சென்னையில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி வரலாற்றி சிறப்புமிக்கது. அந்தவகையில், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த 9ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதனிடையே துக்ளக் பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் பேரணியில் இந்து கடவுள்கள் ராமர், சீதை ஆகியோரின் புகைப்படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து நிர்வாணமாக அழைத்து சென்றனர் என கூறியது சர்ச்சையாகியுள்ளது. இந்த நிலையில், பெரியார் தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் விற்பனையாகியுள்ளதாக புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட பதிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, சமூக நீதி தொடர்பான புத்தகங்களை வெளியிடும் கருஞ்சட்டை பதிப்பகத்தின் நிறுவனர் சு.ப.வீரபாண்டியன் கூறுகையில், “கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பெரியார் தொடர்பான 2000 புத்தகங்களை விற்பனை செய்தோம். நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 3500ஆக அதிகரித்துள்ளது. பெரியார் குறித்தான அரசியல் தலைவர்களின் தொடர் எதிர்மைறையான விமர்சனங்கள் அவரது புத்தகங்களை வாங்க இளைஞர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பெரியார் தொடர்பான சமீபத்திய கருத்து அதனை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. 25-35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மத்தியில் பெரியார் புத்தகங்களுக்கான தேடல் அதிகமாக இருந்தது” என்றார்.

பெரியாரின் வாழ்க்கை மற்றும் தத்துவத்தை புரிந்து கொள்ளும் ஆர்வம் வாசிப்பாளர்களிடையே அதிகரித்துள்ளது என தெரிவிக்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) துணைத்தலைவரும், பாரதி புத்தகாலயத்தின் பதிப்பாளருமான நாகராஜன், “பபாசியின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் தளத்திலும் பெரியார் புத்தகங்களுக்கான தேடலே அதிகமாக இருந்தது. ‘ஈ.வே.ராமசாமி என்கிற நான்’ எனும் புத்தகம் அதிகளவில் விற்பனையான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

அனால், பெரியார் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து சர்ச்சையானதால் அவரது புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகவில்லை என மறுப்பு தெரிவித்துள்ள திராவிடர் கழகம், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பெரியாரது புத்தகங்களுக்கு அதிக தேவை இருந்து வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரங்கள், பிரச்சினைகளுக்கு தீர்வு காண பெரியார் தேவைப்படுகிறார். புத்தக விற்பனைக்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளது.

நன்றி – சமயம் இணையதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *