நான் சாக மாட்டேன்…
எனச் சொன்னவள் கருவிழி இரண்டும்
காணாது போய்க் கண்ணீர் கன்னம்
தாண்ட என் கைவிரல்களைப் பிடித்தபடி
காற்றோடு காணாதுபோன நொடி…
பெயர் வைத்தவள் பிணம் என்ற பெயரோடு
செல்கையில் என்னைச் செல்லமாய்
அழைத்த வார்த்தை மட்டும்
என் காதுக்குள் நுழைந்த நொடி…
நான்கு சுவற்றுக்குள்
சூழ்ந்த இருட்டின் மத்தியில்
சத்தமாகக் கதறி அழுத அந்த நொடி…
அன்பு சொந்தம் நட்பு
நம்பிக்கை இப்படியான வார்த்தைகள்
அர்த்தமிழந்து போக…அந்தரத்தில்
நூல் இழையில் தொங்கிய அந்த நொடி…
இங்கு அனைத்திற்கும் பிரதானம் பணம்
என்று உணர்ந்த நொடி…
பலரின் பற்கள் ,
மகிழ்ச்சியில் சிரிப்பதற்கு மட்டுமல்ல…
என்னைக் கொரிப்பதற்கும் காத்திருக்கிறது
என்று உணர்ந்த நொடி…
என் தோளில் கை போட்டு
என் தோல்வியை ரசிக்கும் மனிதரை
அடையாளம் கண்ட அந்த நொடி…
என்னைக் குத்திக் கிழித்துக் கூறு போட்டது
நான் கொடுத்த ஊன்றுகோலால்…
என அறிந்த அந்த நொடி…
இப்படியான நொடிகள் பல
நான் இறந்து இறந்து பிறந்த நொடி…
இப்போதும் பிறந்து விட்டேன் மீண்டும்
இறக்க தயாராகிக் கொண்டிருக்கிறேன்…
இன்னும் எத்தனை நொடிகள் நான்
இறுதியாக இறப்பதற்குள்
இறந்து பிறப்பேன் என்பதுதான் புதிர்…
ஆனால் ஒவ்வொரு இறப்பும்
என்னை மீண்டும் பிறக்க வைத்தது
ஒவ்வொரு விழுதலும் மீண்டும் எழவைத்து…
அட…இதைவிட சுகம் என்ன…என்ற இந்த நொடி…
– சுதா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.