தங்கேஸ் கவிதைகள் thangesh kavithaigal

தங்கேஸ் கவிதைகள்

பச்சை தவளை

ஒரு வார்த்தை பச்சை தவளை
கண்களை உருட்டிக்கொண்டு
விழிக்கிறது நமக்கிடையில்
அது சாத்தானுடையது என்றால்
நீ நம்ப மறுக்கிறாய்

கண்ணாடியில் எறியப்பட்ட கல்
புத்தனைப் போல
சாந்தமாக கிடக்கிறது
விரிசல் விழுந்த கண்ணாடிக்குள் தான்
விம்மல் சப்தம்

ஒரு சின்னஞ்சிறிய நிலவு தான்
இந்த வானத்தையே
மறக்கடிக்கின்றதென்றால்
அது எத்தனை வசீகரம் கொண்டதாக
இருக்க வேண்டும்
மறந்து போன வானத்தை
உனக்கு ஞாபகப்படுத்துகிறேன்
என்கிறதா அது ?

எல்லாவற்றிற்கும் காரணம்
அந்தப் பச்சை தவளைதான்
வா அதைப் பிடித்துப்போய்
குளத்தில் வீசுவோம்
அது இன்று நீர் பாம்புக்கு இரையாகட்டும்

கவிதை 2

வெண்புறாவின் சிறகில் மனது

பொழிவதற்கு ஆயத்தமாய் இருக்கும்
சூல் மேகத்தின் அடிவயிற்றில்
ஒளிந்திருக்கிறேன்
ஒரு புனல் துளியாக
ஒரு மலரினை முத்தமிடுவேனோ
ஒரு சிறகினில் ஈரப்பொட்டிடுவேனோ
அல்லது தகித்திருக்கும் செம்மண்ணில்
ஒரு நதியின் விதையாகி புதைவேனோ
யாருக்குத் தெரியும் ?

சற்று நேரத்தில் மொழியப்படும்
ஒரு இரகசிய கவியின்
ஒரு ஒற்றைச்சொல்லுக்குள்
பனிக்குடத்திற்குள் தழும்பும் சிசுவாக
காத்திருக்கிறேன் பிரசவத்திற்கு
எந்த தேசத்தில் பிறப்பெடுப்பேனோ
யார் கண்டது
பார்த்த கணம் ஒரு வெண்புறாவின் சிறகில்
தொற்றிக்கொண்டு பறந்து போகும்
ஒரு மனதை வைத்துக்கொண்டு
நான் என்ன செய்வது
நீயே சொல் சகி

கவிதை 3

ஒரு மாசற்ற புன்னகைக்கு
நான் உலகத்தையே
தந்துவிடுவேன்
ஆனால் அது என்னுடையதில்லை

நீ என்னுடைய பிரத்யேகமான
உலகத்தை கேட்டாலும்
காட்டுவதற்கு ஒன்றுமில்லை
வாசலில் பூத்துக் கிடக்கும்
கொத்து மஞ்சள் அரளிப் பூக்களும்
அதில் தேனெடுக்கும்
கருநீல தேன் சிட்டுக்களையும் தவிர

நான் நிலவை காட்ட நினைக்கலாம்தான்
ஆனால் நினைக்கும் போதே
அது
மேகத்திற்குள் மறைந்து விடும்
சரி ஒரு கள்ளமற்ற புன்னகையை
காட்சிப்படுத்தலாமென்றால்
அது ஒளியாண்டுகளுக்கும் அப்பால்
புதையுண்டு கிடக்கிறது

என் கடவுளோ உள்ளே வருவதும்
வெளியேறுவதுமாக
கண்ணாமூச்சி
ஆடிக்கொண்டிருக்கிறார்

வேண்டுமானால்
அதிகாலைப் பனித்துளியைப் போல
சற்றும் மாசடையாத
எனதிந்த நிகழ்காலத்தை
அப்படியே உன்னிடம்
தந்து விடலாம்
ஆனால் அதுவும் கூட
உன் நினைவில்
புனிதப்படுத்தப்பட்டது தான்

கவிதை 4

பிணைந்து கிடக்கும் சொற்களுக்குள்
உன் மூச்சுக்காற்றையே
அனுமதிக்க மறுக்கிறது மனது

பின்னிப் பின்னி இழையோட்டி
நெய்து முடிக்கப்பட்ட கவிதை
உன்னுடையதுதான் என்றாலும்
அதன் தாய்மை என்னிடம் தானே?

விரல் பிடித்து நடந்த காலங்களை நினைக்கையில்
ஒரு முழுவட்டமடித்து
இன்று பறக்கப்பழகிய பட்டாம் பூச்சியாய்
என் உள்ளங்கையில் உட்கார்ந்து கொண்டு
படபடக்கிறது பிரபஞ்சம்

காலம் மிகச்சிறிய நாய்க்குட்டியாகி
நானழைக்காமலே என் பின்னே
ஓடிவந்து கொண்டிருக்கிறது

இரைச்சலற்ற அருவியிலிருந்து மேலெழும்
நீராவிப்புகை வெளியெங்கும்
சித்திரம் தீட்டிக்கொண்டே மறைந்து போகும் நேரம்

சட்டென்று கண்களை மூடிக்கொள்கிறேன்

தங்கேஸ்
தமுஎகச
தேனி

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *