ஞா.சத்தீஸ்வரன் எழுதி ஆம்பல் பதிப்பகம் வெளியிட்ட தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal)

தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் – நூல் அறிமுகம்

தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal) – நூல் அறிமுகம்
-அய்யனார் ஈடாடி

நிலத்தின் பிடிமண்ணை நெற்றியில் அப்பிக் கொண்டதோடு, மடியில் கிடத்தி அமர்த்தி தாலாட்டி உச்சிநுகர்ந்திருக்கிறார்.
காயத்தின் வலிச்சொற்கள் குவிந்து கிடக்கின்றன நூல் முழுவதும்.
வெள்ளந்தி மனிதர்களின் குருதிப் பிசுபிசுப்புகள் அனாமத்தாய் கட்டற்ற வெளியில் மொய்த்துக் கிடக்கின்றன.
கரிசக்காடும் கருவைத்தூரும் வெள்ளாட்டுக்கவுச்சியும் கவிதைகளுக்கு உயிரூட்டுகின்றன.
சாவின் விளைச்சலில் அறுவடைக்குக் காத்திருக்கும் தகனமேடைகள், சிதைவுடைந்த உடலின் கரும்புகையை இன்னும் குடித்துக் கொண்டிருக்கின்றன.
பயணிக்காத கிராமங்களுக்கு கவிதைகளினூடே பயணிப்பது இளமித கண்களுக்கு ரசனையூட்டுகின்றன இயற்கையின் அழகியக் காட்சிகள்.
நிலம் விட்டுப் போக மனமில்லையென்றாலும்
நினைவுகளின் எச்சங்கள் இன்னும் சுடராய் எரிந்து கொண்டிருக்கின்றன
நிலத்தின் மடியில்.

மூளிமரக் கொப்பில்
கழுத்திறுக்கக் கயிறுகட்டி
உடல்விறைக்க ஊஞ்சலாடும்
போங்காலம் ஒன்றின் பொழுசாயத்தில்
நேர்ந்துவிட்ட குட்டியாட்டின்
நிலைகொள்ளாக் கதறலுக்கும்
கல்லாகத்தான் நிற்கிறது
கருணையத்துப்போன கடன்கார சாமி.

இந்தக் கவிதையின் சொல்லாடல் சிறிது நேரம் சிந்திக்க வைத்துவிட்டுப் போகின்றன. வெட்டப்படுவதற்கு முன்பே கதறிக்கொண்டிருக்கும் குட்டியாட்டினை சாமியிடம் ஒப்பிட்டு கருணை மிளிரச் செய்து சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். ஆடுகளை பலிகொடுப்பது தமிழர் பண்பாட்டில் இன்றும் தொன்று தொட்டு புழக்கத்தில் உள்ளதைக் காணலாம்.

எங்கோ தூரதேசம் தேடி
ஊரைப் புதைத்துவிட்டுப் போனதனால்
உல்லாங்குருவிகளின் ஓலம் கேட்டு
ஓடிவர நாதியில்லை
பாழுங்கிணற்றின் படிக்கல்லருகே
இற்றுவிழக் காத்திருக்கும் மரக்கிளையில்
கயிறு கட்டித் தொங்கிக்கொண்டிருப்பவனின்
காய்ப்பேறிய கைகளில்
இன்னமும்கூட மிச்சமிருக்கலாம்
ஒருபிடி மண்.

ஏதோ ஒரு காரணங்களுக்காக பணிக்காக ஏன் இன்னும் சொல்லப் போனால் வயிற்றுப் பிழைப்பிற்காக தூரதேசங்களுக்கு புலம்பெயர்ந்து செல்லும் போதும் கிராமத்தின் சம்சாரி வாழ்வை இழக்கும் போதும் ஏற்படும் வலிகளை எடுத்துரைக்கின்றன இக்கவிதை வரிகள். ஒவ்வொரு கிராமத்து வாசிகளுக்கும் எச்சத்தின் மிச்சமாக ஒரு‌பிடி மண் என்பதை மிகத் தேர்ந்த அனுபவபாதியாக சொல்லியிருக்கிறார் கவிஞர்.

செத்து விழும் வார்த்தைகளைச்
சேர்த்து அள்ளி
சட்டைப் பைக்குள்
ஒளித்து வைக்கிறேன்
கிழிசல்களின் வழியே
கசிந்து விழும் பிணச்சொற்கள் தெருவெல்லாம் சிதறி
நாறிக் கிடக்கிறது ஊரே…!

சொற்கள் மிகுந்த இந்தக் கவிதையில் அகமும் புறமும் முடிவிலிகளின் இயங்கியலாக அமைந்துள்ளன. நெல்லைக் கொட்டினால் அள்ளிவிடலாம் சொல்லைக் கொட்டினால் அள்ளிவிட முடியாது என்ற பழமொழி உண்டு. அப்படி கவிஞரின் ‌உள்ளத்தை பாதித்த ஒரு நிகழ்வை ஒரு சம்பவத்தை ஒரு அனுபவத்தை ஒரு கனவை கவிதையின் வழியே உயிர்ப்பூட்டி புலப்படுத்தியிருக்கிறார். கொடுஞ்சொற்களின் நாற்றம் வீசிக்கொண்டிருக்கும் ஊரில் எப்போது வீசப்போகின்றன செம்மையான சொற்கள் என்ற கேள்வியும் எழும்புகிறது.

அறுப்பு முடிந்த வயல்களில்
இந்தப் பறவைகள்
எதைத் தேடுகின்றன
எந்திரம் அறைத்துத் தள்ளிய கூளம்
எதைப் பாடி காற்றில் அலைகிறது
உழுது விதைத்து அறுத்தவன்
ஏனிப்படி புலம்பி அழுகிறான்
இந்த விளைச்சல்
யாருடைய வயிற்றுக்கு…

சம்சாரியின் கண்ணீரை ஏதோவொரு பத்திரிக்கையில் நிகழ்காலத்தில் துண்டுச் செய்தியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பின்னால் புதைந்து கிடக்கும் ஓராயிரம் வலிகளும் காய்த்துப்போன காயங்களும் சம்சாரித்தனம் செய்யும் எனைப் போன்ற உழுகுடிச் சம்சாரிக்குத் தெரியும். அது எப்பேற்பட்ட வலிகள் என்று. விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேரும் வரை அதற்குள்ளிருக்கும் பாடுகளுக்கு விலையே கிடையாது.
விதைத்தவனையும் பறவைகளையும் எடுத்துக் காட்டி இந்த விளைச்சல் யாருக்கென்று கவிதையை முடிக்கிறார் இந்நூலாசிரியர்.

-அய்யனார் ஈடாடி

நூல்: தனிமையின் மிடறுகளில் துயரேறிய சொற்கள் (Thanimaiyin Midarugalil Thuyareriya Sorkal)
ஆசிரியர்: ஞா.சத்தீஸ்வரன்
வெளியீடு: ஆம்பல் பதிப்பகம்
பக்கங்கள்:96
விலை: ரூ.120
தொடர்புக்கு: +91 7868934995


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *