இமைக்காமலிரு போதும்
விழிகளில் தளும்பும் நிலவை
நான் பிரதி எடுத்துக்கொள்கிறேன்
ஒரு பறவையைப் போல
கொழு முகில்கள்
உன்னை அடையாளம்
கண்டு கொள்கின்றன
தாழப்பறப்பதும் உனக்கு
கை காட்டுவதற்கோ?
உருட்டி விழிக்காதே
கொட்டி கவிழ்ந்த நட்சத்திரங்கள்
விழியிலிருந்து உருண்டோடிவிடும்
வினோதங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன
இதோ நீ வருகிறாய்
செம்பருத்தி மொட்டொன்று
கோழி குஞ்சு போல் தலை நீட்டிப் பார்க்கிறது
நரம்புகள் தந்திக்கம்பங்கள் போல
அதிர ஆரம்பித்து விட்டன
உன் விழிகள் சமிக்ஞை அனுப்பஆரம்பித்து விட்டனவல்லவா?
நீந்திப் போகும் மேகங்களில்
எந்த மேகம் மழையாகப் போகிறதோ
உன் மீது
உன் அட்சதை தூவ
பனி சூழ்ந்த இந்த இரவில்
நான் போர்த்திக் கொள்ள துகிலாகியிருப்பது
உன் நினைவுகள் மட்டும் தான்

