நூலாசிரியர் :
எழுத்தாளர் தி.பரமேசுவரி . இவர் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் , கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழாசிரியராகப் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தமிழக வரலாற்றில் முக்கிய நபராக விளங்கும் ம.பொ.சி. அவர்களின் மகன் வழி பெயர்த்தி . தற்போது அவரது எழுத்துகளை, பத்திரிகைகளை நூலாகத் தொகுக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார் . இவர் எனது தோழி என்பதிலும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
எழுத்தாளர் தி.பரமேசுவரி
நூலைப் பற்றி …
கல்கி , அம்ருதா , கருக்கல் , அவள் விகடன் , காக்கைச் சிறகினிலே , யாவரும் .காம் ஆகிய இதழ்களில் வெளிவந்த கவிதைகள் ஒரு தொகுப்பாக “தனியள்” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் ஒரு அழகான அணிந்துரை அளித்துள்ளார்.
காலத்திற்கேற்ற புத்தகம் . தனிமைப் படுத்திக் கொண்டு வாழும் இந்த நாட்களில் இந்தத் தனியள் கவிதைத் தொகுப்பின் கவிதைகளை மனதுக்கு நெருக்கமாக வாசிக்க முடிகிறது.
கவிதைகள் நேரடியாகப் புரிந்து கொள்ளும் வகையில் பெரும்பாலும் எழுதப்பட்டுள்ளது. மனதில் தமக்குள்ளே பேசிக் கொள்ளும் சூழல்களை நுட்பமாகப் பதிவு செய்கிறார் பரமேசுவரி .
இந்தக் கணத்தில்
என் கதவுகளை இறுக மூடிக் கொள்கிறேன்
சற்றே தொந்தரவு செய்யாமலிருங்கள்
(பக்கம் 11) … என்று தொடங்கும் கவிதை தனித்திருக்கும் பெண்ணின் மன உணர்வை அழகாகப் பதிவு செய்கிறது.
அநாதியான காலத்திலிருந்து தொடங்கிய
ஆதித் தீட்டு முதல்
அண்மைத் தீட்டு வரை
பார்த்தாகி விட்டது பலதையும் (14 ப) .. என்று ஆரம்பிக்கும் கவிதை சமூகத்தின் முகத்தைப் பதிவு செய்வதாகப் பார்க்கிறேன்.
வீட்டுக்குள் புகுந்த நாகமொன்று
தற்செயலாய் எனக்குச் சிநேகமானது (19 ப) என்ற கவிதையின் கற்பனை ..உண்மை என்றே தோன்றுகிறது. இது மட்டுமல்ல .. பல கவிதைகள் உண்மையைக் கூறுவதாகவே எழுதப்பட்டுள்ளது.
பிணம் நான் (106 ப)
கோழை மனம் (109 ப) என முடியும் கவிதைகள் அப்படி ஒரு ஆழம் ,
காதல் உணர்வு , தாயுணர்வு , பெண்களின் மனம் எல்லாமே ஆழமாக சொற்களைச் செதுக்கிச் செதுக்கி எழுதியிருக்கிறார் பரமேசுவரி . சில கவிதைகளைப் படிக்கும் போது செய்யுள் நடையும் பல கவிதைகள் தற்காலக் கவிதை நடையும் தெரிகிறது.
தனியள் பெயரில் தான் தனிமை , கருத்தும் பொருளும் மொத்த மனிதருக்குமானதாகக் கருதுகிறேன். அட்டைப்படத்தில் தனியளைச் சித்தரித்திருப்பது மிகவும் அழகு. ஆனால் அட்டையின் மடிப்பில் உள்ளே எழுதப்பட்டவை படிப்பதற்கு சற்றுக் கடினமாக உள்ளது. நிறம் மிகவும் அடர்வாக இருப்பதால் .அடுத்த முறை மாற்றிவிட்டால் நல்லது .
பிரக்ஞை பதிப்பகம் 2014 இல் வெளியிட்டுள்ளது. பக்கங்கள் 112 , விலை ரூ 99 .
உமா