1
*ஒரு ஊர்ல
ஒரு காடு இருந்தது
அதில் ஒரு சிங்கம்
ராஜாவாக தன்னை
முடி சூட்டிக்கொண்டது
அதற்குப் பிறகு அதன் குட்டி
பிறகு அந்த குட்டியின் குட்டி
இப்படி குட்டி வாரிசுகளாகவே
பரம்பரையாக
அந்த காட்டை ஆள ஆரம்பித்தன
அதற்கு சிங்கமாடல் ஆட்சியென்று
பெயர் சூட்டப்பட்டு
விழாவும் எடுக்கப்படுகிறது
ஆனால் அதே காட்டில்
மான்கள் என்னவோ
அதே பயத்துடன் தான்
குட்டையில் இறங்கி
நீர் அருந்துகின்றன
இன்னமும்
2
*ஒரு முறை தான்
ஒரே ஒரு முறைதான்
உன்னைத் தழுவ
காற்றுக்கு அனுமதி
3
*உன்னைப் பற்றி ஆரம்பித்த
எல்லாக் கவிதைகளும்
கடைசியில் நிலவில் போய்த்தான் முடிகின்றன
4
*சர்வ சுதந்திரமாக
துள்ளிக் குதித்த படி
என் கனவில் வரும்
அத்தனை முயல்குட்டிகளுக்கும்
அசல்
உன் சாயல் தான்
5
*பொன்னி அரிசி போல
வழுக்கி கொண்டோடும்
அயிரைமீன்களை
கை நிறைய எத்தனை முறை
அள்ளினாலும்
எனக்கு உன் ஞாபகம் தான் வரும்