ஒரு துளி கண்ணீரில் ஒளிந்திருக்கிறது
இந்த அடர்த்தியான வாழ்க்கை
கருணை பொங்கும் கடவுள்கள்
நம் வாழ்க்கையைத் தேர்ந்த வாசகங்களால் எழுதிக் கொண்டே
செல்கிறார்கள்
எழுதியவற்றை முகநூலில் பதிவிட்டு விட்டு
நம்மை விருப்பக் குறியிட வைக்கிறார்கள்
“அற்புதம் தலைவா ”
எனக் கருத்திடப்
பணிக்கிறார்கள்
தொலைக்காட்சிகளில் தோன்றி
வாழ்வது எப்படி என்று
வகுப்பெடுக்கிறார்கள்
பற்பசை விளம்பரங்களில் தோன்றும்
தேவதைகள் கள்ளம் கபடமற்று
சிரிப்பது எப்படி என்று
பார்வையாளர்களுக்கு
கற்றுத் தருகிறார்கள்
இடுப்புக்கு கீழே தொங்கும்
செயற்கை இழை கூந்தலை
தந்தச் சீப்பினால் நீவி விடுகிறார்கள்
கை தட்டத் தோன்றுகிறது
ஆனால் அசைக்க முடியவில்லை
விலங்குகளால் பிணைக்கப்பட்டுக் கிடப்பதே
தெரியவில்லை நமக்கு
” அருமை கடவுள்களே”
எங்கள் கைவிலங்குகளைக்
கழற்றி விடுங்கள் என்று கத்துகிறோம்
“சாவி மேலிடத்தில் இருக்கிறது”
கூலிக் கடவுள்கள்
பதிலுரைக்கிறார்கள்
மேலிடத்தைப் பார்க்கிறோம்
தலைமைக் கடவுளரின்
பிரத்யேக அறையில்
இந்த பொன்னான வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன
“தூண்டில் முள்ளில் குத்தப்பட்டவையெல்லாம்
ஆசீர்வதிக்கப்பட்ட மீன்கள்
கடல் முழுவதும் சுதந்திரமாக
சுற்றினாலும்
கடைசியில் இங்கே வந்து
சேர்ந்து விடுங்கள்
என் அன்பான மீன்களே”
2.மழைப் பறவை
கையில் ஏந்தும் தருணம்
உயிர்ப் பறவை
ஒரு முறை சிலிர்த்து
சிறகுகளை உதறிக் கொள்கிறது
வெள்ளித் தாரகைகளைப்
பிடித்தபடி
மேலேறிச் செல்லும் ஞாபகங்கள்
பிடிமானமில்லாமல்
மறுபடியும் கீழேயே விழுகின்றன
ஒரு கணத்தில் பிரபஞ்சம்
படைக்கப் பட்ட
ரகசியத்தை அறிந்து கொண்டேன்
பெருங்கடலில் நீந்திய முதல் உயிரி
மனமாகத்தான் இருக்க வேண்டும்
அடைக்கப்பட்ட இரும்பு ஷட்டர்களுக்கு
வெளியே
தகரக் கூரையின் கீழ்
கொட்டக் கொட்ட
விழித்திருக்கும் குடும்பங்களோடு
சேர்ந்து நனைந்து கொண்டிருக்கும்
இந்த இராத்திரியும்
இனி உறங்கப்போவதில்லை
துயரத்தின் தாளாத சாட்சியாக
வீழ்ந்து கொண்டிருக்கும் மழையே !
தாயின் சேலையை
தலையோடு போர்த்திக் கொண்டு
பட்டாம் பூச்சியின் வெட வெடத்த
சிறகுகளைப் போல
இரு கரங்களையும் நீட்டி
உன்னை வாஞ்சையோடு ஏந்திக்கொண்டிருக்கும்
இந்த சின்னஞ் சிறு குழந்தையின்
எல்லையில்லாத அன்பிற்கு முன்
இன்று நீ தோற்றுக் கொண்டேயிருக்கப்போகிறாய்.
3
அந்தியின் ஒற்றை கரும்புள்ளியிலிருந்து தொடங்குகிறது
இந்த இரவு
ஒரு மைனாவோ
கரிச்சானோ
அரூப ஓவியமாகிக் கொண்டிருக்கும் கடைசி காகமோ
சிறகினை உதறி
தொடங்கிவைக்கிறது
இருள் ஓவியத்தை
மணிகள் சிதறிக்கிடக்கும்
கோதுமை வயலாக மாறிவிடும்
எல்லையற்ற மகோன்னதத்தில்
விரிந்து செல்லும் வானம்
விரிந்த சிறகுகளுக்குள்
இளம்பச்சை முட்டைகளை
அடைகாத்துக்கொண்டிருக்கும்
இந்த தென்னை
சற்று நேரத்தில்
கறுத்த ரப்பரில் அழித்து அழித்து
வரைந்த
பென்சில் ஒவியமாக காத்துக்கொண்டிருக்கிறது
துயரத்தின் சாயல் படிந்த கடிகாரங்களாகத் துடிக்கும்
மனசாட்சிகளை இனி
யாராலும் நிறுத்த முடியாது
நட்டநடுநிசிக்கும் பிறகு
அரிதாரம் பூசாத
சாதுவான விலங்கு ஒன்று
வாலை சுருட்டிக் கொண்டு
குறட்டை விட்டு தூங்கிகொண்டிருக்கும்
4
கொலுசுகள் சப்திக்க
நடந்து போகும் காலம்
கொலுசுகள் சப்திக்க இந்த தெருவில்
நடந்து போகும் காலத்தை தரிசிப்பது
ஒரு கிளையிலிருந்து பிரிந்து விழும்
மஞ்சள் அரளிப்பூவை பார்ப்பது போல
அத்தனை எளிதானதல்ல
ஒரு விண்மீண் இன்று உதிர்ந்து விடுமென
காத்திருப்பது
இந்த நினைவு இன்றே உதிர்ந்து விடுமென
காத்திருப்பதைப்போல
அத்தனை முட்டாள்தனமானதல்ல
சூரியனில் விழுந்து தகித்து மீளும் மனிதனும்
மெழுகுவர்த்தியில் தன்னை சிதைத்துக்கொள்ளும்
விட்டில் பூச்சியும்
ஒன்றானவர்களல்ல
இந்த காற்றில் திசை தொலைந்து போகும்
பட்டாம்பூச்சியின் துயரம்
என்றென்றும் திரும்பமுடியாத படி
சூன்யத்தில் விழுந்து விட்ட
ஒற்றைச்சிறகினுடையதைப் போல
அத்தனை வலிமையானதல்ல
–தங்கேஸ்
ReplyForward
|