ஆற்றில் இருந்து அள்ளிய மணலுடன் வீட்டிற்கு வந்த தவளை ஒன்று தமது வாழ்வு குறித்து மனிதர்களோடு பேசுவது தான் – தவளை நெரிக்கப்பட்ட குரல் (Thavalai Nerikkappatta Kural).
யானை , புலி , சிறுத்தை உள்ளிட்ட பேருயிர்களில் இருந்து தாவர உண்ணிகளான காட்டு எருது, மான்கள் ,வரையாடு போன்ற உயிரினங்களை பேசிய அளவிற்கு புழு பூச்சிகள் , இருவாழ்விகள் ஊர்வன வகைகள் குறித்து தமிழில் பெருமளவில் விவாதங்களும் மற்றும் நூல் குறிப்புகளும் இல்லை எனலாம் . அதனை தகர்த்தெறியும் விதமாக முற்போக்கு சிந்தனையாளர் ,கவிஞர் , இலக்கியவாதி, சூழலியலாளர் , களப்பணியாளர், பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்ட கோவை சதாசிவம் ஐயா அவர்கள் பேசப்படாதவற்றைப் பற்றி பேசும் விதமாக நூல் வடிவம் தந்ததற்கு என் முதல் வணக்கம்.
குட்டையில் வாழ்ந்தாலும் தவளை சொட்டுநீர் குடிக்காது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் . இல்லை நம் முன்னோர்கள் எத்தனை பேர் நமக்கு அதனைச் சொல்லி இருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் , நமது நாகரிக நரக வாழ்க்கை தெறிக்கவிடும் குரல் கொண்ட தவளையின் குரலை நிறுத்திவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தவளை என்றதும் எல்லோருக்கும் ஒருவித அருவருப்பான உணர்வு . கூடுதலாக அதன் மீது கல்லை எறிந்தால் தவளையின் மேற்பரப்பில் உள்ள சொரசொரப்பு தன்மை நமது கை கால்களின் முட்டிகளில் வந்து விடும் என்ற ஒரு அலர்ஜி. தவளையின் இனத்தோடு ஒப்பிடும் தேரை நம் மீது பட்டால், நமக்கு பிறக்கும் குழந்தையும் தேரையைப் போல் பிறக்கும் என்ற ஒரு மூடநம்பிக்கை . 80, 90-களில் பிறந்தவர்களின் வாழ்வில் தவளையானது அருகில் உள்ள நீர் நிலைகளில் மழைக்காலங்களில் எழுப்பும் சப்தம் . இதைத் தவிர மனிதனுக்கும் தவளைக்குமான வாழ்க்கையை மிக நெருக்கமாக கண்டிருக்க முடியாது . இப்போதுள்ள சிறார்களுக்கு தார் சாலை என்ற பின்னர் அதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஆனால் தவளை குறித்த பல தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறது இந்த புத்தகம். பொதுவாக , இயற்கை சில மகத்தான நுண் உணர்வுகளை தவளைகளுக்கு தந்துள்ளது . நிலத்தோடு ஒன்றி வாழ்வதால் நில அடுக்குகளின் உலுக்கு மையங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதை எளிதாக உணர்ந்து கொள்கின்ற தவளைகள் பூகம்பம் வருவதை நான்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே அறிந்து பாதுகாப்பான இடங்களுக்கு பெயர்ந்து , நிலம் குலுங்கி நிலை பெற்ற பிறகு இருப்பிடம் மீளுமாம். என்ன ஒரு விந்தை…
இப்படி ஒரு வரம் கிடைத்த தவளையால் தான் , மனிதர்கள் எந்த ஆற்றில் எத்தனை ஆழத்தில் எந்த நேரத்தில் மணலை அள்ளி ஆற்றின் உயிர்ச் சூழலில் அழித்தொழிப்பார்கள் என்பது அறிய முடியவில்லை என்கின்றது , ஆற்றிலிருந்து அள்ளிவரப்பட்ட மணலோடு கட்டுமான இடத்திற்கு வந்த தவளை ஒன்று.
சூழலின் நலத்தை பிரதிபலிக்கும் “காலக்கண்ணாடி” என்று தவளைகளை இயற்கைவியாலாளர்கள் அறியப்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக, நீர்நிலையில் வாழும் தவளையின் மீது பச்சை நிறம் படிந்து இருந்தால் அது நன்னீர் என்றும் , அடர் பழுப்பு கூடியிருந்தால் நீர் மாசுபட்டது என்றும் எளிதில் அறிந்து கொள்ள முடியுமாம்.
சிறுவயதில் அடைமழை காலத்தில் என் அம்மாயி வீட்டுக்கு அருகே உள்ள குப்பைக்கிடங்கில் தேங்கி நிற்கும் மழை நீரில் , இரவு முழுதும் மழைப்பாடலை பாடிக்கொண்டே இருக்கும் தவளைகள் இப்போது என் நினைவுக்கு வருகிறது. கண்ணயர்ந்து தூங்கும் வரை அந்த பாடலை நாம் தாலாட்டாக நினைத்துக் கொள்ள வேண்டும் . வேறு வழி இல்லை அந்த காலங்களில். கிட்டத்தட்ட அந்த பாடலைக் கேட்காமல் மழைக்காலங்கள் நிறைவு பெறாது என்று கூட சொல்லலாம். ஆனால் , இன்றும் ஒரு சில மணி நேரங்களில் கொட்டித் தீர்க்கும் பருவ மழை பெய்கின்றது. ஆனால் தொடர்ந்து இரண்டு நொடிகள் கூட , ஒரு தவளையின் மழைப் பாடலைக் கேட்பதற்கு போதுமான நீர் நிலைகள் இல்லை. ஒருவேளை தவளையின் குரல் நெரிக்கப்பட்டு விட்டது உண்மைதானோ..!!
உலக அளவில் சுமார் 5000 வகைகளாகவும் இந்தியாவில் சுமார் 350 வகைகளாகவும் பரிணமித்துள்ள இந்த தவளை இனங்கள் , இந்த பூமியில் எந்த ஓரத்தில் வாழ்கின்றன . அதன் இருப்பிடத்தை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டோமோ என்று எண்ணம் என்னுள் எழுகிறது.
தேங்கிக் கிடக்கும் குப்பைக்கிடங்கில் அதிகமான தவளையின் முட்டைகளை கண்டதுண்டு. அதேபோல குலத்தை நோக்கி ஓடும் சிறு வாய்க்கால் நீரில் தவளையின் ஆரம்ப வடிவமான தலைப்பிரட்டை நீந்துவதையும் கண்டதுண்டு. பால்ய வயதில் அதுதான் குட்டி மீன் என்று கைகளில் ஏந்தி விளையாடிய பொழுதுகளும் உண்டு. இவையெல்லாம் இன்றைய தலைமுறைகளுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இருக்கிறதா . ஓ… அதற்காகத்தான் நாம் அருங்காட்சியகம் வைத்திருக்கின்றோமோ..?
1978 ஆம் ஆண்டில் மட்டும் ஆறு கோடி தவளைகளை கொன்று 3500 டன் கால்களை பிடுங்கி , தென் கொரியா தாய்லாந்து மலேசியா மியான்மர் போன்ற நாடுகளுக்கு சூப்பு வைக்க ஏற்றுமதி செய்துவிட்டு , சொந்த நாட்டு இயற்கைக்கு ஆப்பு வைத்தவர்கள் நாம்தான் என்பதை மறந்து விட்டேன் மன்னித்து விடுங்கள்.
இதில் போதாக்குறைக்கு “நுணலும் தன் வாயால் கெடும்” என்று பழமொழி வேறு. மனிதர்கள் போல் மவுனத்தில் , புன்னகையில் , அன்பில் கள்ளம் காட்டத் தெரியாத தவளைகளுக்கு அவைகளின் இருப்பை எதன் பொருட்டும் மறைக்கும் திறனில்லை என்பதை நம் ஆறறிவுக்கு தெரியாதல்லவா.
பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் உலகளாவிய ஆய்விற்குப் பிறகு அழிந்து வரும் இனமாக ‘சிவப்பு பட்டியலில்’ தவளையின் இனத்தை சேர்த்துள்ளது. 2008 ஆம் ஆண்டு தவளைகள் ஆண்டாக அறிவித்து தவளைகள் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி உள்ளது . பாதுகாப்பு நாள் என்பது ஒருநாள் விழா எடுப்பது மட்டுமல்லாமல் , ஒவ்வொரு நாளும் உணர்ந்து வாழ்வதாகும் . ஏற்கனவே பல்லி ஒரு அறிவியல் பார்வை புத்தகத்தை வாசித்து விட்டு எந்த ஒரு உயிரினத்தையும் கொள்வதற்கு என் மனம் முன் வரவில்லை . இப்பொழுது கூடுதலாக தவளை சேர்ந்துள்ளது. இனி நடக்கும் போது எறும்பை கூட மிதிக்காமல் நடக்கும் எண்ணம் தான் மனதில் தோன்றும் போல.
அறிவியல் அற்ற அறிவியல் வன்மமாகத் தான் இருக்கும் . எனவே , அறிவியல் கலந்த அறிவை முன்னெடுப்போம்.
மிகப் பிரபலமான ஒரு ஆங்கிலப் புத்தகம் இருக்கிறது அதன் தலைப்பு
“ Eat that frog “ நம் கண் முன்னே வைத்திருக்கும் அறுசுவை உணவுகளில் ஒரு தவளையும் சேர்த்து வைக்கப்படும் . நமக்கு அளிக்கப்படும் வாய்ப்பானது எல்லா உணவையும் உண்ண வேண்டும் என்பதுதான் . இதில் நாம் எதை முதலில் உண்ணப் போகிறோம் என்பது தான் சூட்சமம் . நாம் தேர்ந்தெடுக்கையில் தவளையை தின்றுவிட்டு அதன் பின்னர் அறுசுவை உணவுகளை உண்பதில் எந்த தவறும் இல்லை . ஆனால் தவளையை கண்முன்னே வைத்துக் கொண்டு மற்ற உணவுகளை உண்ணும் போது , அதன் சுவை நம் நாவுக்கு எடுபடாது. அது அருவருப்பாகவே இருக்கும் என்று அந்த புத்தக கருத்துச்சாரம் இருக்கும்.
ஆனால் இந்த புத்தகத்தை வாசித்த பின்னர் , தவளை மீதும் ஒரு விருப்பம் வரும் என்று நினைக்கின்றேன் . அதற்காக கண்டிப்பாக சூப் வைத்து சாப்பிட மாட்டேன் என வாக்குறுதி தருகிறேன்.
நெரிக்கப்பட்ட குரல் ஓசையை எட்டுத்திக்கும் பரப்புவோம்..
நூலின் விவரம்:
புத்தகத்தின் பெயர் : தவளை நெரிக்கப்பட்ட குரல் (Thavalai Nerikkappatta Kural)
ஆசிரியர் : கோவை சதாசிவம்
பக்கங்கள் : 32
பதிப்பகம் : குறிஞ்சி பதிப்பகம்
விலை : 30
தலைப்பு : சூழலியல்
நூல் அறிமுகம் எழுதியவர்:
✍️பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.