித்துப் போகும்
இலைக் குருவி அனுபவிக்கிறது
நடமாடிக் கொண்டிருக்கும்
நம்மால் தானே
அனுபவிக்கவே முடியவில்லை.