கவிஞர் தணிகைச் செல்வன்
****************************
அன்புக்குரிய போர் வீரனே
அஞ்சலி செலுத்துகிறேன்!
நீ உணர்ச்சி வசப்பட்ட குழந்தை என்பதை
உலகறியும்
தொட்டிலில் இருக்கும்போதே
தாய்ப்பாலுக்காகப்
போராட்டம் நடத்தியவன்
தணிகைச் செல்வன்!
ஒவ்வொரு கவிஞனுமே
உணர்ச்சி வசப்பட்ட கம்யூனிஸ்ட்டுதான்.
ஆபத்தான உலகில்
நாம்
அட்டைக்கத்தி வீரர்கள்!
கதிர்வீச்சை எதிர்த்து
கவிதை அட்டைக் கத்திகள்!
நீ ஒரு டான் குவிக்ஸாட் என்றால்
நான் ஒரு சான்கோ பான்ஸா!
நாம் இருவருமே
பொன்னுலகப் போர்க்களக் கோமாளிகள்!
தமிழ்க் கலை இலக்கிய உலகில்
தனியார் மயம்
க.நா.சு வாரிசுகள் கடை விரிக்கலாம்
ஒரு கவிஞன்
கம்யூனிஸ்டாக இருக்க முடியாது
வெளிநாட்டுக் கவிதைக் கம்யூனிஸ்டுகள்
விதிவிலக்கு!
அவர்களுக்கு
ஒரு கவிஞன் கம்யூனிஸ்டாய் இருந்தால்…
அவன் கவிதை
கடிவாளக் குதிரையின் கனைப்பு
அல்லது
பந்தயக் குதிரையின்
பொம்மலாட்டப் பொடிநடை!
அவனது கலையின் ஆவேசம்
வெறும்
கொட்டாவி அல்லது குறட்டை!
எது கலை இலக்கியச் சேவை?
முதலாளித்துவச் சப்பாத்துக்குப்
பாலீஷ் பளபளப்பா?
பொதுவுடைமைக் குழந்தைக்குத்
தாய்ப்பாலா?
யார் கவிஞன்?
சனாதனச் சாமியாரா?
வாழும் வள்ளலாரா?
அவர்கள்
ஹிட்லர் தூக்கத்தின்
சர்வாதிகாரக் கனவுகள்!
தொழிலாளி இல்லாத தொழில்
விவசாயி இல்லாத விவசாயம்
மனிதன் இல்லாத பூமி
பூமி இல்லாத பிரபஞ்சம்
கார்ப்பரேட் யுத்தத்திற்கு எதிரானதுதான்
கவிதைப் போர்க்களம்!
உலகம் கவலைக்கிடமாய் இருக்கிறது
அன்புக்குரிய போர் வீரனே
அஞ்சலி செலுத்துகிறேன்!
கடைசி மனிதனுக்கும் கார்ப்பரேட்டுக்கும் நடக்கும்
யுத்தகளம்தான்
கம்யூனிசம்
தணிகைச் செல்வனே
யுத்த களத்தின் தீக்கிடங்கில்
திகுதிகுவென எரியுமுன்
தீப்பந்தம்!
அணையாத் தீப்பந்தமே
அஞ்சலி செலுத்துகிறேன்!
நீ கவிதையின் கடிவாளத்தைப்
புலிக்கே போட்டவன்!
நெருப்பைத்
தாள்களில் மடித்துத் தந்தவன்!
கவிஞனின் தசை
அநாதையின் போர்வை!
அவன் விரல்கள்
அகதி அடுப்புகளின் விறகுகள்!
அவன் கண்கள்
பசி விக்கெட்டுகளை வீழ்த்திகிற
சுழல் பந்துகள்!
அவன் வாழ்க்கையே
ஒரு விளையாட்டு மைதானம்
உலக நாடுகள்
பசியை வென்று கோப்பைகள் வாங்குவதற்காக
மண்டை ஓட்டையே கழற்றித் தருபவன்!
அவன் இரைப்பை
உலகின் கருப்பை!
செயற்கை நுண்ணறிவுச் சிங்கம்
கார்ப்பரேட் மாளிகைகளின்
காவல் நாய் ஆவதா?
ஒவ்வொரு கவிஞனும்
அருட்பெருஞ்ஜோதிதான்
ஒவ்வொரு கவிதையும்
தனிப்பெரும் கருணைதான்
கவிஞர்களே
செயற்கை நுண்ணறிவில்
உலகக் குழந்தைகளுக்குக்
கவிதைத் தாய்ப்பால் கடையுங்கள்!
பிரபஞ்சத்தையே அடைத்து வைக்கப்
பிணப்பெட்டி செய்கிறார்கள்
நாம்
பூமிக் குழந்தையைக் கிடத்திவைக்க
தொட்டில் செய்வோம்!
கவிதை எழுதியவர்:
– நா.வே.அருள்
25.11.2024
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
அஞ்சலியைப்படிக்கும்போது வரிக்குவரி மத்தாப்பைக்கொளுத்திப்போட்டதுபோல உணர்ந்தேன். ரத்தம் முறுக்கேற
யார் எழுதியது எனபார்த்தேன்.
. அமைதியானவர் ஆர்ப்பாட்டமில்லாதவர் எனப்பெயரெடுத்தவரிடையே இப்படி ஒரு அஞ்சலிகவிதையா..
தணிகைசெல்வன் தோழரும் இப்படித்தான். சரம்சரமாய்சந்தம் கலந்த கருத்துமிகுகவிதையை
தனது வீரக்குரலில் முழக்கமிடுவார்.
ஆக.. இப்படிப்பட்ட இடிமுழக்ககவிதையைஎழுதிய அருள்தோழமையோடுஅவரின்கவிதையோடு
தோழமை. த. செல்வன் அவர்களுக்குசெவ்வஞ்சலிசெலுத்துகிறேன். செல்வராஜ். குடியாத்தம்