தர்ப்பண சுந்தரி(Tharpana Sundari)-எஸ்.வி.வேணுகோபாலன்
 
கவித்துவ வாசிப்பில் கவரும் சிறுகதைகள்
எஸ் வி வேணுகோபாலன் அவர்களது  தர்ப்பண சுந்தரி தொகுப்பின் 16 சிறுகதைகளும் சிறப்பு.  எழுத்து நடை படிப்பதற்கு எளிதாக – கவித்துவத்துடனும் உள்ளது.
ஒவ்வொரு‌ சிறுகதையைப் படித்து முடித்தவுடன்‌ அடுத்த கதையைப் படிக்க ஆவலாக இருந்தது.
‘இருட்டுப் புழுக்கத்துக்கு ஒளி விசிறி பஸ் ஓடிக் கொண்டிருந்தது’ என்ற ஒரு வரி கவிதையே கதையாக நீண்டதோ என்று தோன்றுகிறது  *கோடை* சிறுகதை.
*சூடாமணி மாமி* கதையில் ரசம் என்பது சமஸ்கிருத சொல் என்பதையும் அதற்கு நல்ல தமிழில் சாற்றமுது என்ற சொல் உண்டென்பதையும் அறிந்துகொண்டேன்.. சூடாமணி மாமியைப் போல் ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போ என்று சொல்லுவோர் இல்லாததால் தான் இப்போது டீக்கடைகளும் கையேந்தி பவன்களும் பெருகிவிட்டன என்பதை குறிப்பால் உணர்த்தும் கடைசி வரி.
 *தர்ப்பண சுந்தரி* சிறு கதையில் சுற்றுலா பேருந்தை எதிர் நோக்கும் இரு கதை மாந்தர்களில் ஒருவர்  ‘டூரிஸ்ட் கெய்டு’ கேசவய்யங்கார், மற்றொருவர் இளநீர்‌ கடைக்காரி நாகலஷ்மி. இருவருக்கும்‌ உறவாக சுற்றுலா பயணி இளம்பெண். கலப்பு திருமணத்தை மையப்படுத்தி. வருகிறது . மேல் சாதி தாத்தாவிடம்  தனது உறவை மறுத்துத் தாழ்த்தப்பட்ட சாதி  அத்தையிடம்‌ உறவாடும் இளம்பெண். இன்னும் கதை நீளும்  என்று பக்கத்தைத் திருப்பி ஏமாந்தேன். இது ஒரு நாவலின்‌ சிறு பொறி எனத் தெரிகிறது. விரைவில் இந்தக் கதைக்களத்தில் ஒரு நாவலை எதிர்பார்க்கிறோம்.  தலைப்புக்கேற்ற ஓவியம், கதாசிரியருடைய மகள் இந்து வரைந்திருப்பது மிக அருமை.
*இன்றோடு எல்லாம் முடிந்தது*  கதையில் புரட்சி திருமணத்தில் ஆரம்பித்து, மண நாளில் நடந்த உரையாடலில் மனம் பதற்றத்துடன்‌ நகர புதுமைப்பெண் என்ன முடிவெடுப்பாள் என்று நினைக்கையில் கதையின் தலைப்பு வேறு ஞாபகம் வர, திடீர்த் திருப்பமாய் கதாநாயகன்‌ உண்மையைச் சொல்ல மனதில் அமைதி வந்தது. உண்மை நிகழ்வின் கதை வடிவமாக இருந்திருக்கவேண்டும். அருமையாக அமைந்துள்ளது கதை.
 *முட்டுச் சந்து* கதையில்  அந்த பாட்டி இறந்தபின் தாத்தாவை அழைத்து வரும்போதுதான் இருவரும் வெவ்வேறு பிள்ளைகள் வீட்டில் இருப்பது தெரிய வருகிறது. இன்றைய காலகட்டத்தில் பெற்றோரைப் பிள்ளைகள் பிரிக்கும் வேதனையான சூழலை  உணர்த்துகிறது.
எழுத்தாளர், தனது வாழ்வில் சந்தித்த சிறு துகள்கள் தான் இச் சிறுகதைகள் என்று பிடிபடுகிறது.  பாராட்டுதல்கள்.

நூலின் தகவல்கள்: 

நூல்: தர்ப்பண சுந்தரி
ஆசிரியர்: எஸ்.வி.வேணுகோபாலன்
விலை: ₹.120.00
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

அறிமுகம் எழுதியவர்: 

எழிலரசி கோவிந்தராஜன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *