நூல் அறிமுகம்: *தனுஜா* – கி.ரமேஷ்தனுஜா
கருப்புப் பிரதிகள்
பக்கம்: 352
விலை: ரூ.330.
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thanuja-izha-thirunankaiyin-payanamum-poratamum/

இன்று ஒருநாள் சிறிது உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வெடுக்கலாம் என்று விடுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். இன்றைய தினத்தை திருநங்கை தனுஜா ஆக்கிரமித்துக் கொண்டார். தனுஜாவின் சுயசரிதை புத்தகத்தை பாரதி புத்தகாலயத்திலிருந்து வாங்கி வந்திருந்தேன். அவருடைய வாழ்க்கையை இன்று படித்தேன். திருநங்கைகளின் வாழ்க்கை மிகவும் துன்பம் மிகுந்தது என்பது மேலோட்டமாகத் தெரிந்தாலும், இவ்வளவு துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பது மிகவும் சோகமானது.

இயற்கை செய்யும் சிறு தவறுகள் ஆண் உடலில் பெண்ணாகவும், பெண் உடலில் ஆணாகவும் உருவாக்கி விடுகிறது. ஷி-மேல் என்ற ஒரு வகையைப் பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். இன்னும் நிறைய வகையினர் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் இவ்வளவு மனக்குமுறல்கள் இருக்கும் என்பது சொன்னால்தான் தெரிகிறது. சிறு வயதில் பலரையும் ஒம்போது என்று கேலி செய்யும்போது, பல திரைப்படங்களில் சுருளி ராஜன் ஒம்போது என்று சொல்லும்போது, திரைப்படங்களில் அவர்களைக் கேலிப்பொருளாகக் காட்டும்போது அவர்களது மனம் எவ்வளவு வலிக்கும் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மனித குலமே திருந்த வேண்டும். அவர்களை மனிதர்களாக நினைத்து மதிக்க வேண்டும். இதுவரை அவர்களைப் படுத்தியது போதும்.

நான் பம்பாயில் வேலை செய்தபோது, தில்லிக்கு ரயிலில் பயணிக்கும்போது, தெருக்களில் செல்லும்போது அவர்கள் வந்து கையைத் தட்டுகையில் நமக்கு ஒரு வெறுப்புதான் தோன்றுகிறது. ஆனால் அவர்களை வாழ விடாமல் செய்தது, செய்வது இதே சமூகம்தான் என்பதை அறியும்போதுதான் அவர்களுக்குச் சரியான வாழ்க்கை கிடைக்கும். அத்தகைய ஒரு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் ஒரு திருநங்கைதான், இன்னும் சரியாகச் சொன்னால் பெண் தான் தனுஜா. சிறு வயதிலேயே பெண் தன்மையுடன் இருந்ததால் கடுமையான பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார். தந்தை, மாமா, அண்ணன் என்று பலரிடமும் கடுமையாக அடிபட்டிருக்கிறார். பல்வேறு ஆண்களால் காதல் என்ற போலி உணர்வில் மயங்கிக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். நல்லவேளையாக அவரைத் திருநங்கை சமுதாயம் கைதூக்கி விட்டிருக்கிறது. எனினும், அவர்களில் மிகவும் சிலபேர்தான் மிகவும் எச்சரிக்கையுடன் படிப்பை முடித்தவுடன் தம்மைத் திருநங்கைகளாக அறிவித்துக் கொண்டு பாலின மாற்றச் சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் கைதட்டிக் காசு கேட்டும், பாலியல் தொழிலிலும் ஈடுபட்டுத்தான் தமது வயிற்றை நிரப்ப வேண்டியிருக்கிறது.

தனுஜாவும் ஓரளவு இரண்டிலும் ஈடுபட்டிருக்கிறார். ஏராளமானோர் அவர்மீது காதல் என்று சொல்லி உறவுக்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். போதாத குறைக்கு இவரிடம் காசையும் கறந்துள்ளனர். எந்த ஒளிவு மறைவுமில்லாமல் தான் பட்ட கஷ்டத்தை எல்லாம் கொட்டித் தீர்த்திருக்கிறார் தனுஜா. தன்மீது மிகவும் வெறுப்புக் காட்டிய தனது சொந்தக் குடும்பம் போகப்போகத் தன்னைப் பெண்ணாக ஏற்றுக் கொண்டதை மகிழ்வுடன் பதிவிடுகிறார். அவருக்கு ஒரே ஆதரவாக முதலில் அக்காதான் இருந்துள்ளார். ஆனால் நாள்பட நாள்பட அடித்தே பழக்கப்பட்ட அண்ணனின் பாசமும், ஆதரவும், தன்னை ஒரு பெண்ணென அன்னையின் அங்கீகாரம் பெற்றதையும் அவர் சொல்லும்போது அவரது மகிழ்ச்சி அடக்கமாட்டாமல் வெளிப்படுகிறது. கடைசியில் எந்த மாமா தனது பெண் தன்மையை மாற்றச் சொல்லி அடித்தாரோ அவரே இவரிடம் உடலுறவு கொண்டதையும் சொல்கிறார். அதை ஒரு பழிதீர்த்தலாகச் சொல்கிறார்.

இந்தப் புத்தகத்தைப் படித்ததில் என்னுடைய ஒரு பழைய தோழியைச் சந்தித்தேன். ஆம், என்னுடைய ஒரே திருநங்கைத் தோழி ஏஞ்சல் உண்மையாகவே ஒரு தேவதையாக தனுஜாவுக்கு உதவியிருக்கிறார். பல காலமாக அவருடைய தொடர்பு விட்டுப் போயிருந்தது. அவர் இப்போது கனடாவில் வேலை செய்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தேன். அவர் பாரதி புத்தகாலயத்தில் வேலை செய்தபோது அவருடைய நட்பு எனக்குக் கிடைத்தது. வாழ்க நீ ஏஞ்சல்.

என்ன சொல்வது என்று புரியவில்லை. அவர்களும் மனிதர்களே. ஏ சமூகமே அவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர்களை வாழவிடு.