கவிதை 1
உள்ளங்கை அளவு அன்பை
சேமிக்க முடிந்தால்
கூடப் போதும்
வறண்ட உதடுகளில்
ஒரு ஆதிமுத்தம்
உயிர்த்தெழுந்து விடும்
ஊழிக்கூத்திடும் காலத்தின் மீது
நாம் சில கருணை மழைத்துளிகளை
தூவி விட இயலும்
குறைந்தது
குழந்தையின் உள்ளங்கை அளவு
அன்பை சேமிக்க முடிந்தால்
கூட போதும்
வாழ்வின் சாபம் என்பது
மீட்சிமை பெற்றுவிடும்
கவிதை 2
எழுத வேண்டியதில்லை
நினைத்தாலே போதும்
அந்தப் பறவை சிறகடித்துவிடும்
இறந்து கொண்டிருக்கும்
ஒரு கணத்தை
உயிர்பித்துக்கொண்டிருக்கும்
சிறகடிப்பை
எந்தக் கலையில் நீ சிறைவைப்பாய்?
கவிதை 3
ஒரு முள்ளைப்போல
தனிமை கீறும் இடங்களில் துளிர்ப்பது
குருதியின் சிறு துளி அல்ல
வலியின் பெருங்கடல்
கவிதை 4
நினைவுகளின் கடைசி ஏணிப்படியில்
நான் ஏறி நின்ற போது
இரவு விடிந்திருந்தது
கவிதை 5
இந்த நிலவு தானே
அங்கேயும் இப்போது
அது உன் கழுத்துக்கு இடதுபுறமா
வலது புறமா என்று
கொஞ்சம் பார்த்துச் சொல்
கவிதை 6
இந்த தனிமையின் சுரத்தை
தாண்டுவதற்குள்
எத்தனை கடும் கோடைகளையும்
எத்தனை கொடும் காடுகளையும்
தாண்டி வர வேண்டியதிருக்கிறது
கவிதை 7
ஒரு மணிக்கு 3600 விநாடிகள் என்பதை
நீ அருகில் இல்லாத
இந்த இரவில் தான்
கண்டு கொள்கிறேன்

