சிறுகதை: தன்மானம் – ராதிகா விஜய்பாபுசீதா காரை ஓட்டிக் கொண்டு கிளினிக் சென்று கொண்டிருந்தாள் நேரமாகி விட்டது என்ற பதட்டம் ஒருபுறமிருந்தாலும் எஃப்எம் இல் பாட்டு கேட்டுக்கொண்டு நிதானமாக சென்று கொண்டிருந்தாள்.

தினமும் இருப்பதைவிட இன்றைக்கு என்ன இவ்வளவு ட்ராபிக்

கார் சிக்னலில் நின்றது.

அப்பொழுது ஜவுளிக்கடை பொம்மைக்கு கட்டிய சேலையை போல அவ்வளவு அழகாக ரோஜாப்பூ நிற புடவையில் பச்சை நிற பார்டர் வைத்து எடுப்பா சேலையை கட்டிகைகள் நிறைய வளையல் போட்டு, ஒரு களையான முகம், அகன்ற நெற்றியும், திருத்தமான புருவங்கள், கூர்மையான மூக்கு , நல்ல ரோஸ் கலர் உதட்டு சாயம் பூசி , பவுடர் நிறுவனமே இவர்களை நம்பித்தான் இருப்பதுபோல கன்னத்தில் 1/2 இன் சுக்கு பவுடர் போட்டு தலை நிறைய பூ வைத்து அழகாக அசைந்து அசைந்து நடந்து  ஒவ்வொரு காரின் கதவையும் தட்டி காசு கேட்டு கொண்டு இருந்த ஒரு திருநங்கையை பார்த்துகொண்டு இருந்தாள். தன் கார் அருகில் வந்ததும் எங்கேயோ பார்த்த முகம்  போல  உள்ளது என்று சற்று உற்று பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே தலையில் கை வைத்து விட்டு கையை நீட்டினார் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு பேசலாம் என்று முகத்தை பார்ப்பதற்குள் அடுத்த காரை நோக்கி சென்று விட்டார் சிக்னலின் நிறம் பச்சை மாறிவிட்டது, எங்கேயோ பார்த்த முகம் என்று யோசித்துக்கொண்டே கிளினிக்கை அடைந்தாள்.

நோயாளிகளை பார்த்து முடித்து அனைத்து பணிகளும்  நிறைவடைந்ததும் டோக்கன் கொடுக்கும் செல்வி அறைக்குள் நுழைந்தாள்.

என்ன செல்வி இன்னும் யாராவது இருக்காங்களா? “

இல்ல மேடம்  எல்லாரையும் பார்த்தாச்சு.”

ஒரு தட்டில் பழம் பூ பத்திரிக்கையை வைத்து அடுத்த மாதம் கல்யாணம் மேடம் வீட்டுக்கு வந்து பத்திரிக்கை கொடுக்க முடியல தப்பா நினைச்சுக்காதீங்க என்று கொடுத்தாள்.

எந்த ஊரு? மாப்பிள்ளை என்ன பண்றாங்க? “

தாய்மாமா தான் மேடம் ஊர்ல விவசாயம் பார்த்துகிட்டு இருக்காங்க கல்யாணத்துக்கப்புறம் ஊருக்கு போயிடுவோம்.

வேற யாரையாவது இந்த வேலைக்கு சொல்லி விட்டுட்டு போறேன்என்றாள்.

பத்திரிக்கையை பார்த்ததும் மாப்பிள்ளை இன் பெயர் அகிலன் என்று இருந்தது.

அவளுக்கு அந்த திருநங்கையின் முகம் ஞாபகம் வந்தது ஆம் அது அகிலன் தான்.

காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் தன் சிறுவயது ஞாபகத்தில் ஆழ்ந்தாள்.

அகிலன்  சிறுவயதில் எதிர் வீட்டில் வசித்த நண்பன்.பால்ய பருவத்தில் தெருக் குழந்தைகள் அனைவரும் ஒன்றாக விளையாடுவோம். ஆறாம் வகுப்பு வரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது அகிலன் இடம் ஒரு வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது அவன் மற்ற ஆண் குழந்தைகளைப் போல விளையாடாமல் எங்களுடனே விளையாடுவான் சட்டையில் உள்ள அனைத்து பட்டன்களையும் போட்டுக் கொள்வான் பூவின் மென்மை ஒத்த மென்மையான குணம் உடையவனாக வெளிப்பட்டான். பள்ளியில் சக மாணவர்கள் அவனை மனதளவில் மிகவும் காயப்படுத்தினார்கள். இன்று காலை சிக்னலில் பார்த்து நிச்சயம் அவன் தான்.

ஒருமுறை அவன் வீட்டில் யாரும் இல்லாத பொழுது அவன் அக்காவின் உடைகளை அணிந்து பொட்டு வைத்து லிப்ஸ்டிக் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் அப்பா அதை பார்த்து  அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார்.

பாவம் அவன் அம்மா நீண்ட நாட்கள் அவனை எண்ணி அழுது கொண்டே இருந்தார்கள். அதன்பின் அவன் என்ன ஆனான் எங்கு போனான் என்று தெரியவில்லை.

இத்தனை ஆண்டு கழித்து அவனைப் பார்த்ததும் பேச முடியாமல் போய்விட்டதே அடுத்த முறை அவனை பார்த்தால் அழைத்துப் பேச வேண்டும் என்று அந்த சிக்னலின் ஓரம் வண்டியை நிறுத்தி தேடிப்பார்த்தால் தென்படவில்லை.

அடுத்த நாள் காலை அதே சிக்னலில் அவனைப் பார்த்ததும் காரைவிட்டு இறங்கி அகிலன் அகிலன் என்று அழைத்தாள்.

அகிலன் தானே நீங்கள்….. “

அழகாக சிரித்துக் கொண்டே 

இல்லை அகிலா நீங்க…”

என்ன தெரியலையா நான் தான் உன் சின்ன வயசு பிரெண்ட் சீதா

நல்லா இருக்கியா சரி நான் கிளம்புறேன்என்று நழுவ முயன்றார்.

வா  உன்கிட்ட பேசணும்என்று வற்புறுத்தி அழைத்துக் கொண்டு கிளம்பினாள்.

போகும் வழியில்

ஏன் அகிலன் எங்கு போன இத்தன வருஷம்? “

அகிலன் இல்ல அகிலா

சரி சரி எப்படி இருக்க அகிலா? “

இருக்கேன் என்னோட உலகத்துல சந்தோஷமா, என்னை இங்கேயே இறக்கி விடு சீதா உனக்கு எதுக்கு கஷ்டம்.

இதுல எனக்கு ஒரு கஷ்டமும் இல்ல நம்ம சின்ன வயசுல எவ்வளவு ஜாலியா விளையாடுவோம் ஞாபகம் இருக்கா .”

சொல்லு இத்தனை வருஷம் எங்க இருந்த எப்படி இருக்க

ஏதோ இருக்கேன் சீதா… நாங்க என்ன பாவம் செய்தோம் இது ஒரு ஹார்மோன் மாற்றம் இதில் எங்கு தப்பு என்ன இருக்கு இதை சுத்தி இருக்கிறவங்க புரிஞ்சிக்கிறது இல்லை. அன்னைக்கு மட்டும் அப்பா அதைப் புரிந்து இருந்தாரு நான் இப்படி பிச்சை எடுக்கிற நிலைமை வந்திருக்குமா சொல்லு.

என்னால யாரும் அவமானப்பட வேணாம்னு தான் வீட்டை விட்டே அன்னைக்கு போயிட்டேன்.

ரொம்ப கஷ்டப்பட்டேன் சீதா, ஒரு நாய்க்கு கூட சோறு வைப்பாங்க ஆனா எங்கள ஒரு நாயை விடக் கேவலமா பாப்பாங்க.

பாம்பேக்கு போயி ரொம்ப கஷ்டப்பட்டு ஆப்ரேஷன் முடிச்சுட்டு அப்படியே அங்க  இங்க பிச்சை எடுத்து போலீசுக்கு ரவுடிகளுக்கு மாமுல் கொடுத்து கிடைக்கிற காசுல அலங்கார பொருட்களை வாங்கி கிட்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு அப்படியே போயிட்டு இருக்கு…. 

எங்க குடியிருக்க? “

இங்கதான் பக்கத்துல, எங்களுக்கு வீடு கிடைக்கிறது கஷ்டம் அப்படியே கிடைச்சாலும் ரெண்டு மடங்கு வாடகை அதிகம்.

ஏன் அகிலா இப்பதான் ஆட்டோ டிரைவர், சர்வர் , சமீபத்தில்கூட மெட்ரோ ரயில்ல  உங்களை மாதிரி பல பேருக்கு வேலை கிடைச்சிருக்கு நீ ஏன் பிச்சை எடுக்குற.

சமுதாயத்தால் இருட்டடிப்பு செய்யப்பட்ட எங்க வாழ்க்கையில ஒளி ஏற்படுத்த சமூக நல குழுக்கள் போராடினாலும் எல்லாரையும் அது இன்னும் சென்றடையல.

அங்கே இங்கே நல்லது நடந்தாலும் இன்னும் நிறைய பேர் எங்களை தப்பான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறாங்க. இதனால எங்க சுயகௌரவம் மே கம்மி ஆயிடுச்சு சிலர் மதுவுக்கு அடிமை ஆயிட்டாங்க.

எங்களுக்கு இந்த தப்பான கண்ணோட்டம் வேண்டாம் இறக்கமும் வேண்டாம் என்று சீதாவை உற்றுப் பார்த்தார் அகிலா.

சரி வா கிளினிக்ல உனக்கு வேலை போட்டு தரேன் நீ தன்மானத்தோடு வாழலாம் என்று  சினேகத்தோடு அகிலாவை அழைத்துச் சென்றாள் சீதா.

…நன்றி…

பெங்களூரிலிருந்து 

ராதிகா விஜய்பாபு