கவிதை 1
புன்னகைக்கும் பின்னால்
புன்னகைத்து நிற்கிறது
துரோகம்
நடுங்கிக்கொண்டிருக்கிறது
உதிரும் நட்சத்திரமொன்று
மனதில்
லார்வைவை தின்று
சிறகு விரித்தது பட்டாம்பூச்சி விடிகாலை
சாம்பல்காட்டில் புரண்டு
எழுந்து விட்டது
நிலவு
மழை நாட்களில் காணமல் போகிறவர்கள்
குட்டி குட்டி வட்டஇரவுகள்
தலைக்கு மேல்
நீந்திப்போகும் வேளையில்
அயிரை மீன்கள்
துள்ளி விளையாடுகின்றன
தெருவெங்கும்
மனதில் ஒரு நதி உருவாக
கசியும் சிறு நினைவுகளே
போதும்
மழைநாட்களில்
வாலை இழுத்து பின்னங்கால்களுக்குள்
திணித்தபடி
குளிரில் விறைத்துக் கொண்டிருக்கும்
தெரு நாய்க்கு
அன்றாட குரைப்புக்கும்
இரை கிடைக்கப்போவதில்ல
எல்லாக் கதவுகளும்
அடை பட்டுக்கிடக்கும்
இந்த மழை நாளில்
குப்பைத்தொட்டிக்கு அருகில்
விழுந்து கிடக்கும்
கல் பொறுக்கி
எங்கே போய் தொலைந்தானோ
இந்த விடாமழையில்
மனநிலை சரியில்லாத நோயாளியாக
பிதற்றிக் கொண்டிருக்கும்
பின்னிரவு தூறல்களிலிருந்து
எப்படித் தான்
எனக்கு மட்டும்கேட்கிறதோ
இதே போன்ற ஒரு மழை நாளில்
உறவற்ற
வாழ்விலிருந்த திடீரென்று
காணாமல் போய் விட்ட
முத்தமம்மாவின் பிதற்றல்களும்
அவளை தேடி தேடி
சாகும் வரை ‘சிம்மி நாய்
இட்ட ஊளைகளும்
கவிதை 2
நான் என்னோடு பேசிக்கொள்வேன்
மூன்றாம் நபர் போல் என்னையே உரசிக்கொள்வேன்
காதுகள் விடைக்க முயல் குட்டியாகி
இந்த அடர்வனமெங்கும் அலைவேன்
பனித்துளிகளைத்தேடி
சரம் சரமாய் காற்றில் பிரிந்து போகும்
சுவாசங்களை காயப்போட்டு
அழகு பார்ப்பேன்
நினைவுகளில் லயித்து
பெய்யும் மழையில்
கூடு விட்டு கூடு பாய்ந்து
தரையில் புரண்டு பித்தம் கொண்டு
நீர்க்குமிழிகளாகி
விண்ணேகுவேன்
வேறு ஒன்றாக
இன்னும் கண்திறக்காத செம்பருத்தி மொட்டிற்கு
ஒரு முத்தம் தந்து விட்டு நகர்கையில்
ஞாபகம் வந்தவனாக
மஞ்சள் அரளி மரத்தண்டில்
நிறம் மாறிக்கொண்டிருக்கும் பச்சோந்தியை
ஒரு பச்சை இலையால் தடவி
வீதியில் இறங்கி நடப்பேன்
என் பொழுதுகள் உன் பொழுதுகள் என்றும்
என் நினைவுகள் உன் நினைவுகள் என்றும்
என் சுவாசங்கள் உன் சுவாசங்கள் என்றும்
இன்னும் பிரிக்கப்படாத என் நான்
உன் நான் என்றும்
அர்த்த நாரியாய் உன்னை சுமந்து கொண்டு நடக்கையில்
எதிர்படுவோர் விலகுவார்
சிறு புன்னகையோடு
சிறிது காற்றிலேறி சிறகு விரித்து
உன்மத்தத்தோடு உன்னை சுமந்து செல்கிறேன்
இறகில் ஒளித்து
யாருமற்ற இரகசிய வெளியொன்றில்
உன்னை ரூபமாய் சந்திக்க
தங்கேஸ்
