“நாம் அன்பு செலுத்திய ஒருவர் நம்மைவிட்டு விலகிச்செல்லும்போது, அவர்
அதுவரை காட்டிய அன்பின் காரணமாக அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல்
விட்டுவிடுவதா அல்லது அவர்மீது கோபித்துக்கொள்வதா? அதனைக் காலம்தான்
தீர்மானிக்கும். இருந்தாலும் மனது என்று ஒன்று இருந்து பாடாய்
படுத்துகிறதே அதனை என்ன செய்ய?” இது தர்ப்பண சுந்தரியின் தந்தையாரின் மன
நிலை மட்டுமன்று. அவரைப் போன்ற குணம் படைத்தோரின் மன நிலையே.
1979 முதல் 2019 வரை எஸ்.வி.வேணுகோபாலன் எழுதிய 16 சிறுகதைகளை உள்ளடக்கிய
நூலில் அதிகம் பாதிப்பைத் தந்தது தர்ப்பணசுந்தரி. “என் ஜென்ம பிராரப்தம்,
எல்லாம் முடிஞ்சு போச்சு, கேட்காதே சுந்தரியைப் பற்றி” என்று சொல்லிக்
கொண்டு அவர் அழ ஆரம்பிக்கும்போது தன் மகள் வைத்திருந்த பாசத்தை உணர
முடிகிறது. எந்த அளவிற்குப் பாசம் வைத்திருந்தால் அந்த அளவிற்கு அவர்
அவ்வாறு கூறியிருப்பார். ஒருவர்மீது வைக்கப்படும் பாசத்தைவிட, அதனை
இழக்கும்போது அடைகின்ற சோகத்தை சொற்களால் விவரிக்க முடியாது.
பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டிருந்தாலும் அனைத்துமே
எக்காலத்திற்கும் பொருந்துவதைப் போல இருப்பதைக் காணமுடிகிறது.
குடும்பத்தில் இருந்துகொண்டு மிகவும் நெருக்கமாக பழகுதல் தொடங்கி, சமூக
அவலத்தைக் கண்டு கொதித்தெழுவது வரை மிகவும் அனாயாசமாக எழுத்தைக்
கையாண்டுள்ளார். ஆசிரியரின் நடை இதுதான் என்று வரையறுத்துச் சொல்லமுடியாத
அளவிற்கு வெவ்வேறு நடையில் யதார்த்தத்தை நம்முன் கொண்டு வந்துள்ளார்.
இன்றோ நாளையோ என்று நிமிடங்களை யுகங்களாகக் கழித்துக்கொண்டிருக்கும்
உயிரைப் போகவிடாமல் தடுக்க யத்தனிக்கின்ற பிற உயிர்களின் தவிப்பை
உணர்த்துகிறது ‘கடைசி நாள் படுக்கை’. உத்தரவு வாங்கிக்கவா என்று அக்கா
கேட்கும்போது அவள் சாகக்கூடாது, சாக மாட்டாள் என்ற எண்ணம் படிப்பவர்
மனதில் இயல்பாகவே வந்துவிடுகிறது.
நம் மக்களின் ஈரமற்ற குணத்தை வெளிப்படுத்துகின்ற ‘தீர்த்தம்’. இக்கதையைப்
படித்தபோது பாலசந்தரின் பட்டினப்பிரவேசம் திரைப்படத்தில் வருகின்ற,
பட்டினத்தில் பிழைக்கப்போன குடும்பத்தார் குடிக்க தண்ணீர் கேட்கும்
காட்சி நினைவிற்கு வந்தது.
ஏதாவது சாப்பிடாது போகக்கூடாது, உள்ளே வந்து உட்காரு என்று ‘சூடாமணி
மாமி’ சொல்வதுபோல ஏற்படுகின்ற உணர்வு பாசத்தின் ஆழத்தை
வெளிப்படுத்துகிறது. மனதில் ஏதோ வெற்றிடம் ஏற்பட்டதைப் போல உணர
முடிந்தது. இப்போதெல்லாம் மாமியைப் போன்றோரைக் காண்பது அரிது. எங்குமே
வறட்டுச் சிரிப்பையும், பொருளற்ற வார்த்தைகளையேதான் நாம்
கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
நிறைவான வாழ்வினை வாழ்ந்து சென்றுவிட்டால்கூட சிலரது மரணங்கள் அதிக
பாடத்தைத் தந்துவிடும் என்பதை உணர்த்தியது ‘முட்டுச்சந்து’. போயிட்டாளா
என்ற தாத்தா நல்லதுக்குத்தான் என்கிறார். அந்த ஒரு சொல்லில்தான் எவ்வளவு
பொருள். தாத்தாவால், வேறுவழியின்றி, ஜீரணிக்க முடிந்தால்கூட படிக்கும்
நம்மால் அதனை ஜீரணிக்க முடியாதுதான்.
கால இடைவெளி எவ்வித வேறுபாட்டையும் வாசிப்பவருக்குத் தரவில்லை. குழந்தை
ஏங்குவது பசிக்காகவா, தூக்கத்திற்காகவா என்ற விவாதத்தை முன்வைக்கும்
‘கோடை’, ரசனை தெரியாத உலகை வெளிப்படுத்துகின்ற ‘கவித்துவம்’,
நாடகப்பாணியில் அமைந்த ‘இன்னோடு எல்லாம் முடிந்தது..’ அமைதியாக ஒரு
பிரச்னையை முடிவுக்குக் கொணர்ந்த ‘சோறு’, குற்றம் செய்த நெஞ்சு
குறுகுறுக்கும் என்பதை உணர்த்துகின்ற ‘மாநகர்ப் புதைக்குழி’, எப்பொழுதோ
கூறப்படுகின்ற அறிவுரையும், அறவுரையும் ஓர் உயிரையே காப்பாற்றும் என்பதை
வெளிப்படுத்துகின்ற ‘நெருப்பின் அருகே’ என்ற வகையில் ஒவ்வொரு கதையும்
பொருள் பொதிந்ததாக சிறப்பாக அமைந்துள்ளது.
வாழ்வின் யதார்த்தங்களை, சிறுகதைத் தொகுப்பாகக் கொணர்ந்த ஆசிரியருக்கு
மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ஆசிரியர் : எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691)
நூல் : தர்ப்பண சுந்தரி
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை
600 018 (044-24332424, 24332924, 24356935, [email protected])
பதிப்பாண்டு : டிசம்பர் 2019
விலை ரூ.110