அசோகமித்திரன் அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது படைப்புகள் யாவும் இன்றளவும் பிரபலமாக சிலாகித்து பேசப்பட்டு வருகின்றன என்பது யாவரும் அறிந்ததே. இமயத்தின் அழகை எப்படி மீண்டும் மீண்டும் வியந்து ரசித்து அங்கலாய்த்துக் கொண்டு இருப்போமோ அதுபோன்றே இதனையும் கருதும் மனநிலையிலேயே இந்த புத்தக அறிமுகத்தை வழங்கலாம் எனத் துணிந்தேன்.
முன்னதாக அசோகமித்திரன் அவர்களின் பல்வேறு சிறுகதைகளையும் “18 ஆவது அட்சக்கோடு” என்ற நாவலையும் சில வருடங்களுக்கு முன்னர் படித்து வியந்துள்ளேன். அதிலும் குறிப்பாக “18 ஆவது அட்சக்கோடு” நாவலை ஹைதராபாத்திலேயே வாழும் மனநிலையில் பிரிவினையின் வலியை துடிக்கத் துடிக்க அனுபவிக்கும் மனநிலையிலேயே படித்து உறைந்தது இன்றும் மனக்கண்முன் விரிகிறது.
இந்த “தண்ணீர்” நாவலும் அவ்வாறே புதியதோர் உணர்ச்சியை தரிசிக்க செய்வதாகவே உள்ளது எனலாம். என்ன ஒரு முரண்பாடு என்றால், இது தண்ணீர் பிரச்சனையை மையமாக கொண்டு எழுதப்பட்ட நாவல் என்பதால் நம்முடைய நா வறண்டு விம்மும் உணர்வை தருவதாகவே இந்நாவல் பயணிக்கிறது.
சென்னை நகர வீதிகளில் இயல்பாக நிலவக்கூடிய தண்ணீர் பிரச்சனையை இவ்வளவு தத்துரூபமாக எவ்விதம் காட்சிப்படுத்த முடிந்தது என்ற வியப்பு இன்னும் விடாத அடைமழையாக மனதிற்குள் அடித்துக்கொண்டே இருக்கிறது.
கதைக்கும், ‘தண்ணீர்’ என்ற இந்த தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று சிந்தித்துக்கொண்டே நாவலின் இறுதி வரை பயணிக்க வைத்துள்ளார் என்பதே எழுத்தாளரின் சாதனையாக நான் கருதுகிறேன். தண்ணீரை வெறும் உவமையாக மட்டும் கருதாமல் தண்ணீர் பிரச்சனையில் துவளும் இரு பெண்களின் கண்ணீர் கதையின் காவியமாகவே இதனை கருதவேண்டியுள்ளது.
ஜமுனா, சாயா என்ற இரண்டு சகோதரிகளின் வாழ்வின் எதார்த்தத்தை தண்ணீருடன் முடித்துவிடும் தொடர்பு பிரமிக்கத்தக்கது. சினிமா மோகம் கொண்டு தன் வாழ்வை தொலைக்கும் பல அபலைப் பெண்களின் வலியை ஜமுனா வழியாக காட்சிப்படுத்தியுள்ளார் அசோகமித்திரன் அவர்கள். திரைப்பட தாகத்தால் வாழ்வை தொலைக்கும் கதைதானே என்று அசட்டையாக எண்ணி விட இயலாது இந்த மகத்தான கலைப் படைப்பை.
தண்ணீருக்காக ஒவ்வொரு குடும்பத்திலும், அண்டை வீட்டார் இடையே நிகழக்கூடிய நிகழ்வுகளை அப்படியே நம் கண்முன் காணும் காட்சியாக சித்தரித்துள்ளார் என்று திடமாகக் கூறலாம். இதில் குறிப்பாக நான் வியந்த ஒரு விஷயம் என்னவென்றால் பொதுவாக நடைபெறக்கூடிய குழாயடி சண்டை இங்கு எவ்விடத்திலும் காட்சிபடுத்தப்படவில்லை என்பதேயாகும்.
கதைப் போக்கினூடே தண்ணீர் பிரச்சனையா? தண்ணீர் பிரச்சனையினூடே கதைப்போக்கோ? என்று வியக்கும் வண்ணமே விரிகிறது கதை. தண்ணீர் பிரச்சனையால் மக்கள் அடையும் துயரங்களையும் மாநகராட்சியின் அலட்சியத்தையும் அரசு நிர்வாகத்தையும் கேலி செய்யும் பாங்கு எள்ளலுடன் அமைந்து சிந்திக்கத் தூண்டுவதாக அமைந்துள்ளது.
தற்கொலைக்கு முயலும் ஜமுனாவின் வாழ்வை ஒளியூட்ட முனையும் டீச்சரம்மாவின் கதாபாத்திரம் கனத்த இதயத்துடன் அமைந்த உயரிய சிந்தனை உள்ள புதுமைப் பெண்ணாகவே வாழும் மனநிலையின் சாட்சிமையாகவே படைத்துள்ளார்.
ஜமுனாவிற்கும் டீச்சருக்கும் இடையே நடைபெறும் அந்த கலந்துரையாடல் காட்சி மிக மிக அற்புதமாக அமைந்திருந்தது என வியக்கலாம். வாழ்வின் சிக்கல்களைக் கண்டு பயந்து அல்லல்படும் ஒவ்வொரு பெண்ணும் குறிப்பிட்ட அந்த அத்தியாயத்தை படிப்பது மிக மிக அவசியம் என நான் கருதுகிறேன்.
![தண்ணீர் [Thanneer] by Ashokamitran](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1366639287i/17838225._SS318_.jpg)
இந்த நாவலில் நான் ரசித்த சில வசனங்களை இங்கே பதிவிடுவது சிறப்பாக இருக்கும் என்றே கருதுகிறேன்.
“பொண் ஜென்மம் எடுத்தா அழலாமா? அழாம பல்லைக் கடிச்சுண்டு இருக்கிறதுக்குத்தானே இல்லாத அவதிகளோட பொண்ணாய்ப் பிறக்கிறது”
“உன்னைப் பத்தி யாராவது கவலைப்பட்டாத்தான் உனக்கு அவங்களைப் பத்திக் கவலைப்பட முடியுமா? ரொம்பச் சின்னத்தனமாயில்லே? ஏன் இப்படி ஏழையாயிருக்கே? உனக்கு மேலே ஒரு கூரையிருக்கு….”
” நான் என் செக்குக்குத் திரும்பிப் போக நாழியாயிடுத்து. ரொம்ப நாழியாயிடுத்து.”
எளிய மனிதர்களின் வாழ்வியலோடு அமைந்த அற்புத படைப்பு இது. ‘சாயா’ என்ற கதாபாத்திரம் தன் மூத்த சகோதரியான ஜமுனாவை நல்வழிப்படுத்த துடிக்கும் இனிய பாத்திரமாக அமைத்துள்ளார். அப்பெண்ணின் மணவாழ்க்கையும் வறண்டு இருப்பது துரதிர்ஷ்டவசமாகவே உள்ளது.
தண்ணீர் பிரச்சனையையும் அதனால் மக்கள் அடையும் அவலத்தையும் காட்சிப்படுத்த விரும்பி இந்த நாவலை படைக்கும் பொருட்டே இதற்கு தண்ணீர் என்று பெயர்க் காரணம் சூட்டியது கனகச்சிதமாக பொருந்துகிறது என்று உறுதியாக நம்பலாம்.
இதனை இந்நாவலில் வரும் பின்வரும் வாக்கியத்துடன் பொருத்திப் பார்ப்பது சாலச் சிறந்ததாகும்.
” இப்போ பகவானே வந்தாக்கூட கொஞ்சம் திண்ணையிலே காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பாத்துட்டு வரோம்னுதான் சொல்வோம்”
படைப்பின் ரகசியமே அதனை படிப்பவர்களுக்கு புதியதோர் பரவசத்தையும் பரிணாமத்தையும் காட்சிப்படுத்துதலில் அடங்கியுள்ளது என்பதை நிதர்சனமான காட்டும் புதுமை படைப்பே இது.
வாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள்.
நன்றி.
தண்ணீர்
அசோகமித்திரன்
நற்றிணை பதிப்பகம்
பக்கங்கள் 112
₹.90
பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை.
தண்ணீர் விமர்சனம் படிக்கும் போதே கண்ணீரால் நனையவைக்கிறது. அருமை