கழனிகளில் உழைத்து போக
மீதமிருந்த வாழ்வை
திண்ணையில் கழித்த தாத்தா
யாருமற்ற பகல் பொழுதில் சப்தமின்றி சாலையில் உலவும்
வெயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
முப்போக விளைச்சலுக்கு
ஓயாமல் கழனியில் உழைத்த
தாத்தாவின் காத்திரமான உடல்
வயோதிகத்தால் நலிவுற்று
வீட்டில் விழுந்தது…
மழை வெள்ளம்
கொண்டு போன பயிரை
அடுத்த போகத்தில் விளைச்சலாய்
கொண்டு வருவேன் என்று
சவால் விட்டு உழைத்து சாதித்த
அவரின் வைராக்கியம்
எங்கள் புறக்கணிப்பால்
நலிவுற்று திண்ணையில் சரிந்தது…
ஆரோக்கியம் குன்றும் முன்னரே
அவர் நடப்பதையும் பேசுவதையும்
நிறுத்திக்கொண்டார்
திண்ணைக்கு துரத்தப்பட்ட
பெருந்துயரத்தை
ஆணி அடித்து அவர் மனதில்
மாட்டிக்கொண்ட பின்
தன் நிழலைக் கூட அவர்
வெறுதொதுக்கி மௌனமானார்
எங்கள் உளவியல் தாக்குதல்
அதன் பிறகு தான் அதிதீவிரமடைந்தது…
அபார்ட்மெண்ட் கட்ட
கார்ப்பரேட்டுகளுக்கு
உழுத நிலத்தை விற்றாயிற்று
ஏர்கலப்பையை அருகிலுள்ள
காயிலான் கடையில்
விலைக்கு கொடுத்தாயிற்று
நாடி துடிப்புள்ள பிணமென
மிச்சமிருக்கும் தாத்தாவை
திண்ணையில்
விட்டு வைத்திருக்கிறோம்
அடர் தனிமையையும்
இருமல் டானிக்கையும்
துணைக்குக் கொடுத்து.
தாத்தாவுக்கு
உழைக்க மட்டுமே தெரியும்
கொலை செய்யத் தெரியாது என்ற உண்மை எங்களுக்கு
தெளிவாய்த் தெரிந்ததால்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments