இசைப்பாடல்: தப்புச் செய்தவன் வருந்தியாகணும்
——————————————————————————-
கருவூர்…
கருக்கலைந்த ஊராய்–அல்ல
உருக்குலைந்த ஊராய்
கண்ணிமைக்கும் நேரத்தில்
நாற்பது பேர்
மூச்சுத்திணறலால்
மூர்ச்சையாயினர்
தங்களின்
கனவு நாயகனைக்காண
காலை முதலே
கால் கடுக்க நின்றகூட்டம்
உண்ண உணவின்றி
குடிக்க நீரின்றி
உச்சி வெயிலின்
கோர தாண்டவத்தில்
உழன்று கொண்டிருந்தனர்
நிழலாகக் கண்டவரை
நிஜத்தில் காணலாம் என்று…..
காண வந்தோர்க்கு
ஏற்பாட்டாளர்கள் அறிவிப்பு
நண்பகலில் நாயகன் வருவாரென்று
நாயகன் வந்ததோ ஏற்பாடு
எப்பாடுப்பட்டிருப்பர் சனங்கள்
என்றறியாமல்
உல்லாச வேனிலே அமர்ந்து
உன்னதமாய் ஒரு ரோடு ஷோ…
இங்கேயே பேசுங்கள்
காவல்துறை வேண்டுகோள்
நான் ஒரு தடவை முடிவு செய்தால்
என் பேச்சை நானே கேட்க மாட்டேன்
பிடிவாதமாய் புறப்பட்ட நாயகன்
விளக்கணைத்து விளக்கணைத்து
வீதியிலே விளையாட்டு
இரண்டு கிலோமீட்டர் கடக்க
இரண்டு மணி நேரம்
காலதாமதமாய் வந்ததனால்
காணாமல் போயின குழந்தைகள்
குழந்தைகளைக் காணவில்லை
தேடிக் கண்டுபிடியுங்கள்
அறிவிப்பு செய்துவிட்டு
ஆட்டத்தைத் தொடர்கின்றார்….
பாட்டிலுக்கு பத்து ரூபாய்
பாடி ஆடினார் நாயகன்
பாட்டிலை விழுங்கி வந்தோர்
வானரக் கூட்டங்களாய் மரத்தின் மீது
மரக்கிளைகள் ஒடிந்துவிழ
மயங்கிய நிலையில்
குழந்தைகளும் முதியவர்களும்
வாட்டர் பாட்டிலைத் தூக்கி எறிந்து விட்டு
நடிப்பைத் தொடர்கிறார் மெர்சலாய்
கூட்டத்தின் கூக்குரல்
குருவிக்குக் கேட்கவில்லை
அதன் பின்பு
அரியணையில் அமரலாம்
அதிசயத் தமிழ் மகனே…..
தவறு என்பது தவறிச் செய்வது
தப்பு என்பது தெரிந்து செய்வது
தவறு செய்தவன் திருந்தப்பார்கணும்
தப்பு செய்தவன் வருந்தியாகணும் …
*************************************************************
***********************************************
📚 எழுதியவர் :
✍🏻 கு. மணி
த/பெ: குருசாமி
தெற்குப்புதுத்தெரு
சக்கம்பட்டி- 625512
ஆண்டிபட்டி வட்டம்
தேனி மாவட்டம்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

