தண்ணீர் என்றோர் அமுதம் : நூல் அறிமுகம்
தண்ணீரும் சர் சி வி ராமனும்
நூலின் தகவல்கள் :
நூல் : தண்ணீர் என்றோர் அமுதம்
நூலாசிரியர்: சர் சி வி ராமன்
மொழியாக்கம் : எழுத்தாளர் கமலாலயன்
விலை : ரூபாய் 25/-
வெளியீடு: புக் ஃபார் சில்ரன்
தொடர்பு எண்: 04424332924
மனித குலத்திற்கும் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானது தண்ணீர்.
இந்தத் தண்ணீர் குறித்து “தண்ணீர் என்றோர் அமுதம்” என்ற தலைப்பில் 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசை பெற்ற முதல் இந்தியரும் அறிவியல் அறிஞருமான சர் சி வி ராமன் நூல் எழுதி உள்ளார். அறிவியல் அறிஞர் சர் சி வி ராமன் எழுதியுள்ள நூலினை எழுத்தாளர் கமலாலயன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இது நூலினை புக் ஃபார் சில்ரன் ஓங்கில் கூட்டம் இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளார்கள்.
நாம் அனைவரும் அன்றாட ம் ஏதாவது ஒரு வகையில் தண்ணீர் பிரச்சினை குறித்து தினசரி நாளிதழ்கள் அல்லது தொலைக்காட்சியிலோ அறிந்து கொண்டே இருப்போம்.
காவேரி நீர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை இதுபோன்று ஏதாவது ஒரு செய்தி நம் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் தண்ணீரின் எதிர்காலம் குறித்து அந்த காலகட்டத்திலேயே அறிவியல் அறிஞர் சர் சி இராமன் தண்ணீர் என்று ஒரு அமுதம் நூல் எழுதியுள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது. எப்படி எல்லாம் நாம் தண்ணீரை பயன்படுத்த போகிறோம் எதிர்காலத்தில் என்னென்ன பிரச்சனைகள் நமக்கு எழும் என்பதை எல்லாம் சிறிய நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.
காடுகளை நாம் அழித்துக் கொண்டே வருகிறோம். இயற்கைச் சூழல்களை இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டே இருக்கிறோம். இதன் காரணமாக பருவமழை குறைந்து எப்போதும் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருப்பதை உணர்ந்து கொண்டே உள்ளோம்.
கடும் வெப்பம் இருப்பது போன்று கடும் மழை பொழிய தொடங்கியுள்ளது. அதீத மழை பெய்வதன் காரணமாக மிகக் கடுமையான வெள்ளச் சூழலில் திணறிக் கொண்டுள்ளது மாநகரங்கள் உட்பட கிராமங்கள் வரை.
இப்படிப்பட்ட சூழலில் தண்ணீரை சேமித்து வைக்க இயலாமல் வீணாக கடலில் சென்று கலப்பதையும் நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். ஏராளமான ஏரிகள் குளங்கள் நீர் நிலை பகுதிகள் வீடுகளாகும் அரசு அலுவலகமாகவும் மாறிக்கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறோம்.
பெருநகரங்களில் மழை பொழிவு காலத்தில் வீட்டில் உள்ள வாகனங்களை உயரமான இடத்தில் கொண்டு போய் நிறுத்தி அதை பாதுகாப்பதற்கு முயற்சிக்கும் நாம் இந்த நீர் வீணாகாமல் இருப்பதற்கும் சேமிப்பதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும்.
கடல் நீரை குடிநீராக மாற்றுவதற்கு ஏற்பாடும் நடந்து வருகிறது சில நாடுகளில் பெரும் ஆராய்ச்சியும் செய்து வருகின்றனர்.
இது போன்ற பல்வேறு விஷயங்களை சிறிய நூலில் மிக எளிமையாக நமக்கு வழங்கி உள்ளார் அறிவியல் அறிஞர் சர் சி வி ராமன். எனவே நீர் என்ற அமுதத்தை முறையாக பெற்று முறையாக பயன்படுத்தி முறையாக சேமித்தால் இந்த உலகில் வாழும் மனித குலம் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சிரமம் இன்றி வாழ முடியும்.
குழந்தைகளிடமும் மாணவர்களிடமும் கொண்டு சென்று இந்நூலை வாசிக்க வைக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
நூல் அறிமுகம் எழுதியவர் :
MJ பிரபாகர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.