"தசமபாகம்" சிறுகதை (Thasamabagam Short Story) - பூ. கீதா சுந்தர் (Geetha Sundar) | சிறந்த தமிழ் சிறுகதைகள் PDF

“தசமபாகம்” சிறுகதை – பூ. கீதா சுந்தர்

“தசமபாகம்” சிறுகதை

” அப்பா, எனக்கு கொஞ்சம் டிரஸ் வாங்கணும்.. பணம் வேணும் பா…” என்றாள் பிளஸ்ஸி.

” சரிம்மா, ஆண்டவர் கிட்ட ஜெபத்துல வைக்கிறேன்..” என்றார் சாலமன்.‌

” என்னப்பா நீங்க …காலேஜ்க்கு போட்டு போறதுக்கு நல்ல டிரஸ் இல்ல, கிழிஞ்சி இருக்குன்னு கேட்டா, ஜெபத்துல வக்கிறேன்னு சொல்றீங்க.. நீங்க எப்பப்பா வாங்கி தருவீங்க…? “

” கேட்டுட்ட இல்லம்மா கண்டிப்பா கிடைச்சுடும் சரியா.. நீ போ ..” என்று மகளை அனுப்பி வைத்தார்.‌

மனைவி ஜெஸ்ஸி மூச்சு வாங்க அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள்.

” என்ன ஜெஸிம்மா இப்டி மூச்சு வாங்குது…?” என்று கேட்டார்

” ஆமாங்க, மாத்திரை தீந்து போச்சு வாங்கணும் இந்த மாத்திரை போடலன்னா ரொம்ப மூச்சு இழுத்து வருதுங்க.. ” என்று கையில் இருந்த மாத்திரை அட்டையை காட்டிக் கூறினாள்.

” நான் அதுக்கு தான் சொன்னேன், கடவுள் கிட்ட இருக்கிற நாம மருந்து மாத்திரை எல்லாம் போடக்கூடாது, ஆண்டவர் காப்பாத்துவாருன்னு‌ … நம்பிக்கையோட இருக்கனும், எங்க நான் சொன்னத நீங்க கேட்டா தானே.. சரி விடு, தசம பாகம் வரும் வாங்கலாம் … ” என்றார்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய மூத்த மருமகள், அவள் கணவரிடம் சென்று,

” ஏங்க, யார் எது கேட்டாலும் அப்பா இப்டியே சொல்லிட்டு இருக்காரு.. நீங்களாச்சும் ஏதாவது வேலைக்கு போகக் கூடாதா.. வீட்ல எவ்வளவு கஷ்டம் இருக்கு, சின்ன குழந்தை வச்சிருக்கோம், குழந்தைக்கு வேண்டிய சாப்பாடு கூட சரியா கொடுக்க முடியல ” என்றாள்.

” நானா போக மாட்டேன்னு சொல்றேன்? அவர் விட்டா தான, சரி பேசி பார்க்கிறேன் ” என்று அப்பாவிடம் சென்று,

” அப்பா ஊழியம் வரும்போது நான் போய் ஊழியம் பண்றேன் பா.. பிரசங்கம் கூட பண்றேன், மத்த நேரத்துல நான் சும்மாதானப்பா இருக்கேன் ஏதாவது வேலைக்கு போறேன் பா, கொஞ்சம் வீட்டு கஷ்டத்தை சமாளிக்க முடியும் இல்லப்பா” என்று கேட்டான்.

” டேய், ஆண்டவருக்கு ஊழியம் பண்றவங்க வேற யாருக்கும் ஊழியம் பண்ண கூடாது டா, போ .. போயி சர்ச்சை பெருக்கி சுத்தம் பண்ணி ரெடி பண்ணு, பிரசங்கம் இருக்கு என்று கூறி அவனையும் அனுப்பி வைத்து விட்டார்.

” தாத்தா, அம்மாகிட்ட பிஸ்கேட்டு கேட்டடா கூட இல்ல சொல்றாங்க.. நீ வாங்கி தா, தாத்தா… என் தொப்பைக்குள்ள சத்தம் சத்தமா வருது.. நீ பாரேன் தாத்தா.. ” என்று தாத்தாவின் கையை எடுத்து வயிற்றின் மேல் வைத்துக் கொண்டது பாப்பா. எல்லாருக்கும் எதாவது பதிலை சொன்ன அவரால் தன் பேர குழத்தைக்கு சொல்ல பதில் இல்லை..

டேவிட்டுக்கு இதெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் வருத்தமாக இருந்தது சாலமனின் இரண்டாவது மகன் தான் டேவிட்.

‘ வீட்ல இத்தனை பேர் இருக்கோம் ஆனா, வீட்டுக்கு ஏத்த வருமானம் இல்லையே, அப்பா ஏன் இதெல்லாம் புரிஞ்சிக்கவே மாட்றார் ..பணத்துக்கு என்ன தான் பண்றது..” என்று தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தான்.

” பாய் ஒரு டீ போடுங்க… ” என்று கூறி விட்டு அங்கே இருந்த பெஞ்சில் உட்கார்ந்தான் சேகர்.

” என்ன பா இன்னக்கி கச்சேரி இருக்கா… “

” ஆமா பாய் இருக்கு.. கொரானா டயத்துல கச்சேரி இல்லாம எவ்ளோ கஷ்டமா போச்சி.. இப்ப தான் அப்டியே ஒன்னொன்னா வருது, ஆனா இன்னைக்கு கச்சேரிக்கி ட்ரம்மர் கிடைக்கல.. பாடகர் கிடைக்கல, மாசம் பூரா சும்மா இருக்கறோம், ஆனா ஒரே நாள்ல மொத்தமா கச்சேரி வந்து எல்லாரும் பிசியா இருக்காங்க… என்ன பொழப்பு இது.. அதான் இங்கே வந்தேன்.. ” என்று சலிப்பாக பேசினான் சேகர்.

வண்ணார பேட்டையில் அந்த டீ கடை நீண்ட வருடங்களாக இருக்கிறது. மெல்லிசை கச்சேரி நடத்துபவர்கள் எப்போதும் அங்கே தான் கூடுவார்கள். டீ குடிக்க மட்டும் இல்லை. அவர்களில் யாருக்காவது கச்சேரி இல்லை என்றால் அதற்கான கலைஞர்களை அங்கு தான் அவர்கள் உறுதி செய்வார்கள். ஏனெனில் கச்சேரி இல்லாதவர்கள் கூட அங்கு வந்து விடுவார்கள். அதனால் ஆட்கள் தேவையானவர்களுக்கு ஆட்கள் கிடைத்து விடுவார்கள், கச்சேரி இல்லாதவர்களுக்கு கச்சேரி புக் ஆகி விடும் .

அந்த நேரத்தில் சேகர் மட்டும் தான் அன்று வந்து இருந்தான். சிறிது நேரம் பொறுத்து டேவிட் வந்தான். டீ சொல்லி விட்டு சேகர் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.

சேகருக்கு முகம் பிரகாசமாகி விட்டது. ஏனென்றால் டேவிட் டிரம்ஸ் வாசிப்பவன்.

” டேவிட்டு, எப்டிகீற டா…’

” ஏதோ இருக்கேன் ண்ணே.. ” அவன் குரல் கம்மியது.

” இன்னாடா டல்லாக்குற.. ஏதாவது பிரச்சனையா..” என்று கேட்டவன்,
‘ ஆமா நமக்கு பிரச்சனை இல்லனா தான் ஆச்சரியம் ‘ என்று தனக்கு தானே கூறி கொண்டான்.

” அத்த ஏண்ணா கேக்கற… வீட்டு பிரச்சனை தான்.. வருமானமே இல்லாம எவ்ளோ நாள் தான் ஓட்றது..”

” இன்னாடா சொல்ற? உங்க வீட்ல நீ, உன் அண்ணன், உங்க அப்பா இத்தனி பேரு சாம்பாதிக்கிறீங்க… அப்பறம் ஏன்டா இவ்ளோ கஷ்டம்..? “

” ஆமா, ஆள் கணக்கு சொல்லிக்க வேண்டியது தான்.. எங்க அம்மாக்கு ஒடம்பு சரி இல்ல.. அவங்களுக்கு வைத்தியம் பாக்கணும், தங்கச்சி இப்ப தான் படிச்சிட்டு இருக்கா, என் அண்ணன் அண்ணி, அவங்க குழந்தை.. இத்தினி பேருக்கும் ஏத்த வருமானம் இல்லையேண்னே… “

” சொந்தமா சர்ச் வச்சி இருக்கீங்க.. அதுல வருமானம் வருது இல்ல.. “

” இப்டி தான் உன்ன மாதிரியே எல்லாரும் நெனைச்சிட்டு இருக்காங்க.. சர்ச்சுக்கு எல்லாம் முன்ன மாதிரி எல்லாம் ஆள் வர்றது இல்ல, அப்டியே ஒன்னு ரெண்டு பேரு வந்தாலும் தசமபாகம் போடறது இல்ல. பத்து,பத்து ரூபா கூட கேட்டு கேட்டு தான் வாங்க வேண்டியதா இருக்குது.. “

” இன்னடா சொல்ற, உங்க அப்பா அந்த சர்ச் வச்சு தான இந்த அளவுக்கு வந்தாரு. நீங்க வீடு கட்டி இருக்கிற இடம் கூட அவர் அப்படி சம்பாதித்தது தான். இவ்ளோ நாளா நல்லாதானே போயிட்டு இருந்துது இப்ப என்ன ஆச்சு..? “

டேவிட் அப்பா அந்த ஏரியாவில்
சொந்தமாக ஒரு சர்ச் நடத்தி வருகிறார். அங்கு வருபவர்கள் தங்கள் வருமானத்தில் பத்து சத வீதம், அங்கு இருக்கும் உண்டியலில் போட்டு விட வேண்டும் என்று அவர் எப்போதும் பிரசங்கம் செய்யும்போது கூறுவார். கொஞ்ச நேரம் அவருடைய பிரசங்கத்தை தொடர்ந்து கேட்டால் மனம் மாறி மதம் கூட மாறி விடுவார்கள். அந்த அளவுக்கு அருமையாக பேசுவார். சேகருக்கும் டேவிட் குடும்பத்தோடு நல்ல பழக்கம் உண்டு.

டேவிட் வீட்டில் இருந்து கிறிஸ்தமஸ், நியூ இயர் போன்ற விசேஷ நாட்களில் கேக் மற்றும் பிரியாணி கொண்டு வருவான் டேவிட். அந்த நட்போடு ஒரு முறை அம்மனுக்கு கூழ் ஊற்றி விட்டு அன்று வீட்டில் செய்த பலகாரங்கள் கொழுக்கட்டை போன்றவற்றை எடுத்து கொண்டு டேவிட் வீட்டுக்கு சேகர் போன போது, டேவிட் அப்பா அதை வாங்க தயங்கினார்

” தப்பா நெனச்சிக்காத பா சேகரு, படையல்ல வச்சி கொடுத்ததை நாங்க சாப்பிட மாட்டோம் பா.. “

” ப்பா… அது எனக்கும் தெரியும் பா..
இது படையல்ல வச்சது இல்ல, சமைச்சதும் உங்களுக்கு கொடுக்க தனியா எடுத்து வச்சது ப்பா.. ” என்றான் சேகர்.

” அப்ப சரி பா.. என்று அம்மாவிடம் வாங்கி கொள்ள சொன்னார். டேவிட் அம்மா வாங்கி கொண்டு போனார்.

அப்பல்லாம் டேவிட் அம்மா நல்லா தான் இருந்தாங்க. அவங்களுக்கு உடம்புக்கு வந்த பிறகும் கூட நீண்ட நாட்களாக அம்மாவை ஹாஸ்பிடல் அழைத்து செல்லவில்லை. ஜெபம் செய்வதும் எண்ணெய் கொடுப்பதுமாகவே இருந்தார்.

வெள்ளை ஆடையை தவிர வேறு நிற ஆடையை அணிய மாட்டார். டேவிட் அண்ணன் ஒரு இந்து பெண்ணை காதலிக்க, அதை அவர் பெரிய பிரச்னை ஆக்காமல் அந்த பெண்ணை மதம் மாற்றி தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். குணத்தில் நல்ல மனிதர். மதம், பிரார்த்தனை போன்ற விஷயங்களில் கொஞ்சம் பற்று அதிகம்.

தன் பெரிய மகனை ஊழியம் செய்ய, பிரசங்கம் பேச என்று தயார் படுத்தி விட்டார். பெண்ணையும் அது சம்மந்தமான படிப்பில் தான் சேர்த்து விட்டார். இதில் டேவிட் தான் டிரம்ஸ் வாசிக்க கற்று கொண்டான். அதுவும் கூட சர்ச்சில் வாசிக்க வேண்டும் என்பதற்காக.

சர்ச்சில் வருமானம் நன்றாகவே வந்தது. அந்த வருமானத்தில் அவர் அந்த இடத்தை வாங்கினார். பின்பு அங்கேயே மேலே வீடும், கீழே சர்ச்சுமாக கட்டி கொண்டு வாழ்ந்து வருகிறார்.

” முன்னெல்லாம் வருமானம் நல்லாதாண்ணா வந்துன்னு இருந்துது. ஆனா இப்போ அப்பிடி இல்ல… எங்க அம்மா ஒடம்புக்கு சரி இல்லாம போனப்புறம் யாரும் அவ்ளோவா வரதில்ல… “

” ஏன்டா, உங்க அப்பா தான் ஒடம்பு சரி இல்லனா எண்ணெய் தருவாரே, உங்க அம்மாவுக்கு தரலியா…? “

” தராம இருப்பாரா?… தந்தாரு, ஆனா அம்மாக்கு அது கேக்கல… அதனால ஹாஸ்பிடல தான் பாக்கறோம்.. மக்கள் அதிகமா வராம போனதுக்கு அது தான் காரணம்… அம்மாக்கு மட்டும் ஹாஸ்பிடல பாக்கறோம், மத்தவங்களுக்கு என்னெய் கொடுத்தா, நம்ப மாட்றாங்க… “

” அண்ணாவையும் வேலைக்கு போக விட மாட்றாரு, ஊழியம் பண்ணி அதுல வர வருமானத்துல தான் சாப்பிடணும்னு சொல்றாரு.. “

” சரி விடுடா, போக போக சரியாயிடும் இன்னக்கி கச்சேரி இருக்கு வரியா…? “

டேவிட் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்.

” டேய், இன்னாடா ஆச்சி? ஒன்னும் பேச மாட்டேங்குற..? “

” அண்ணே நான் கச்சேரிக்கு வருவதும் கூட இப்ப பிரச்சனையா தாண்ணே இருக்கு.. “

” ஏன்டா அதுல இன்னடா பிரச்சனை.. அவன் அவன் கச்சேரி இல்லாம இருக்கான் உனக்கு கச்சேரிக்கு வரதுல இன்னாடா பிரச்சனை…? “

” கடவுளுக்கு ஊழியம் பண்ற நாங்க இந்த மாதிரி சினிமா பாட்டு, கூத்து, கச்சேரிக்கு போகக் கூடாதுன்னு அப்பா ஏற்கனவே சொல்லிட்டாரு.. “

” ஏண்டா இது கொஞ்சம் ஓவரா தெரியலையாடா.. நம்ம இருக்குற கஷ்டத்துக்கு நம்ம கத்துக்கிட்ட தொழில தான செய்றோம்? இதுல என்னடா தப்பு இருக்கு.. ஆனா இதுக்கு முன்னாடி எல்லாம் கூட கச்சேரிக்கு வந்தியே டா.. இப்ப என்ன ஆச்சி..? “

” இப்ப எங்க அப்பா கிட்ட இதெல்லாம் பேசவே முடியாதுண்ணா… அந்த அளவுக்கு அவர் போய்ட்டார்… பாவம் எங்கம்மா மருந்து வாங்கலேன்னா கூட பரவால்ல… ஆனா சாப்பாடு கூட இல்லனா எப்டின்னே… ” என்று கேட்டவன், பின்பு எதோ தீர்மானம் செய்தவனாக,

” சரிண்ணே நான் வரேன்… எங்கண்ணே கச்சேரி…? ” என்று
உற்சாகமாக கேட்டான்.

” மின்ட் அங்காளம்மன் கோயிலு.. “

டேவிட் மீண்டும் ஏதோ யோசித்தபடி அமைதியாக இருந்தான்.

” டேய், இன்னாடா அடிக்கடி ஒரு மாதிரி ஆயிடறே.. “

” ஏதோ கத்துக்கிட்டது வீணா போயிடுமேன்னு சொல்லிட்டு ஒன்னு ரெண்டு கச்சேரிக்கு போயிட்டு இருந்தேன் . இப்ப இந்த மாதிரி கோயில் கச்சேரின்னா அப்பா அதுக்கு சுத்தமா அனுப்பவே மாட்டாரு… “

” இப்ப இன்னாதான்டா சொல்ற.. ” சேகருக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

” நான் வரேன்.. ஆனா ஒரு விஷயம்.. வீட்ல இருந்து டிரம்ஸ் கொண்டு வர முடியாது.. அதனால நீங்க கொண்டு வந்துடுங்கண்ணா… “

” ஏன்டா… “

” கண்டிப்பா எங்கப்பா ஒத்துக்க மாட்டாரு, ஆனா வீட்ல இருக்கற கஷ்டதுக்கு நான் ஏதாவது பண்ணி தான் ஆகணும். இன்னக்கி எனக்கு வருமானம் வேணும்… அதனால நான் கச்சேரிக்கு வரேன், ஆனா அப்பாக்கு தெரியாம… ‘

” சரிடா வா, பாத்துக்கலாம்.. ” என்று கூறி விட்டு அங்கே இருந்து கிளம்பினார்கள். சேகர் வீட்டுக்கு போய் டிரம்ஸ், கீ போர்டு ஏற்றி கொண்டு போனார்கள்.

பெரிய கச்சேரி மேடை போடப்பட்டு இருந்தது. அங்காள அம்மன் கோயில் திருவிழா களை கட்டியது. பலூன், ராட்டினம், விளையாட்டு பொருட்கள், வித விதமான தின்பண்டங்கள் விற்பனை கூடங்கள், அழகு சாதன கடைகள் என ஏகப்பட்ட கடைகள் போடப்பட்டு இருந்தது.

வளையல்களை கையில் போட்டு அதை ஆட்டி ஆட்டி அழகு பார்த்தனர் இளம் பெண்கள். அவர்களை சுற்றி வட்டம் அடித்து வந்த இளைஞர்கள் மற்றும் தங்கள் பெண்களை இவர்களிடம் இருந்து காப்பாற்ற கோபமான பார்வையோடு வலம் வந்த அப்பாக்கள் என கூட்டம் அலை மோதியது.

பெரிய பெரிய ஆடியோ பெட்டிகளில் அம்மன் பாடல்கள் சத்தமாக அலறியது. பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் கத்தி கத்தி பேசியதில் மேலும் பரபரப்பாக இருந்தது அந்த சூழல்.

சிறிது நேரத்தில் கச்சேரி துவங்கியது..
யாரவது தன்னை பார்த்து விட்டு அப்பாவிடம் சொல்லி விட கூடாது என்பதற்காக தலையில் தொப்பி அணிந்து இருந்தான் டேவிட்.

பிள்ளையார் பாடலுடன் கச்சேரி ஆரம்பமானது. பெரும் கூட்டம் மேடை அருகே வந்து விட்டது. ஒவ்வொரு பாடல் முடிந்ததும் கை தட்டல் மேலும் உற்சாகத்தை கொடுத்து. டேவிட் அருமையாக வாசித்து கொண்டு இருந்தான். தலையில் இருந்து தொப்பி விழுந்ததை கூட அவன் கவனிக்கவில்லை.

நேரம் ஆக ஆக கச்சேரி பாடல்கள் வேகம் எடுத்தது. அடுத்தது முக்கியமான பிரபலமான பாடல் பாட வேண்டும்,

அன்று கச்சேரிக்கு மூன்று ஆண் பாடகர்கள் பாட வந்திருந்தனர். தனக்கு தான் அந்த பாடல் பாடும் வாய்ப்பு வர வேண்டும் என விரும்பினார்கள்.. அதில் இருவர் சேகரையே பார்த்து கொண்டு இருந்தார்கள்.தன்னை தான் பாட சொல்ல போகிறார் என்று.

மூன்று ஆண் பாடகர்களில் ஒருவர் உஸ்மான், பார்வை அற்றவர். பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பாடுவது அவருக்கு சிறு வயது முதல் விருப்பம். வீட்டு அருகிலும், அதை சுற்றிலும் எங்கே கச்சேரி நட ந்தாலும் அங்கே சென்று விடுவது வழக்கம்…

அவருடைய வாப்பாவுக்கு அதெல்லாம் பிடிக்காது என்றாலும், உஸ்மான் விருப்பதிற்கு மாறாக எதுவும் செய்ய மாட்டார். மற்ற பிள்ளைகளை போல அவனால் எதுவும் பார்க்க தான் முடியாது… அவன் காதுகளுக்கு இனிமையான பாடல்களை அவன் கேட்டு மகிழட்டும் என்று தன் மனைவியிடம் கூறுவார்.

பாடல்களை கேட்டு ரசித்து வந்தவன் ஒரு கட்டத்தில் அதையே உள் வாங்கி பாடவும் ஆரம்பித்து விட்டான். ஒரு நாள் தன் வாப்பாவிடம் சென்று,

” வாப்பா, நான் பாட்டு கத்துக்கணும்னு விருப்பபடறேன், என்னை சேர்த்து விடுவீங்களா.. ” என்றான்.

” உஸ்மான், நமக்கு அதெல்லாம் பழக்கம் இல்ல பா… அப்புறம் நம்ம மதத்துல அது ஹராம் பா… “

” வாப்பா… ” என்று அவன் மீண்டும் அழைக்க,

” வாப்பாவை தொல்லை பண்ண கூபாது” என்று அம்மா அவனை உள்ளே அழைத்து சென்று விட்டாள்.

அவன் பிடிவாதம் தொடரவே, வேறு வழி இன்றி இசை பயில ஒப்பு கொண்டு சேர்த்து விட்டார்.

” உஸ்மான், நீ பாட்டு வகுப்புக்கு போய் வரும்போது, ‘ எங்க போய் வரேன்னு ‘ ஜமாத்து காரங்க யாராவது கேட்டா டியூஷன் போறேன்னு சொல்லணும் சரியா. “

” நம்ம ஏம்ப்பா அப்டி சொல்லணும்? “

” வேற வழி இல்ல பா… சொல்றத மட்டும் கேளு சரியா… ” என்றார் வாப்பா.

பாட்டு வகுப்பில் கற்று கொடுக்கப்படும் சுலோகம் பக்தி பாடல்களை மற்ற பிள்ளைகளை காட்டிலும் அருமையாக பாடினான் உஸ்மான்.

இப்போது ஆங்கில ஆசிரியராக பணி யாற்றினாலும் கூட, எந்த கச்சேரியாக இருந்தாலும் ஒப்பு கொண்டு வந்து விடுவார்.

சேகர் அந்த பாடலை உஸ்மான் பாயை பாடும்படி கூறினான். மற்ற இரு பாடகர்களுக்கும் சற்று ஏமாற்றமாகி விட்டது என்றாலும் அவர்களுக்கு சேகர் செய்தது சரியான விஷயம் தான் என்று தெரியும்.

‘ மஞ்சளிலே நீராடி…’ என்ற உஸ்மான் பாயின் கணீர் குரலில் மொத்த மேடையும் அதிர்ந்தது. ‘ உடுக்கை பம்பை முரசொலிக்க..’ என்றதும், கூட்டம் ஆரவரித்தது, குதுகலாமானது… பாடல் பாட பாட சாமி ஆடி கொண்டே பெண்கள் கூட்டம் மேடை அருகே வந்து விட்டது .. அங்காங்கேவும் பெண்கள் ஆண்கள் என சாமி வந்து ஆட துவங்கி விட்டனர்… அந்த ஒரு பாடலில் தன் கம்பீர குரலால் அனைவரையும் ஈர்த்து கட்டி போட்டார் உஸ்மான் பாய். பாடல் முடிந்ததும், கை தட்டலும், விசில் சத்தமும் நீண்ட நேரம் ஓயவில்லை.
பாடலை பாராட்டி மேடையை நோக்கி பணம் வந்த வண்ணம் இருந்தது.

நிகழ்ச்சியின் நிறைவாக கோயில் தர்மகர்த்தா மேடைக்கு வந்து அனைவரையும் பாராட்டி மாலை போட்டு சால்வை அணிவிக்க வந்தார்.
ஒவ்வொருவரின் பெயர் சொல்ல சொல்ல இசை கலைஞர்கள் முன் வந்து மரியாதையை பெற்று கொண்டார்கள். டிரம்மர் டேவிட் தன்னை மறந்து மகிழ்ச்சியில் இருந்தான்.

அதிலும் உஸ்மான் பாயை வெகுவாக பாராட்டி பேசியபடியே, அவரை அணைத்துக் கொண்டார் தர்மகர்த்தா.

இதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த லோகுவும் சுடரும் உஸ்மானிடம் வந்து,
” சார், ரொம்ப அருமையா பாடினீங்க சார், நாங்க பாடி இருந்தா கூட இவ்வளவு சிறப்பா இருந்து இருக்காது, சூப்பர் சூப்பர் சார்.. ” என்றார்கள்.

” எப்டி சார்.. இவ்ளோ தத்ரூபமா பாடறீங்க… ” என்றான் லோகு.

” எங்க வீட்டு பின்னாடி தெருவுல இருக்கற கோயில்ல தினமும் சாமி பாட்டு போடுவாங்க சார்… எனக்கு எப்பவும் கேட்டு கேட்டு பழகிடுச்சு… நான் அப்டியே கூடவே பாடுவேன் எனக்கு அந்த பாட்டெல்லாம் ரொம்ப பிடிக்கும் சார்…” என்றார் உஸ்மான்.

கச்சேரி நிறைவடைந்தது. கீ போர்டு வாசித்த சேகர் அனைவருக்கும் நன்றி கூறி விட்டு அவர்களுக்கான பணத்தை கொடுத்து அனுப்பினான். மாலை மரியாதயோடு பணத்தையும் வாங்கி கொண்டு அனைவரும் கிளம்பி விட்டனர்.

டேவிட் அவனுக்கு அணிவித்த மாலை மற்றும் சால்வைகளை சேகரிடமே கொடுத்து அனுப்பி விட்டான்.
அதை எல்லாம் வீட்டுக்கு கொண்டு போக முடியாது.

போகும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரியாணி வாங்கி கொண்டு போனான். அனைவரும் சுட சுட பிரியாணி பொட்டலத்தை பிரித்து சாப்பிடுவதை பார்க்க அவனுக்கு நெஞ்சம் நிறைந்தது. கூடவே ‘ பிரியாணி வாங்க பணம் ஏது ‘ என்று யாரும் கேட்டு விட கூடாதே என்று எண்ணும்போதே …

” பிரியாணி வாங்க காசு ஏதுடா..? ” அம்மா கேட்டு விட்டார்.

டேவிட் என்ன பதில் சொல்வது என்று விழித்தான்.

” ஜெஸ்ஸிம்மா, தசம பாகம் எங்கே இருந்து வேணாலும் வரும், சாப்புடும்மா… ” என்று கூறி கொண்டே பிரியாணி சோற்றை எடுத்து தன் மடியில் அமர்ந்து இருந்த பேர குழந்தைக்கு ஊட்டினார்.

” தங்க புள்ள ஒழுங்கா சாப்பிட்டா தான் தாத்தா உனக்கு நாளைக்கி புது பொம்மை, சாக்லேட்… அப்புறம் தொப்பி கூட வாங்கி தருவேன் சரியா… ” என்று கேட்டபடியே டேவிட்டை பார்த்தார்.

‘ தொப்பி ‘ என்றதும் டேவிட் வெடுக்கென தலை நிமிர்ந்து பார்த்தான். ‘அப்டின்னா அப்பா கச்சேரிய வந்து பாத்து இருக்காரு’ என்று யூகித்து விட்டான்.

” தாத்தா இப்போ தொப்ப நொம்பி போச்சி, சத்தம் கூட வரல பாரேன்… ” என்றது பாப்பா.

‘ ஓ… அப்பாவின் ஆணிவேரை ஆட்டியது இந்த தளிர் தானா… ‘ என்று எண்ணியவனுக்கு முகத்தில் புன்னகை படர்ந்தது.

எழுதியவர் : 

பூ. கீதா சுந்தர்
சென்னை

 

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 3 Comments

3 Comments

  1. மோ.ஜெயபிரகாஷ்

    மனிதம் பாராட்டும் மதம் பிடிக்காத அப்பாவின் ஊழியம் பக்தியை(விருப்பத்துடன் கூடிய அடிமைத்தனம்) வெளிப்படுத்தும் விதம் சிறப்பு.

  2. மோ.ஜெயபிரகாஷ்

    மனிதம் பாராட்டும் மதம் பிடிக்காத அப்பாவின் ஊழியம் பக்தியை (விருப்பத்துடன் கூடிய அடிமைத்தனம்)
    வெளிப்படுத்தும் விதம் சிறப்பு.

    • சபிதா யாசர்

      பசி ருசி (மதம்) அறியாது.
      சிறந்த கதை எனக்கு பிடித்திருக்கிறது. 👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *