தணியாத் தீயின் நாக்குகள் – நூல் அறிமுகம்
ஒரு வாசகியின் பார்வையில் …
– தனலட்சுமி சிவகுமார்
தீயின் நாக்குகள் பற்றிப் படர்பவை. என்றும் தணியாதவை. நாம் அணைத்தால் ஒழியத் தாமாகவே அணையாதவை. இந்தப் புத்தகத்தின் தலைப்பே நம்மைப் பதறச் செய்யும். ஏனென்று இதை வாசிப்போருக்குப் புரிய வரும். என் பால்ய வயது முதல் திருமண வயது வரையிலான காலக்கட்டத்தில் எழுதப்பட்ட கதை கள் இவை. ஆனால்,இவை எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியவையே. ஏன் எனில்,இவற்றில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்று வரையில் வாழ்பவர்கள். வாசகியாகிய எனக்கு இப்போதுதான் இதை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.
துணி என்ற முதல் கதையில் ஒரு தொழிலாளியின் வாழ்க்கை முறை, குடும்பப் பின்னணி, கஷ்டங்களைக் கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து எவ்வாறு கையாள்கின்றனர் என்பனவற்றைக் காண முடிகிறது. ஒரு தொழிலைப் பற்றி இவ்வளவு நுணுக்கமாக எழுத முடியுமா என்று வியப்பு ஏற்படுகிறது. அவர் செய்யும் தொழிலைப் பற்றி நுட்பமாக எழுதுகையில் அதில் ஏற்படும் சிரமங்களையும் சொல்ல மறக்கவில்லை. இதில் வரும் கணவன் – மனைவி இடையிலான உரையாடல்கள் ரசனை மிகுந்தவையாகவும்,வாழ்க்கையின் எதார்த்தங்களை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதைக் காட்டுபவையாகவும் இருக்கின்றன. அன்பும்,அக்கறையும் நிரம்பி அவர்களுடைய வாழ்க்கையை எவ்வளவு அன்னியோன்யம் மிக்கதாக மாற்றுகிறது என்பதைக் காண முடிகிறது. நானும் ஒரு தொழிலாளியின் மனைவி என்ற முறையில் என் அனுபவத்தையும் உணரச் செய்கிறது இந்தக் கதை.
‘பார்வைகள் மாறும்’ கதையில் சம்பள உயர்வு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஒரு போராட்டம் நடக்கிறது. அதில் கலந்து கொண்டு கைதாகிச் சிறையில் உள்ள ஒரு தோழரின் குடும்ப உரையாடலைச் சொல்லும் கதையாக விரிகிறது. சிறையில் உள்ளவர்களைப் பார்ப்பதற்கு மனுப்போடும் குடும்ப உறுப்பினர்களிடமும் கூடக் கூடுதலாகக் காசு பிடுங்கும் சிறு வியாபாரம் நடக்கிறது என்பதையும் கதையின் போக்கில் காண முடிகிறது. மரகதம், நீலா போன்று எண்ணற்ற மக்களின் குடும்பங்களில்,அவற்றின் தலைவர்களாக உள்ள தோழர்கள் சமுதாய நலன்களுக்காகச் சிறைகளில் வாடும் அவல நிலை இன்றளவும் தொடர்வதைக் காண முடிகிறது. போராட்டங்களே மனிதர்களுக்கு மன உறுதியையும்,துணிவையும் ஊட்டுகின்றன என்பதும் கதையில் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது.
குருவிக்குஞ்சுகளும் கலைந்த கூடுகளும் கதையில் சிதைந்த பறவைக் கூட்டைப் பார்த்துப் பரிதவிக்கும் ஜெயா,” அந்தக் குருவிங்க எங்கிட்டச் சண்டை போடுதுங்க,தெரியுதா ?” என்று கணவரிடம் தழுதழுக்கும் குரலில் கேட்கிறாள்.. அந்தப் பெண்ணின் பரிதவிப்பு நன்றாகப் புலப்படுகிறது.
ரசனை கதையில் மனைவியாகிய ஒரு பெண்ணின் ரசனை உணர்வைப் புரிந்து கொள்ளாத ஒரு கணவன் வருகிறான். திருமணத்துக்கு முன்பு, பின்பு என்று ஒவ்வொரு செயலுக்கும் கி. மு.,கி. பி. என்ற கால வேறுபாடு இருப்பதைப் போல அந்தப் பெண் ஒவ்வொன்றையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. குடும்பங்களில் நடக்கும் ஒவ்வொரு சிறு சிறு செயல் கூட,இப்படி முன்பும் பின்பும் என்று மாற்றங்களுடன்தான் நடக்கிறது. பெண்ணின் ரசனை, அவளு டைய புகுந்த வீட்டில் கணவன் உள்பட வேறு எவருடனும் ஒத்துப் போவதில்லை; ஒத்துப் போக வேண்டுமென்ற அவசியமும் இல்லை. எனினும்,கணவனிடம் அந்த ஒத்துப் போதலை ஒரு மனைவி எதிரபார்க்கிறாள். ஆனால்,அவனோ சட்டை பண்ணாமல் நடந்து கொள்கிறான். மனைவி மவுணமாகத் தன் எதிர்ப்பைக் காட்டுகிறாள் இந்தக் கதையில்.
பறப்பவர்களின் காலம் கதை,புற நகர்களுக்குப் பயணிக்கும் மின் ரயிலில் நடக்கும் ஒரு சிறிய சம்பவத்தைப் பதிவு செய்திருக்கிறது. நம் ஒவ்வொருவருக்கும் இப்படி ஏதேனும் ஓர் அனுபவம் இருக்கும். அதை நாம் மறக்கவே முடியாது. தீபா, ஸ்ரீ இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடலை நாம் வாசிக்கும் போது அது நம்மையும் நமது பால்ய வயதுக்கு இட்டுச்செல்கிறது. குழந்தைகளின் உலகில் மட்டும்தான் இவ்வாறு நடக்கும் போலும். தம்மைச்சுற்றிலும் என்ன நடக்கிறது என்றே கவனிக்காமல் தன்னிலை மறந்து நடக்கும் உரையாடல் எந்திரமயமான நவீன காலத்தில் சாத்தியமற்றுப் போய்விட்டது. பிறர் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று நினைத்துக் கொண்டு மனம் திறந்து பேசாமல் கடந்து செல்கிறோம். கதையில் வரும் அந்தச் சிறு பெண்களைக் காணும் போது தீபாவின் தந்தை ரமணனின் இடத்தில் நாமும் மலைத்து நின்று விடுகிறோம்…
இத்தொகுப்பில் வரும் பதினைந்து கதைகளுமே வாழ்வின் எதார்த்தங்களைச் சொல்லிச்செல்கின்றன. வறுமை,போராட்டம்,ரசிப்புத்தன்மை,வாழ்வின் இயலாமை,மனிதாபிமானம்,பணி ஓய்வு பெற்றோரின் பிந்தைய வாழ்க்கை, உதவி மனப்பான்மை, காதல்,சமூகத்தில் நடக்கும் அவலங்கள், எழுத்தாளருக்கு நடக்கும் சோகம், சுற்றுச்சூழல்,தோழமை, மனித உணர்வுகள்,வாழ்க்கை ஓட்டம், பெண்ணின் துணிவான முடிவு – இப்படியாக வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் எடுத்துக் கொண்டு சுவையாகவும் எளிமையாகவும் சொல்கின்றன. இன்றைய தலைமுறையினர் வாசிக்க வேண்டிய கையேடு இக்கதைத் தொகுப்பு.
நூலின் தகவல்கள் :
நூல் : தணியாத் தீயின் நாக்குகள்
ஆசிரியர் : கமலாலயன்
விலை : ₹152
வெளியீடு : பரிசல்
நூலின் அறிமுகம் எழுதியவர் :
– தனலட்சுமி சிவகுமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.