
டாக்டர் பாஸ்டஸ்
வேப்ப மரத்தடியில் நிற்கும் சாத்தான்
இருகரங்களையும் விரித்து அழைக்கிறான்
அவன் கடவுள் அளவு மோசமில்லை
சாத்தான் சாதி பார்ப்பதில்லை
மதம் பார்ப்பதில்லை
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கின்றதோ அதுவும் நன்றாகவே
போதும் நிறுத்துங்கள்
காதில் இரத்தம் கசிகிறது
வறியார்க்கு ஒன்று ஈவதே
பத்தாக பிடுங்கி கொள்வதற்குத்தானோ?

தனிமைச்சிறையின் கூரிய கம்பிகள்
குத்திக்கிழிக்கின்றன நம் இருத்தலை
மனிதத்தை தேடி துக்கித்தலையும் இதயங்கள்
மௌனித்து விழுகின்றன கேட்பாரற்ற வீதிகளில்
தொற்றுக்கிருமிகளை விடவும் துயரம் தரும்
தனிமைப்படுத்தலில் தவிக்கும்
விம்மும் மனது கேட்கிறது
சாதியின் பெயரால் மதத்தின் பெயரால்
அவர்களைத் தனிமைப்படுத்திய
லெமூரியா கண்டத்து மனிதா
உன் மனசாட்சியை கிள்ளிப்பார்த்துக் கொள்
கீழடியில் முதுமக்கள் தாழிக்குள்
கைகளைக் கோர்த்தபடி
தனிமைப்படுத்தப்பட்ட எலும்புக்கூடுகள்
உன் மூதாதையர்களின்
மூதாதையர்களின்
ஆமா எலும்புக்கூடுகளுக்கு
சாதி இல்லை தானே ?

நாவுக்கரசரே என்னதான் பதிகம் பாடினாலும்
கொரானாவிலிருந்து நீர் தப்ப முடியாது
போலிருக்கிறதே
நான் எந்த கொரானாவைச் சொல்கிறேன் என்று
நீர் புரிந்து கொள்வீர்தானே புத்திசாலி
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசுதென்றலும் வீங்கிள வேனிலும்
மாசுவண்டறை பொய்கையும் போன்றதே
அடடா ஒரு கருப்பாடு போல்
குறுக்கவும் மறுக்கவும் துள்ளி விளையாடுகிறதே
கயமைகளைச் சுமக்கும் பொழுது
நீண்ட கைப்பிடி கொண்ட குவளை நிறைய
தழுதளும்பியிருக்கும்
அடர் சிவப்புநிற திரவத்தை
அருந்தி முடித்தபின்
பழரசம் பிரமாதம் என்கிறான்
கார்ப்பரேட் முதலாளி
திரவம் சொல்கிறது
நான் அப்பாவி மனிதர்களின்
குருதி குருதி
4
வாசலில் நிற்கும் பன்னீர் மரத்தை
மொய்த்துச் செல்லும்
நூறுவிழிகளில்
ஒன்றும் அகல விரியவில்லை
மேன்மையான உடையணிந்து
கடந்து செல்லும் கனவான்
ஒரு பார்வையிலேயே கணக்கிட்டு விடுகிறான்
அடடா அத்தனையையும்
அழகாக சந்தைப்படுத்தினால்
ஒரே நாளில் பல்லாயிரங்கள்

அலகுகள்
இரவு விழுதுகளை பற்றிக்கொண்டு
விண்ணேகும் இரவுப்பயணம்
உதட்டில் இரத்தச் சிவப்பையும்
பற்களில் பச்சை மாமிச வாடையுமாக
யட்சியின்பேருருவை நேரில் கண்டதும்
தானாகப் பிடியை விடுகின்றன
பட்சியின் அலகுகள்
தூண்டிலைக் கவ்விய அலகுகளுக்கு
இனி தண்ணீர் சொந்தமில்லை
சுடும் மணலில் துள்ளும்
அப்பழுக்கற்ற உடலைப் பார்க்கப் பார்க்க
எச்சிலூறி சுவைக்கின்றன கொக்குகளின் அலகுகள்
கொத்திக் கொத்தி எடுத்து வந்த சுள்ளிகளின் மேல்
வைக்கோல் பரப்பி வனைந்த கூட்டை
விளையாட்டாகப் பிய்த்து எறிந்து விட்டு
சலனமற்று அமர்ந்திருக்கும் குரங்கைப் பார்க்கும் போது
குத்திய முட்களின் வலியில் தெறிக்கின்றன
குருவியின் அலகுகள்
குத்திக்கொண்ட போதும் வலிக்கவில்லை
படிகளேறியபோதும் வலிக்கவில்லை
ஆனால் அப்பா போன அன்று வலித்தது
குத்திய இடங்களெல்லாம் அலகுகள்
காலுக்குச் செருப்பற்றவர்கள்
வெய்யிலோடு பூண்டிருப்பது
வெறுக்கத்தக்க விரோதமல்ல
கொஞ்சம் கசப்பு கலந்த கட்டங் காப்பியின் துவர்ப்பு
ஒரு குடையின் கீழ்
அறுந்த செருப்புகளைத்
தைத்துக் கொண்டிருப்பவனுக்கு
ஒரு குடையின் கீழ் அரசாளும் கனவு
அவ்வப்போதுஇடைஞ்சல் தந்தாலும்
வாழ்க்கையோடு எந்தப் பிணக்குமில்லை
தெருமுக்கில் பெட்டிக்கடை வைத்திருக்கும் மணவாளனுக்கு
தினமும் பத்துப் பாடை பார்த்த பின்னும்
ஆழ்ந்ததூக்கத்தின் மீது அத்தனை விரக்தியுமில்லை
வார்த்தை கவசம் பூண்டு
சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்
ஒரு அலுவலக ஊழியனான எனக்கு
ஏனோ பார்ப்பவர் மீதெல்லாம்
இனம் புரியாத கோபம்
என் மகள் மீதும் கூட
ஒரு சின்னஞ் சிறிய சாக்லெட்டிற்கே
பெரும் அழுகையை நிறுத்தி
அவள் சமாதானமாகி விடும் போது கூட அல்ல
ஆனால் எதன் பொருட்டு அவள் அவ்வளவு சீக்கிரம்
சமாதானமானாள்
என்பதன் பொருட்டே
தங்கேஸ்

