“ஆற்றோடு” சிறுகதை
நிறை மாதச் சூலி போல அலுங்காமல் குலுங்காமல் ஓடிக் கொண்டிருக்கும் முல்லைப் பெரியாற்றின் மீது மல்லிகாவின் நெஞ்சில் அலாதியான பிரியம் அப்போது எழுந்தது. இதற்கு முன்பு எப்போதாவது இந்த ஆற்றின் மீது இவ்வளவு பிரியம் அவளுக்கு ஏற்பட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தாள். எதுவும் தோன்றவில்லை. சுற்றும் முற்றும் பார்வையைச் செலுத்தி கரையைப் பார்த்தாள். சரவணன் கண்ணில் தட்டுப்படவில்லை. மீண்டும் ஒரு முறை ஒரு முழுத் தாமரைப் பூவைப்போல ஆற்றுக்குள் மூழ்கி எழுந்தாள். இது எத்தனையாவது முழுக்கு என்று கணக்கு எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒவ்வொரு முறை மூழ்கி எழும் போதும் இன்னொரு முறை மூழ்கினால் என்னவென்று அவளுக்குத் தோன்றியது. அப்படியே தண்ணீரோடு தண்ணீராக கரைந்து போய் விட்டால் கூட நல்லது தான் என்றும் அவள் நினைத்தாள் . நேரம் போகப் போக ஆற்றின் சூட்சும உடல் வெது வெதுப்பான ஒரு முரட்டு உருவமாக மாறுவது அவளது புலன்களுக்குத் தட்டுப்பட்டது. ஆறு ஆணின் உருக் கொண்டு ஓடுவதாக அவள் நினைத்துக் கொண்டாள். அது ஆணைப்போலவே ஆதி அந்தமாக அவளைத் தழுவியபடியே தான் ஓடிக் கொண்டிருந்தது.
சிறு வயதிலிருந்தே இந்த முல்லைப் பெரியாறு இவளது வாழ்க்கையோடு ஒட்டி உறவாடி சக மனிதர்களைப் போல உடன் வந்து கொண்டிருக்கிறது . ஊருக்கு மேற்கே சற்றுத் தள்ளி சிவகாமி அம்மன் உடனுறை பூலா நந்தீஸ்வரர் கோவிலும், அதற்கும் தெற்கே சிறிது தொலைவில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலும் அடுத்தடுத்து இரட்டைக் கோவில்களாக அமைந்துள்ளன. அங்கிருந்து மேற்கே நாலு எட்டு வைத்தால் போதும், இந்த இரண்டு கோவில்களையும் பார்த்து ஓடி வருவதைப் போல, முல்லைப் பெரியாறு வருடமெல்லாம் வற்றாமல் ஓடி வந்து கொண்டிருக்கிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்கும் நாட்களில், இந்தப் பெரியாற்றிலும் பெரிய திருவிழாவாக எடுப்பார்கள். கரையெல்லாம் பூஜைப் பொருட்களும், சாமிகளின் உடுப்புகளை வைத்திருக்கும் டிரங்குப் பெட்டிகளும் , துலக்கி வைக்கப்பட்ட சுவாமிகளின் விக்கிரகங்களும் நிறைந்திருக்கும். அளவான குதிரைப் பல்லக்கில் வந்து பெருமாள் ஆற்றில் இறங்குவார். அதே நேரம் பெரிய கோவிலில் சிவாகாமி அம்மனுக்கும், பூலா நந்தீஸ்வரருக்கும் மிகவும் விமரிசையாகத் திருமணம் நடக்கும் . இவள் சிறுபிள்ளையாக இருக்கும் போது, இந்தத் திருவிழாவுக்கு வந்தால், பெரிய பலூன்களும், ஊதும் பீப்பியும், வண்ணக்காகிதம் சுற்றப்பட்ட காற்றாடியும், செப்பு விளையாட்டுச்சாமான்களும் கை நிறைய வாங்கிக் கொண்டு தான் வீட்டுக்குப் போவாள். சற்று வளர்ந்து பெரியவளான பிறகு அம்மாவோடு வண்ணான் படித்துறைக்கு பெரிய பெரிய அழுக்குத் துணி மூட்டைகளோடு வந்து, நன்றாகத் துவைத்து கரையில் இருக்கும் நாணல் செடி மேடுகளில் காயப்போட்டு, உலர்த்தி எடுத்து, பெரிய மூட்டையாக கட்டி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போவாள்.
இந்த ஆற்றின் ஓரத்தில் அமைந்திருக்கும் ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு சம்பிரதாயத்திற்கென்றும் தனித்தனியாகப் படித்துறைகள் உண்டு. துணி துவைக்க ’ வண்ணாம் படித்துறை ’ , கோவில் கும்பிட’ சாமி படித்துறை , நீச்சல் அடிக்க ’ குளிப்புத்துறை , ’ பெண்கள் குளிக்க ’ பெண்கள் படித்துறை ’ அது போல ஆண்கள் குளிக்க ’ ஆம்பளைக படித்துறை ’ என்று பல படித்துறைகள் உண்டு . நீத்தார் கடன் செய்வதற்கு மட்டும் , ஊருக்கு முன்னால் கொள்ளத் தொலைவு இருக்கும் அரச மரத்துக்கடியில் ’ நீத்தார் படித்துறை ஒன்றை அந்தக் காலத்திலேயே ’ பெரியவர்கள் அமைத்து வைத்திருக்கிறார்கள் . பெண்களும் குழந்தைகளும் அனாவசியமாக எதற்காவது அந்தப் பக்கம் போக மாட்டார்கள் . இந்த ஆற்றில் ஒவ்வொரு துறையிலும் உருண்டோடும் தண்ணிருக்கு கூட இந்த ஆற்றில் ஒவ்வொரு நிறம் உண்டு. தனித்தனியான வாசம் உண்டு . தனித் தனி குளுமையும் உண்டு. இந்த ஆற்றைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் சொல்வதற்கு ஒவ்வொரு கதை இருக்கிறது .
சிறு வயதில் இவள் அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு , வெற்றிலை போட்டுச் சிவந்த அவளது அழகான வாயையே கதைக்காக கிளிக்குஞ்சு போல பார்த்துக் கொண்டிருப்பாள். அம்மா எப்போதும் இவளிடம் ஒரே ஒரு கதையைத் தான் திரும்ப திரும்ப சொல்லுவாள். “ ஒரு ஊர்ல ஒரு ராசா இருந்தாராம் , ரொம்பப் பேரு பெத்த ராசா. திடீர்னு அவருக்கு ஒரு மானாங்கனியான ஆசை மனசுக்குள்ள வந்துருச்சு “
“அது என்ன ஆசைம்மா ?”
” சொல்றேண்டி, அவருக்கு அந்த தேசத்துலயே ரொம்ப நீளமான தலை முடி கொண்ட, ஒரு அழகான கன்னிப் பொண்ணைப் பார்த்து கல்யாணம் செஞ்சிக்கிரனும்னு ஒரு ஆசை ‘மல்லிகா அதற்குப் பிறகு கண் கொட்டாமல் அம்மாவின் வாய் அசைவதையே பார்த்துக் கொண்டிருப்பாள். கை யதேச்சையாக அவளது தலை முடியை தொட்டு இழுத்து நீளம் பார்க்கும். அம்மாவும் தன் பங்கிற்கு இவளது தலை முடியை இழுத்து ஆசையாகத் தடவிக் கொடுப்பாள். கொஞ்ச நேரத்தில் கருப்பு ரிப்பனை அவிழ்த்து விரல்களாலேயே இவளது முடியைக் கோதி விட ஆரம்பிப்பாள். உடனே இருட்டுக்குள்ளிருந்து உதிக்கும் நிலவு போல அம்மாவிடமிருந்து சன்னமான குரலில் பாட்டு பிறந்து விடும்.
‘ கூந்தல் அழகா ! ஏய் கொமரிப் பொண்ணு பேரழகா !
ஏய் மேகம் எறங்கி வந்து இவ தோளுக்கு சடையா கிடக்கா ? ’
அம்மாவின் கை நல்ல வளர்த்தியாக இருக்கும் , நாளெல்லாம் வயல்களில் வேலை செய்வதால் , விரல்களெல்லாம் காய்ப்பு காய்தது நல்ல திரட்சியாக மரச்சீப்பு போல வெடிப்பாக இருக்கும்.
” ஏம்மா ராசாவுக்கு பொண்ணு கெடச்சதா இல்லையா ? ,”
” பொண்ணு கெடைக்கலைடி , ஆனா வேற ஒரு பட்டம் தான் கிடைச்சது. ”
” என்ன பட்டம் அது ?”
” போற போக்கை பார்த்துட்டு , சனங்க கொஞ்சம் கொஞ்சமா அவரை கிறுக்கு ராசான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாகளாம் ”
” ஏன் ? ”
” பெறகென்ன ? எந்தப் பொம்பளையைப் பார்த்தாலும் அவருக்கு திருப்தியாகமாட்டேங்குது . முடியை அவுத்து விட்டா குதிங்காலு வரைக்கும் புரளுற பொண்ணைக் கூட அவருக்கு பிடிக்காம போயிருச்சாம் .”
” ஏன் ?”
‘ முடி நீளமா இருந்தாலும் பொண்ணு லட்சணமா அழகா இல்லையாம் ,
“ அப்பெறகு ? “
“ கடைசியில இது சரிப்பட்டு வராதுன்னு அவரே ஊர் ஊரா போயி பொண்ணு தேட ஆரம்பிச்சிட்டாராம் . அதாவது அரண்மனையை விட்டுட்டு போய், ஊர் ஊரா , அலைஞ்சு திரிஞ்சாராம். ஆனா எந்தப் பொண்ணுமே கடைசி வரைக்கும் அவரு மனசுக்குப் புடிக்கலை . ஒரு நாளு மந்திரிப் பிரதானிகள்ளாம் மொத்தமாக வந்து , அவருகிட்ட எவ்வளவோ கெஞ்சிக் கெதறி அரண்மனைக்கு கூப்பிட்டுப் பார்த்துருக்காக , ஆனா அவரு வந்தா பொண்ணோட தான் வருவேன் இல்லேன்னா , அரண்மனைக்குத் திரும்பி வரமாட்டேனுட்ராம். . சரி தான் நம்ம ராசாவுக்கு கிறுக்குப் புடிச்சுப் போச்சு , நாமளாவது போயி நிர்வாகத்தை பார்த்துக்கிடலாம்னு எல்லோரும் திரும்பி ஊரைப்பார்த்து போயிட்டாகளாம். ஆனா ராசா மட்டும் , அவரு மனசுக்குப் புடிச்ச பொண்ணை இன்னும் வலை போட்டு தேடிக்கிட்டே இருக்காராம் ”
” என்னது ? ”
” தேடுறாரு தேடுறாரு தேடிக்கிட்டே இருக்காரு ”
” இன்னமா ? ”
” ஆமாடி இன்னம் தான் , நீ கூட பார்க்கிறதுக்கு ரொம்ப லட்சணமாத் இருக்குற , உன் முடியும் கூட இடுப்புக்கு கீழ தொங்குது , உன்னை அந்த ராசாகெண்டும் பார்த்தார்னுவை , அப்படியே செறையெடுத்தாலும் செறையெடுத்துட்டுப் போயிருவாரு . பார்த்து பதனமா உறங்கு என்று , சாதாரணமாகச் சொல்லி விட்டு மறுபடியும் கண்களை மூடிக் கொண்டு பாட ஆரம்பித்து விடுவாள்.
” கண்ணே நீ உறங்கு ஏய் .. கான மயில் உறங்கு
பொன்னே நீ உறங்கு ஏம் … பூ மரத்து வண்டுறங்கு
‘ பட்டெடுங்க தொட்டி கட்ட எந்தங்கத்துக்கு
பவுனெடுங்க காது குத்த ‘
இதை நினைத்து நினைத்து , மல்லிகா ராத்திரியில் ரொம்ப நேரத்துக்கு விழித்துக் கொண்டே இருப்பாள் . மறு பக்கம் அம்மாவின் குரல் சன்னஞ் சன்னமாக தேய்ந்து கொண்டே போகும் போது , அவளும் உறங்கியது தெரியாமலேயே உறங்கிப் போயிருப்பாள்.
நீண்ட நெளிந்த கருத்த கூந்தல் தானாக அவிழ்ந்து தண்ணீரின் மேற்பரப்பில் கரடியின் உரித்த தோல் குப்புறக் கிடப்பது போல மிதந்து கொண்டிருந்தது . இன்னும் ஒரு முறை , கடைசி ஒரு முறை என்று மாறி மாறி முறை வைத்து ஆற்றில் மூழ்கி கொண்டேயிருந்தாள்அவள் .” எத்தனை நேரம் இப்படியே கிடப்பது என்று தெரியவில்லை. வீட்டுக்குப் போய்த் தான் என்ன செய்யப் போகிறோம் என்று மறுபக்கம் ஒரு சடைவு தொற்றிக் கொண்டது . வீட்டிற்குப் போவதற்குப் பதிலாக இந்த ஆற்றோடு போய்விட்டால் கூட நல்லதுதான் என்று ஒரு நினைப்புத் தோன்றியது . ‘’ அப்படியே ஆற்றோடு போனால் தான் என்ன ? இந்த உடம்பு எங்கே போய் முட்டிக் கொண்டு நிற்கும் ? வீரபாண்டி அணைக்கட்டிலா ? அல்லது வைகை அணைக்கட்டு குத்துக்கற்களிலா ? போனாத்தான் போகட்டுமே என்னாகப் போகுது ? , ஆனா எல்லாத்துக்கும் ஒரு குடுப்பிணை வேணுமில்ல ? ”
கண்களை விழித்துப் பார்த்த போது இளம் பச்சை நிறத்தில் தண்ணீர் புசு புசுவென்று உடலைச் சுற்றிலும் ஓடிக் கொண்டிருப்பது பார்வைக்குத் தெரிந்தது . கால்களுக்கு கீழே சிறு சிறு கூழாங்கற்கள் இலவம் பஞ்சுகள் போல பளபளப்பாக அசைந்தாடிக் கொண்டிருந்தன . கணுக்கால்களையும் பாதத்தையும் , சிறுசிறு கெண்டை மீன்கள் வந்து அவ்வப்போது ஆய்ந்து விட்டுச் சென்றன. மீன்கள் கடிக்கும் போது , உடம்பெல்லாம் குறு குறுப்பாக கூச்சமாக இருந்தது .
முன்பு எத்தனை முறை இதே வண்ணான் படித்துறைக்கு அவள் சுப்பிரமணியோடு வந்திருப்பாள் ? ஒவ்வொரு முறையும் நீச்சல் சொல்லிக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவன் இவளுடைய சேலையின் ஒரு நுனியை எடுத்து அவனது இடுப்பில் கட்டிக்கொண்டு , மறு முனையை அவளுடைய இடுப்பைச் சுற்றிக் கட்டி முடிச்சுப் போட்டு , ஒரு சிறு குழந்தையை ஆற்றுக்குள் இறக்குவதைப் போல , அவளை கவனமாக இறக்கி விடுவாள். அப்போதெல்லாம் இப்படியே ஆற்றோடு போய் சேர்ந்து விட அவளுக்கு ஒரு கெதியில்லாமல் போய் விட்டது . இப்போது அவன் போய் சேர்ந்து விட்ட பிறகு , கழுதை என்னென்னமோ நினைப்பெல்லாம் திரண்டு வந்து மனசைப் போட்டு அலைக்கழிக்கிறது .
’ இப்ப என்னம்மா ? நீ இப்பிடியே கெளம்பிப் போயிட்டேனா , உன்ன நான் வீரபாண்டி அணைக்கட்டுல வந்து கண்டுபிடிச்சுக்கிறேன் . அப்படியே மாரியம்மன் கோயிலுக்குப் போயி சாமி கும்பிட்டு திரும்பி வந்துருவோம் அவ்வளவு தானம்மா ” என்று அவன் அவளிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறான் .
பதிலுக்கு அவள் ‘ என்னை சீக்கிரம் சாமிகிட்ட அனுப்பி விடனும்னு ஐயாவுக்கு ரொம்பத்தான் ஆசை போல இருக்கு ? ’ என்று கேட்பாள்.
ஆற்றுத் தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடுமென்று கூட அவளுக்குப் பயம் கிடையாது . எங்கே அவனை விட்டுப் பிரிந்து போய் விடுவோமோ என்ற பயம் தான் கலவரப்படுத்தும். அவளுக்கு ஆற்றுக்குள் நின்றால் , எப்போதும் அவனது கையோடு கை கோர்த்துக் கொள்ள வேண்டும் . ஆனால் அவனுக்கு கரைக்கு வந்து விட்டால் போதும் , எப்போதுமே விளையாட்டுத்தான் . வேறு எதையும் யோசிக்க மாட்டான்
அன்று சனிக் கிழமை அவனுக்கு அலுவலக விடுமுறை நாள் . ஒரு வெள்ளைக் காகிதத்தை எடுத்துக் கொண்டு , அவளிடம் வந்து ” மல்லி இதைப் படிச்சுப் பார்த்து ஒரு கையெழுத்துப் போடு , அப்படி நீ போட்டுட்டா , நீ கேட்குறதையெல்லாம் நான் வாங்கித் தர்றேன் ” என்றான். அவள் யோசிக்கவேயில்லை முதலில் கையெழுத்துப் போட்டாள். பிறகு தான் அதை வாசித்துப் பார்த்தாள்.
அவனை முழுதாக நம்பி அவள் , அவன் வாழ்க்கைக்குள் வந்த போது , அவனுக்கு நிரந்தரமாக தொழில் என்று ஒன்றும் அமைந்திருக்கவில்லை. என்ன நம்பிக்கையில் அவனை நம்பி அத்தனையையும் தூக்கிப் போட்டு விட்டுத்தான் வந்தாள் என்பதை நினைத்துப் பார்த்தால், இப்போதும் கூட அவளுக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் . அவனைப் பார்த்த பிறகு அம்மா சொன்ன கதையில் வரும் அந்த ராசா ஞாபகம் சுத்தமாக அவளுக்குப் போய்விட்டது .
அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்கள் . உருட்டல் மிரட்டல் கெஞ்சல் கெதறல் எதுவுமே அவளிடம் எடுபடவில்லை. ‘ ” . நாளைக்கு நீ கண்ணை கசக்கிக்கிட்டு வந்து இங்கே நின்னேயின்னா அப்பா மனசு தாங்காதும்மா ‘ என்று அப்பா கண்கலங்கினார் . ‘ படிக்கப் போனா படிச்சிட்டு வரவேண்டியது தானா , மோட்டார் வண்டியில போயி குறுக்க விழுகாம , ஒருத்தன் வந்து காப்பாத்துனான்றதுக்காக , யாராச்சும் அவன் கூடயே போயி வாழனும்னு நெனைப்பாங்களா ? இதெல்லாம் ஒத்து வராது பாப்பா. ‘ என்று அம்மா கனிவாகப் பேசிப் பார்த்தாள். ஒன்றும் இவளிடம் எடுபடவில்லை. மிரட்டிப் பார்த்தார்கள் . உருட்டிப் பார்த்தார்கள் . குடும்பத்தோடு நாண்டு கொண்டு செத்துப்போவதாக பயமுறுத்தினார்கள் .
அடுத்த நாளே அவள் சுப்பிரமணியோடு ஓடிப் போய் விட்டாள். ஒரு வாரம் கழித்து அவர்கள் இருவரும் அவனது வீட்டிற்குத் திரும்பி வந்த போது , இரண்டு ஊர்களுக்கும் இடையில் எவ்வளவோ நடந்து முடிந்திருந்தது . போலிஸ் தலையிடாமல் இருந்திருந்தால் , இந்நேரம் சண்டை வெட்டுக் குத்து வரைக்கும் போயிருக்கும் என்று சொல்லிக் கொண்டார்கள். அம்மா போலிஸ் ஸ்டேசன் வாசலியே நின்று இவளைப் பார்த்து , மண்ணை வாரித் தூற்றி விட்டு ‘ நீ வௌங்க மாட்டேடி வௌங்க மாட்டே ‘ என்று சாபம் விட்டுப் போனாள். அப்பா துண்டை உதறி தலையில் போட்டுக் கொண்டு , நேராக முல்லைப் பெரியாற்றங் கரையில் போய் உட்கார்ந்து கொண்டு , அய்யரை வரச் சொல்லி மகள் இறந்து விட்டதாக காரியம் செய்து , ஆற்றில் எள்ளும் தண்ணியும் இரைத்து விட்டு வீடு போய்ச் சேர்ந்தார் .
இரண்டு குடும்பங்களும் எங்கே பார்த்தாலும் முறைத்துக் கொண்டு திரிந்தார்கள். சண்டை இழுத்துக் கொண்டே போனது . எல்லாம் இவளுக்குத் தலை நாளில் சரவணன் பயல் பிறந்த போது தான் சரியானது. அம்மா வீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இவளது வீட்டிற்கு வந்து போக ஆரம்பித்தார்கள். மகன் பிறந்த நேரம் புருசனுக்கு நில அளவைத் துறையில் அரசு வேலை கிடைத்தது . சர்வேயர் வீடு என்று எல்லோரும் இவர்களது வீட்டை பெருமையாக அடையாளம் காட்ட ஆரம்பித்தார்கள் . கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு குடும்பங்களுக்குள்ளும் சமாதானம் துளிர்விட ஆரம்பித்தது. எல்லாம் ராசியான ஒரு நாளில் இரண்டு குடும்பத்தார்களும் ஒன்று கூடி , இதே ஆற்றங்கரையில் வைத்து தான் , இரண்டு சொம்புகள் நிறைய ,தழும்பத் தழும்பத் தண்ணீர் வைத்து ‘’ கூடிக் கும்பிட்டார்கள் ”. எவ்வளவோ கெஞ்சிக் கூத்தாடி கூப்பிட்ட பிறகு தான் மல்லிகா தன் புருசனோடும் பிள்ளையோடும் , ரொம்ப வருசத்துக்குப் பிறகு , தன் பிறந்த வீட்டுக்குப் போனாள். அவளை யாராலும் மாற்றமுடியாது.
அந்த வீட்டில் உண்மையில் மாறிக்கொண்டிருந்தவன் சுப்பிரமணியன் தான் . அவன் கொஞ்சமாக மாறிக் கொண்டே வந்தான் . அது எல்லோருக்கும் தெரிந்தது. அவனுக்கு மட்டும் தெரியவில்லை . அரசு வேலை கிடைத்த பிறகு , அவனது பேச்சிலும் நடவடிக்கையிலும் சிறிது சிறிதாக அடாவடித்தனம் வளர்வது தெரிந்தது. பணத்தாசை வேறு அவனை இன்னொரு பக்கம் படாய்படுத்த ஆரம்பித்திருந்தது. மல்லிகா தான் அவ்வப்போது அவன் தலையில் தட்டி ‘ எல்லாத்தையும் சிவகாமி அம்மன் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கா . ரொம்ப ஆட வேண்டாம் ‘ என்று புத்திமதி சொல்லி வைப்பாள்.
‘’ என்னுடைய உடலும் மனதும் , எனக்குச் சரீரத்தில் உள்ள தீராத வாத நோயின் காரணமாக , தாம்பத்ய உறவிற்கு முழுமையாக ஒத்துழைக்க மறுக்கின்ற காரணத்தால், என் கணவர் மேற்படி அவருடைய சொந்த சவுகரியத்திற்காக எனது முழு சம்மதத்தின் பேரில் , அலுவலகத்தில் அவருடன் பணி புரியும் ஆனந்தி என்ற பெண்ணை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்வதற்கு எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லையென்று நான் மனப்பூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தத் திருமணத்திற்கு முழு மனதுடன் நான் சமதிக்கிறேன் என்றும் உறுதியளிக்கிறேன் . இது நான் முழு சித்த சுவாதீனத்துடன் எழுதி தந்த ஒப்புதல் வாக்கு மூலமாகும் “ கடிதம் நல்ல வெள்ளைத்தாளில் ஒரு சிறு பிழையும் இன்றி , அழகாக டைப் செய்யப்பட்டிருந்தது. ‘ இப்படிக்குன்ற வார்த்தைக்கு கீழே , அப்படியே உன் கையெழுத்தைப் போடும்மா ” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் . அவள் அவனை அண்ணாந்து பார்த்துச் சிரித்தாள். சிரிப்பில் இன்னும் குழந்தைத்தனம் ஒட்டிக் கொண்டு இருந்தது . ஏதோ தன்னை வைத்து விளையாடுகிறான் என்பதாகத் தான் முதலில் நினைத்தாள்.
‘ ஆமா இன்னைக்கு உங்களுக்கு வெளையாடறதுக்கு வேற விசயமே கிடைக்கலையா ‘ என்று கேட்டாள். அவன் பதிலுக்கு ‘ நான் நிசமாத்தான் சொல்றேன்மா . ஆபிசுல ஏங்கூட வேலை பார்க்குற ஆனந்தியை உனக்குத் தெரியும்ல ? அந்தப் புள்ளதாம்மா இப்பிடிச் சொல்லுச்சு ‘ என்றான். அவள் ஒரு நிமிடம் பேச்சற்று சிலையாக நின்ற போது ‘ அது ரொம்ப நல்ல புள்ளைம்மா , நல்ல சம்பளம் வாங்குது , நாம எல்லாருமே ஒத்துமையா ஒரே வீட்லயே இருக்கலாம்னு தான் அதுவும் சொல்லுது , அதுக்கும் சொந்தம்னு சொல்லிக்கறதுக்கு யாரும் இல்லைல ‘ என்று இழுத்தான்.
அவள் சட்டென்று விழித்துக் கொண்டாள். எதிர்பாராமல் தொண்டைக்குள் வந்த விக்கல் போல , திடீரென்று மனசுக்குள் ஒரு திடுக்கிடல் எழுந்தது . உடலின் அத்தனை செல்களும் உடனடியாக விழித்துக் கொள்ள , அந்தக் கடிதத்தை சுக்கல் நூறாக கிழித்துப் போட்டு விட்டு ,, ,உட்கார்ந்து தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். ‘ ஏ பைத்தியம், இங்க பாரு , உனக்குப் பிடிச்சிருந்தாதேன் அந்தப் புள்ளைய கல்யாணம் பண்ணி , நம்ம வீட்க்கு கூட்டிகிட்டு வரப்போறேன் . பிடிக்கலையா சொல்லு , எங்கேயாவது தேனிப் பக்கம் வீடு பார்த்து வச்சுக்குறேன். ஆனா எக் காரணம் கொண்டும் உன்னையும் சரவணனையும் விட்டுறவே மாட்டேன் ” என்றான். அவள் அழுவதை நிறுத்தி விட்டு நிதானமாக அவனைப் பார்த்து ‘ நீங்க தாராளமா அவளையே முடிச்சுக்கோங்க ஆனா முதல்ல எனக்கொரு நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து ரெண்டாம் கல்யாணம் பண்ணி வச்சிட்டு , அப்புறமா நீங்க அவளை முடிச்சுக்கோங்க ‘ என்றாள்.
அவன் அவளை முகத்தோடு சேர்த்து அறைந்தான். சுவரில் போய் விழுந்தாள் , பிறகு பெரும் குரெலெடுத்து அழ ஆரம்பித்தாள். என்னவென்று தெரியாமலே சரவணனும் அம்மாவோடு சேர்ந்து கொண்டு அழுதான். அடுத்த ஆறு மாதங்களுக்கும் தாயும் பிள்ளையும் அந்த வீட்டில் இப்படியே அழுது கொண்டு தான் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் சுப்பிரமணி ஒரு நாள் இரண்டு நாள் என்று ஆனந்தியோடு போய் தங்க ஆரம்பித்தான். வீட்டுச் செலவுகளுக்கும் ஒழுங்காகப் பணம் கொடுத்துக் கொண்டுதானிருந்தான். நாளாக ஆக கொஞ்சம் கொஞ்சமாக பணம் கொடுப்பதை குறைத்துக் கொண்டே வந்தான் , ஒரு கட்டத்தில் சுத்தமாகவே நிறுத்தி விட்டான். வீட்டுக்கு வருவதையும் மொத்தமாகவே நிறுத்தி விட்டான் .
கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது அவளுக்கு . அடுத்த வேளைச் சாப்பாட்டிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பிள்ளைக்குத் தனியார் பள்ளியில் டேர்ம் பீஸ் கட்டச் சொல்லி இரண்டு மூன்று முறை போன் போட்டு விட்டார்கள். . ஏதாவது வேலை கிடைக்குமா என்று தெரிந்தவர்களிடமெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய வீட்டிலும் அவனுடைய வீட்டிலும் கலந்து பேசி , அவளை போலிஸ் ஸ்டேசனில் போய் புருசன் மீது ஒரு கம்ப்பெளெயின்ட் கொடுக்கச் சொன்னார்கள். அவள் மறுத்து விட்டாள். அவள் மாறவே மாட்டாள் என்று பேசாமல் விட்டு விட்டார்கள்.
கல்யாணமான புதிதில் பெரிய கோவிலுக்கு இவளை கூட்டிச் சென்ற போது , சிவகாமி அம்மன் சன்னதிக்கு முன்பாக நின்று கொண்டு , ‘ உன்னைத் தவிர இன்னொருத்தியை நினைக்க மாட்டேன் ‘ என்று இவளது தலையில் அடித்து அவன் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான் . இப்போது அதையும் மறந்து போய் விட்டான். ஆனால் இவளால் எதையுமே மறக்க முடியவில்லை . அன்று இதையெல்லாம் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தாயும் கூட இதையெல்லாம் லேசில் மறந்திருக்க மாட்டாள். உலகத்தில் நடக்கும் எல்லா அக்கிரமங்களையெல்லாம் அவள் அங்கேயிருந்து பார்த்துக் கொண்டுதானேயிருக்கிறாள். !
நாளாக நாளாக , இவளுடைய பிடிவாதத்தைப் பார்த்து அம்மா கதறி அழு ஆரம்பித்தாள். அப்பா தங்களது வீட்டுக்கு வந்து விடுமாறு கூப்பிட்டுப் பார்த்தார். அவள் அவளது வீட்டை விட்டு எங்கேயும் போவதற்கு மறுத்து விட்டாள். அம்மா வெறுத்துப் போய் ‘ அப்டின்னா அவன் அந்த சிறுக்கிய கூப்பிட்டுகிட்டு இந்த வீட்டுப் படியேறி வருவான். நீ அவளையும் சேர்த்து வச்சுகிட்டு குடும்பம் நடத்து ‘ என்று சாபம் கொடுத்து விட்டு அப்பாவின் கையைப் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு சென்றாள் .
அம்மா வாய்க்கு எப்போதும் சக்கரை தான் போட வேண்டும் . அவளது பேச்சுக்கு அப்படி ஒரு தனி ராசி உண்டு . எண்ணி சரியாக மூன்றாவது நாள் அவன் , அவளை அந்த வீட்டுக்கே அழைத்துக் கொண்டு வந்து விட்டான். ஆனந்தி ஒரு சிறிய லெதர் சூட்கேசுடன் இவளது வீட்டுக்குள் புதுப் பொண்டாட்டி மாதிரி நாணிக் கோணி , படியேறி வந்தாள். முகமெல்லாம் பவுடர் பூச்சும் , உடலில் சன்ஸ்கீரீனும் பெர்பூயும் மணக்க தாட்டியான உருவமாகத் தெரிந்தாள். வந்ததும் வராததுமாக குழந்தைக்கு ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்துக் கொடுத்தாள். பிள்ளை என்ன நினைத்தானோ , அதை வாங்கி குப்பைக் கூடையில் விட்டெறிந்தான். வந்தவளுக்கு முகம் சிறுத்து விட்டது . சுப்பிரமணி உடனே ஓடி வந்து குழந்தையைக் கன்னத்தில் அறைந்தான். ஆனந்தி அவனது கையைப் பிடித்து ” சின்னப் பையன் அடிக்க வேண்டாம் விட்டுருங்க ” என்று தடுத்துப் பார்த்தாள். அதற்குள் மல்லிகா அவளைப் பார்த்து ‘ அவன் கையை விடுடி தேவடியா , அவன் புள்ளையை அவன் அடிக்கிறான் , நீ யார்டி இடையில புகுந்து தடுக்குறதுக்கு ‘ என்று சொல்லி , அவளது கையை தட்டி விட்டாள் . சுப்பிரமணி பல்லைக் கடித்துக் கொண்டு இவளையும் ஓர் அறை அறைந்தான். மல்லிகா அவளைப் பார்த்து ‘ இப்ப உனக்கு சந்தோசமாடி தேவிடியா , அவிசாரி முண்டை , வந்திருக்கா பாரு , அடுத்தவ குடியை கெடுக்குறதுக்குன்னு . இவன் உனக்கு எத்தனாவது புருசன்டீ மூணாவதா இல்ல நாலாவதா சொல்லுடி ? என்று சரமாரியாகக் கேள்வி கேட்டாள். ஆனந்தி எதுவும் பேச முடியாமல் உக்கிப் போய் அமைதியாக நின்றாள். மல்லிகா மறுபடியும் ‘ இல்லை நான் தான் கேட்குறேன் , உனக்கு உலகத்துல வேற ஆம்பளையே கெடைக்கலையாடி ? நானா இருந்தா இந்தப் பொழப்பு பொழைக்கிறதுக்கு நாண்டு கிட்டு செத்துப் போவன் தெரியுமா ‘ என்று பலமாக சத்தம் போட்டுக் கத்த ஆரம்பித்தாள் . அவ்வளவு தான் சுப்பிரமணி பாய்ந்து வந்து இவளை மிதியென்று மிதித்துத் தள்ளினான் . ‘ இவ இங்க தாண்டி இருப்பா . உனக்கு விருப்பமில்லைன்னா நீ வெளிய போடி நாயே ‘ என்று அவளது கழுத்தைப் பிடித்து வாசலுக்கு வெளியே தள்ளினான். அழுகின்ற குழந்தையையும் பிடித்து அவள் மீது தள்ளி விட்டான் . வாசலில் பெரிய கூட்டம் கூடி விட்டது.
மல்லிகா , அம்மா வீட்டுக்குப் போன போது அம்மா இதையெல்லாம் எதிர்பார்த்திருந்தது போல , மெல்ல தலையாட்டி இவளை உள்ளே கூப்பிட்டாள். பிறகு சரவணனை கழுத்தைச் சேர்ந்து கட்டிக் கொண்டு ஒரு பாட்டம் அழுது தீர்த்தாள். ‘ எல்லாம் தாயி பார்த்திக்கிட்டுத்தான் இருக்கா ,, படுபாவி முண்டையை கேக்காம விடமாட்டா ‘ என்று பெரிய கோவிலை நோக்கி அம்மனோடு நேரில் பேசுவது போல , இரு கைகளையும் அகலவிரித்து முறையிட்டாள்.. அம்மனும் கேட்கத்தான் செய்தாள் . ஆனால் அவள் கேட்டது என்னவோ மல்லிகாவின் சக்களத்தியை அல்ல . அவளது புருசன் சுப்பிரமணியனைத்தான். எங்கெங்கோ ஜோடியாக அந்த மினுக்கியோடு சுற்றி வந்து ஆறுமாதத்திற்குள்ளாகவே , கொரோனோக் கிருமியை இழுத்து வைத்துக் கொண்டான் அவன் . அவன் இப்படி இரவும் பகலும் இருமிக் கொண்டு காய்ச்சலோடு அலைவதைக் கண்டதும் , ஒரிரு நாட்களிலேயே அவள் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டிலிருந்து மாயமாய் மறைந்து விட்டாள்.
அம்மாவும் அப்பாவும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் . மல்லிகா கேட்கவில்லை. ” என் விதி அவனோட தான்னு எழுதி வச்சிருக்கு . ஒரு வேளை நானும் போயிச் சேர்ந்துட்டா , என் புள்ளையை நீங்கதான் பார்த்துகிறனும் ‘’ ‘ என்று சொல்லி விட்டு கால்நடையாகவே புருசன் வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள். வந்தவளை வா என்று கேட்பதற்கோ அல்லது போ என்று விரட்டுவதற்கோ , அந்த வீட்டில் ஒரு நாதியில்லை. தெருவில் ஒரு ஈ குஞ்சு கூட நடமாடவில்லை. வீட்டுக்குள் நுழைந்த போது சுப்பிரமணி பாதி தன் உணர்வற்ற நிலையில் தான்படுத்துக் கிடந்தான். இரண்டு வார்த்தை பேசுவதற்குள் தொடர்ச்சியாக இருமல் வந்தது . ஏகத்துக்கும் மூச்சு வாங்கியது. ஆள் மிகவும் இளைத்துப் போயிருந்தான். எவளோ ஒருத்தியை நம்பி தான் மோசம் போய் விட்டதாகச் சொல்லி , தாரை தாரையாக கண்ணீர் வடித்தான். கை சாடை போட்டு அவளை அப்படியே திரும்பிப் போய் விடுமாறு சொன்னான். அப்படி சைகை போட்டுப் பேசிய கைகளை எடுத்து அவளது முகத்தில் வைத்துக் கொண்டு அவள் கேவிக் கேவி அழுதாள்..
தேனி க . விலகக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அவனைச் சேர்த்ததிலிருந்து முழுதாக இரண்டு இரவுகளும் இரண்டு பகல்களும் அவனது படுக்கைக்குப் பக்கத்திலேயே தரையில் உட்கார்ந்கொண்டு , அவனது கைகளைப் பிடித்தபடியே ஆறுதல் சொல்லிக் கொண்டு இருந்தாள். ஊன் உறக்கம் ஏதுமில்லை. அவன் பாராமல் அழுது தீர்த்தாலும் , அவனைப் பார்க்கும் நம்பிக்கை தரும்படியாக போது சிரித்து சிரித்து தான் பேசினாள். அவன் அருகில் இருக்கும் போதே ஏதோ ஒன்றை இழந்து விட்டதைப் போலவே அவளது மனதுக்குத் தெரிந்தது. அது என்னவென்று சரியாகப் புரியவில்லை. மூன்றாவது நாள் சுப்பிரமணி இறந்து போனான் . உயிர் பிரிந்த அவனது கண்களுக்குள் , அவள் கடைசியாகப் பார்தத போது , தலைக்கு மேலே சுற்றிக் கொண்டிருந்த வெள்ளைக் காற்றாடி அதே வேகத்தில் அவனது விழிகளுக்குள்ளும் சுழன்று கொண்டேயிருந்தது. நட்ட நடுச் சாமத்தில் ஆரம்பித்த மல்லிகாவின் அலறல் , அந்த மருத்து மனைச்சுவர்களில் மோதி மோதி விடியும் வரை எதிரொலித்துக் கொண்டேயிருந்தது.
பெரியவர்களெல்லாம் , பதினாறாம் நாள் ஐயரைக் கூப்பிட்டு முல்லைப் பெரியாற்றங்கரையில் சுப்பிரமணியனுக்கு காரியம் செய்து முடித்தார்கள். சாங்கியமெல்லாம் முடித்த பிறகு தண்ணீருக்குள் நின்ற படியே ஐந்தாறு மூத்த பெண்கள் மல்லிகாவை அருகே அழைத்து , அரிவாள்மனையால் அவள் கழுத்தில் கிடந்த , மஞ்சள் தாலியை கரகரவென்று அறுத்து ஆற்றில் விட்டெறிந்தனர். அப்போதே அவள் அரை உயிராகிப் போனாள். தீக்குள் மூழ்கி எழுவதைப் போல , மூன்று முறை தண்ணீருக்குள் மூழ்கி எழுந்தாள். பிறகு உசிரை ஆற்றிலேயே விட்டு விட்டு , கூட்டை மட்டும் சுமந்து கொண்டு வீட்டுக்குப் போய் சேர்ந்தாள்.
வருடா வருடம் வரும் அவன் நினைவு நாளில் தாயும் பிள்ளையும் மறக்காமல் ,இதே படித்துறைக்கு வந்து விடுவார்கள். அவனுக்குப் பிடித்ததையெல்லாம் ஆற்றில் படைத்து விட்டு விட்டு , நெடுநேரம் கழித்து தான் வீட்டுக்குப் போவார்கள் .
கடைசியாக மூழ்கி எழுந்ததும் கரையைப் பார்த்தாள் . இப்போது சரவணன் ஒரு மூங்கில் புதர் அருகே கையில் புது வேட்டி, வெள்ளை சட்டை , துண்டு சகிதம் நின்று கொண்டிருந்தான். ‘ அப்பாவுக்கு சாப்பாடு எங்கப்பா ? ‘ என்று அவனைக் கேட்டாள். அவன் அருகிலிருந்து இன்னொரு பெரிய வெண்கலத் தட்டை எடுத்து வந்தான் . அதில் ஒரு பக்கம் வெள்ளை வேட்டி சட்டை , துண்டு அடுக்கி வைக்கப் பட்டிருந்தது . மறுபக்கம் பெரிய வாழை இலையை பரப்பி , அதில் சுப்பிரமணிக்குப் பிடித்தமான , பொங்கல் , வடை , புரோட்டா ,பூரி , கேசரி என நிறைய பதார்த்தங்கள் அளவாக சிறு சிறு பிண்டங்கள் அளவுக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ‘ சரி ஆத்துல விட்டுருவோமா ? ‘ என்று கேட்டாள் . சரவணன் இரண்டு கைகளிலும் தட்டை ஏந்திக் கொண்டு , ஆற்றில் இறங்கி , கொஞ்சம் ஆழமான பகுதிக்குச் சென்றான். அங்கே நீர் இழுவை இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தது. தண்ணீர் பாம்பு ஒன்று அவர்களைக் கடந்து நீரின் போக்கில் அது பாட்டுக்கு சீறிப் போய்க்கொண்டிருந்தது . இதற்குள் மல்லிகாவும் தத்தி தத்தி நடந்து அவனுக்கு அருகில் வந்து , அவனது தோளைப் பற்றிக் கொண்டு நின்றாள். தலைக்கு மேல் இரு கைகளையுத் தூக்கி கும்பிடு போட்டு விட்டு , முதலில் வேட்டி சட்டையை அப்படியே அட்டைப் பெட்டியோடு சேர்த்து வைத்து ஆற்றில் மிதக்க விட்டான். அடுத்ததாக இருவரும் சேர்ந்து பதார்த்தங்கள் நிறைந்திருந்த வாழை இலையை ஆளுக்கொரு பக்கமாக பிடித்து தெற்கு வடக்காக வேகமாக ஓடும் ஆற்று நீரில் விட்டார்கள். முதலில் அது ஒரு சிறிய பச்சைப் படகு போல அசைந்தபடியே தண்ணீரில் மிதந்து செல்ல ஆரம்பித்தது . அப்போதே பதார்த்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தன. சிறிது நேரத்தில் நீரின் மேற்பரப்பில் பளிச் பளிச்சென்று மீன்கள் தட்டுப்பட்டன.
தாயும் மகனும் மெல்லக் கரையேறினார்கள். கரையில் நின்றபடி தாங்கள் ஆற்றில் விட்ட இலையையும் , அட்டைப் பெட்டியையும் ஈரம் சொட்ட சொட்ட பார்த்துக் கொண்டே நின்றார்கள். பெரிய பாலத்துக்கு கீழே போவதற்கும் முன்பே பதார்த்தங்களெல்லாம் கரைந்து போக , வாழை இலை மட்டும் தனியாக சிறிது தூரம் போனது , பிறகு அதுவும் ஏதோ சுழலுக்குள் சிக்கி , கண்ணிலிருந்து மறைந்து போய் விட்டது. ஆனால் வெள்ளை வேட்டி சட்டை மட்டும் ஆள் போவது போல நீண்ட நேரம் ஆற்றின் மேலே மிதந்தபடியே சென்று கொண்டிருந்தது . அதைப் பார்க்கும் போது அச்சு அசலாக அப்படியே சுப்பிரமணி மிதந்து செல்வது போலவே இருந்தது. அவர்கள் இருவரும் வைத்த கண்ணை எடுக்காமல் அப்படியே ஆற்றைப் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தார்கள்.
📚 எழுதியவர்:
✍️ – தங்கேஸ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மிகச் சிறப்பு!!
தேனி மாவட்டத்தின் அடையாளமான முல்லைப் பெரியாற்றை பதிவு செய்தமை அருமை!!!
மிக்க நன்றி சார்
அருமை தோழா சிறப்பான சிறுகதை..
தொடர்ந்து எழுதுங்கள் ..
அடுத்த மரகதப் புறா
சிறுகதை நூலாய்
வரட்டும் இந்த படைப்புலகில்
அன்பின் நன்றி தோழர்
அன்பின் நன்றி தோழர்
மிக்க மகிழ்ச்சி