சிறுகதை: தவிப்பு | ஜனநேசன்

Thavippu Short Story By Jananesan. This Story About Inter-caste love marriage couple life in chennai. book day website“செல்லம் கொடுத்து பிள்ளையை இப்படி கெடுத்துட்டியே …” என்று அடிக்கக் கையோங்கியவரின் விழிகள் அந்திச் சிவப்பாய் இருந்தன உதடுகள் துடித்தன. அவர் அடித்துவிடாமல் தடுக்க,” நான் என்ன செய்வேன், பிள்ளைக்கு அப்பனை மாதிரி புத்தி போயிருச்சு போல.” என்றாள். அவர் பற்களை நறநற என்று கடித்து, அவளை முறைத்தார். துண்டை உதறி வெளியேறினார். அவள் மனம் பதை பதைத்தது . நினைவுகள் தயிர் மத்தாகக் கடைந்தது.

‘ அவளை நல்லபடியாகத்தானே வளர்த்தேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் தோழி போல பள்ளியில் நடந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொண்டாளே. கல்லூரிக்குப் போனதும் மகளுக்கும் தனக்கும் ஒரு ஊடு திரை வளர்ந்து விட்டதே. அவ அப்பா அவளை கல்லூரிக்கு அனுப்ப மறுத்தபோது,

”நல்லா படிக்கிற மக வீட்டில் சும்மா இருந்தால் புத்தி மழுங்கிப் போவா. வீட்டிலிருந்து அரைமணி தூரத்தில தானே காலேஜ் இருக்கு. படிச்சா அவளுக்கு வேலை கிடைக்குதோ இல்லையோ.. அவ என்னை மாதிரி கூமுட்டையா இல்லாம நல்ல விதமா குடும்பம் நடத்துவாள்ல!. நம்ம பிள்ளை படிச்சு பட்டம் வாங்கினா அப்பாவைத் தானே பெருமையா பேசுவாங்க.!” அவளது பேச்சில் அவர் கரைந்து போனார்.

படிக்கப் போன இடத்தில் வேறு சாதிப் பயலோடு சிநேகம் ஆகி இப்படி சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போவாள் என்று அம்மா நினைத்து கூட பார்க்கவில்லை. இந்த ஒரு வருசமா அவள் வீட்டில் அம்மவோடோ, அப்பவோடோ பேசும் சொற்கள் குறைந்து போனது. தேவைக்கு மட்டும் பேசுவாள். அவளுக்கான அறையில் எதோ புத்தகத்தை புரட்டியபடியோ, எதோ சிந்தித்தபடியோ இருந்தாள். கடைசி வருஷம் படிக்கிறா; படிப்பு கூடுதலாக இருக்கும். சாப்பிடும்போது கூட பேசாமல். படிப்பு யோசனையிலே இருக்கிறாள் என்று அம்மா நினைத்தாள்.

“கல்லூரி ஆண்டு விழா நாடகத்தில் நடிக்கிறோம். என்கூட படிக்கிற பிள்ளைகளுக்கும் நல்ல துணிகள் கொடுக்கணும். என்கிட்டே இருக்கிற நல்ல துணிகள் எல்லாம் எடுத்துட்டுப் போறேன் “னு அம்மாவின் தாவாங்கட்டையை பிடித்து மகள் கொஞ்சினப்ப சந்தேகம் வரலை. மகளை நம்பினாள். சந்தேகிக்காமல் மோசம் போயிட்டோமோ …என்று அம்மாவுக்கு ஆதங்கம் பொங்கியது. கண்ணீர் துளிர்த்தது. ‘ஐயோ அழக்கூடாது. ஊராருக்கு தெரிந்து, மரியாதை கெட்டு மகிழி பூக்கறதுக்குள்ள அவளை மீட்டி கொண்டு வரணும் ‘ என்றுஅம்மாவின் மனம் பதறியது.

அப்பாவும் வெளியே சொல்லாமல் சுற்றியுள்ள ஊரு பஸ்ஸ்டாண்டு, ரயிலு ஸ்டேசன் எல்லாம் தேடினார். மூன்று நாளயிற்று ; அக்கம் பக்கம் எல்லாம் ஒரு மாதிரி வீட்டை துழாவுவது போல் பார்த்தார்கள். புறணி பேச ஆரம்பித்து விட்டார்கள். மகளது இல்லாமையை அவர்கள் மறைக்க முயற்சித்தார்கள். முடியவில்லை. படிப்பு விஷயமா காலேஜ் பிள்ளைகளோடு சென்னைக்குப் போயிருக்கிறாள் என்றனர்.

நாள்தாள்கள் பறந்தன .அம்மா வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. அப்பா தொங்கிய முகத்தோடு விடிவதற்குமுன் வீட்டை விட்டு வெளியே போகிறவர் ஊர் தூங்கினப்புறம் தான் வருகிறார்.அக்கம் பக்கத்தார் மகள் அடுத்த ஜாதிப்பயலோடு ஓடிப்போய் விட்டாள் என்று உறுதிபடுத்தி பேச ஆரம்பித்து விட்டனர். அவர் ஒரு மாதகாலமாக அலைந்ததில் மகளோடு ஓடிப்போனவன் யார், என்ன சாதி, அவனது பின்னணி என்னவென்று அவர்களது சக மாணவர்கள் மூலம் அறிந்து கொண்டார்.

அப்பாவை மறித்து ஊரார் துக்கம் விசாரிப்பதுபோல் விசாரித்து உசுப்பேற்றி சாதிவெறியை தூண்டி விட்டனர். சாதிக்காரர்கள் போட்ட தூபத்தில் கனலாக எரிந்தார். பாரம்பரியமான மீசைக்காரர் குடும்பம் அவமானப்பட்டு சாவதா? இந்த அவமானத்தைத் துடைத்து சாதிப் பெருமையை நிலைநாட்டி விட்டுதான் சாகணும் என்று முடிவெடுத்து பேயைப் போல் நிழலற்று அலைந்தார்.அம்மா வீட்டுக்குள் புழுங்கினாள்; ‘ மக, ஊருலகம் செய்யாத குற்றத்தையா செஞ்சுட்டா…? பெத்தவங்க அமைச்சுக் குடுக்கிறதை விரும்பலை. தனக்குப் பிடிச்சதை செஞ்சுக்கிட்டா…! ஒத்தப் பிள்ளையப் பெத்தோம். அவளாவது நல்லா இருக்கட்டும். நம்மளை மாதிரி திகுடு முகுடான மனுசனுக்கு வாக்கப் படாமால் மனசுக்கு பிடிச்சவனை கட்டிக்கிட்டு நல்லா இருக்கட்டும் .! இன்னிக்கு தூத்துற ஊரு, நாளைக்கு அவங்க நல்லா பிழைக்கிறதைப் பாத்து பெருமை பேசும். அதனால ஊரை நினைச்சு நொம்பலப்படக் கூடாது. மக மேக்கொண்டு சிக்கலில்லாமல் வாழ ஏதாவது வழிவகை செய்யணும். இம்புட்டு நிலம் நீச்சை வச்சுகிட்டு என்ன செய்ய? மனுஷன் குடியிலும் கூத்தியிலும் அழிச்சிட்டுப் போகவா…

ஆனா மனுஷன் சாதி வெறிபிடிச்சு அலையறாரே… மக கிட்ட இருந்து அவனைப் பிரிச்சு தீர்த்துக் கட்டுனாத்தான் ஊரும் சாதிசனமும் கம்முனு கிடக்கும். தலை நிமிர்ந்து நடக்கலாமுன்னு என் காது படப் பேசுறாரே… இந்த மனுஷனின் சாதிவெறியை எப்படி அமர்த்துவேன்…?

அந்த பிள்ளை பிழைப்பை சுலுவா அழிச்சிறலாம். வாழ வைக்கிறது தானே பெருசு.! ஒத்தப்பிள்ளையை எப்படி எல்லாம் வளர்த்தேன். பட்டணத்துக்குப் போய் அழகழகா ரக ரகமா துணிமணிக வாங்கிக் குடுத்து டவுன்பிள்ளை யாட்டம் நாகரிகமா நறுவு சாவுல்ல வளர்த்தேன். மக பெரிய மனுசி ஆகிட்டானு ஒரு காராம் பசு வாங்கி சீம்பாலு, பாலு, தயிர், நெய்யுக்கு குறைவில்ல. ரத்தபோக்கில் ரத்தசோகை வந்துரக் கூடாதுன்னு வாரத்துக்கு ரெண்டு தடவை மதிலொட்டி வாங்கி சுட்டுக் குடுத்தேன் . நெஞ்சு பலமிருக்க உளுந்தங்களி ,நாட்டுகோழிச் சாறு குடிக்க வச்சேன் . வேண்டாமுன்னு அழுவா.. நான் தான் கெஞ்சி கூத்தாடியோ, மிரட்டி உருட்டியோ குடிக்க வச்சிருவேன். வெய்யக்காலத்தில் உடம்பு சூடாகிடக் கூடாதுன்னு ஒரு பனை மரத்து பதநியா கொண்டு வரச்சொல்லி வயிறு நிறையக் குடிக்கக் குடுத்தேன். மக செவ்வாழைதண்டு கணக்கா இருந்தாளே, ஊரு கண்ணு ஒரு பக்கம்னா… என் கண்ணே பட்டுருமோன்னு நாள் தவறாமே திருஷ்டி சுத்திப் போட்டேனே… அருமை மகளுக்கு ஆன கஞ்சி கிடைக்கிதோ , மகராசன் எப்படி வச்சுகிறானோ, மாமியா, மாமனாரு எப்படி நடத்துறாகளோ தெரியல. ஊரு பேரு தெரியாத தேசத்திலே எப்படி கஷ்டப்படுதோ…எப்படி மயங்கி, கிறங்கி நிக்குதோ… ஆசை மகளுக்கு அரிசி பருப்பு , அரைச்செலவு சாமானெல்லாம் குடுத்து அதுக குடும்பம் நடத்திற அழகைப் பாக்க தாய் மனசு தவதாயப்படுது. வக்கிரம் பிடிச்ச மனுஷன் அந்த பிள்ளை வாழ்க்கையை கெடுக்க அருவாளைத் தீட்டிகிட்டு திரியிறாரே. அவ மனசுக்குப் பிடிச்ச மகராசனை வெட்டிட்டு செயிலுக்குப் போனா சாதிப் பெருமை வந்துருமா? இந்த ஊரு சாதி சனம் இந்த மனுசனுக்கு முச்சந்தியில சிலை வச்சிருமா. அன்னிக்கு பேப்பர்ல போட்டு காறி துப்பிற மாட்டணுக…’மாதங்கள் ஆறு புரண்டோடி விட்டது. அப்பா அழுக்கு வேட்டியும் கொலை வெறியுமா ஊர் ஊராகத் திரிகிறார். வந்தவருக்கெல்லாம் ஆறுதல் சொல்லும் மெரினா கடற்கரையில் ஒரு ஞாயிறு மாலையில் மகளை அவளது புருசனோடு பார்த்து விட்டார். கைகால்கள் பரபரத்தன. அவரது அனுபவ அறிவு எச்சரித்தது . ’ பாம்பும் சாகணும், கம்பும் நோகக் கூடாது. ஆத்திரப்பட்டு கொன்னு செயிலுக்குப் போயிறக் கூடாது.. அவர்கள் பின்னாலே சென்று தங்கியிருக்கும் இடம் கண்டு நோகாமக் கொல்லணும். அவர்களைப் பார்த்தால் கஷ்டப்படுவது போல் தெரியவில்லை.’

தொலைவில் நின்று அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அங்கே விற்கும் தின்பண்டங்களை வாங்கி ஓருவருக்கொருவர் ஊட்டிவிட்டுத் தின்றனர். மணி எழாகியது. மெல்ல எழுந்து பேருந்து நிறுத்ததிற்குப் போயினர். அப்பாவும் பின்தொடர்ந்தார்.

புரசைவாக்கம் நிறுத்தத்தில் இறங்கினர். அங்கிருந்த உணவகத்தில் இரவு சிற்றுண்டி வாங்கிக் கொண்டு ஒரு தெருவில் நடந்து ஒரு குருஞ் சந்துக்குள் நுழைந்தனர். அதில் கடைசி வீட்டுக் கதைவை திறந்து உள்ளே போய் ஜன்னலைத் திறந்தனர். அப்பா தூர இருந்து கவனித்தார் . ‘ஆளரவமற்ற சந்தாகத்தான் இருக்கிறது. வெட்டுக் குத்து சத்தமில்லாமல் காரியத்தை முடிக்கணும். ‘ அப்பா, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தார். தெருவே கதவுகள் மூடி தொலைக் காட்சிகளில் பிணைக்கப்பட்டு இருந்தன; விதவிதமான ஒலிகள் கசிந்தன.

துணிச்சலாக அவர் ஜன்னலருகே நின்று தனது முகத்தை அவர்கள் கண்டுவிடாமல் பதனமாக எட்டிப் பார்த்து நடப்பதை எல்லாம் கவனித்தார். மகளது காதல் கணவனை கொன்றுவிட்டு மகளுக்கு தன் சாதிக்குள்ளே ஒருவனைக் கட்டிவைக்க பொருத்தமானவன் யார் என்று தனது மனதுக்குள் இந்த ஆறு மாதமாகத் தேடிக்கொண்டே தான் இருக்கிறார். மகளுக்கு பொருத்தமான படித்த, வேலை பார்க்கிற மாப்பிளை யாரும் தென்படவில்லை. குறைந்த படிப்போடு நல்ல குணத்தோடு ,திறமையாக விவசாயம் பார்க்கும் திறனுள்ளவன் கிடைத்தால்கூட தனது நிலங்களைக் கொடுத்து விவசாயம் பார்க்கச் சொல்லலாம் என்றும் தேடிப்பார்த்தார். ஒருவரும் அமையவில்லை. இருப்பவர்கள் எல்லாம் இவரை மிஞ்சிய குடிகாரர்களாகவும் சுயக் கட்டுப்பாடு இல்லாத முரடர்களாகவே நினைவில் தாண்டவமாடுகிறார்கள். ரகசியமாக இவரது சாதி ப்ரோக்கர்களிடமும் சொல்லி வைத்துள்ளார். அவர்களிடமிருந்தும் நல்ல தகவல் ஏதும் வந்தபாடில்லை.
‘இவனைக் காலி பண்ணவேண்டும் என்று முடிவெடுத்து இவனது வீடுவரை வந்தாச்சு. இனி என்ன மறு யோசனை.? இவனை ஆயுதத்தால் கொன்றால் சந்தேகம் நம்மீது தான் வரும். மகள் பாசத்தில் நம் பொண்டாட்டியே நமக்கு எதிராக சொன்னாலும் சொல்லுவாள். ஆகவே அவர்கள் தூங்கியதும் எப்படியாவது தண்ணீரில் விஷத்தைக் கலந்திடனும். அக்கம் பக்கத்தார் காதல் ஜோடி விஷம் குடிச்சிருச்சுன்னு தான் பேசுவாங்க. நம்ம மேல சந்தேகம் வராது, சாட்சி சொல்லவும் எவருமில்லை .’

மெல்ல அவர் பூனைப்பாதங்களில் கதவருகே சென்று கதவை உற்றுப் பார்த்தார். கதவு உள்பக்கமாகப் பூட்டப் படாமல் வெறும் தாழ்ப்பாள் மட்டுமே இலேசாகப் போடப் பட்டிருந்தது. இலாகவமாகத் திறந்து விடலாம். ’ பாவம் இளமை வேகம்! தாழ்ப்பாளைக்கூட சரியாகப் போட பொறுக்கவில்லை. சரி, அவர்கள் உறங்கட்டும், அவர்களது படுக்கை அருகே உள்ள செம்பில் விஷத்தைக் கலந்து விடலாம்.’ அரவமில்லாமல் மீண்டும் ஜன்னல் அருகே வந்தார்.

மகளும் கணவனும் கேலியும் சிரிப்புமாய் பேசி ஒருவர் மற்றவருக்கு ஊட்டியபடி உண்டனர். பின், கணவன் மடியில் அவள் படுத்திருக்க அவன் எதோ சொல்ல அவள் சிரித்தபடி அவனை அணைத்துக் கொண்டாள். வெளியே இவருக்கு கொசுக்கடி தாங்கமுடியாமல் பற்களை இறுக கடித்தபடி உள்ளே நடப்பதை எல்லாம் கவனித்தார்.

அவரது மனது கடந்த காலத்திற்குள் தாவியது. ‘ இருபத்தைந்து வருஷம் குடும்பம் நடத்திய அருமை மனைவியை ஒரு நாளாவது தன் மடியில் கிடத்திக் கொஞ்சியதுண்டா, கனிவாப் பேசியதுண்டா… அவளுக்கு முடியாமல் இருக்கும்போதோ, கர்ப்ப காலத்தில் கூட அணுசரனையாகப் பேசியதுண்டா… ‘ நினைவுகள் சவுக்குகளாக சுழற்றின. ‘அங்கே பார், மகள் வயிற்றைப் பார்த்தால் கர்ப்பமாக இருப்பாள் போலிருக்கிறது. அவன் யார் பெற்ற மகனோ ஆனால் பொண்டாட்டியை என்னமாத் தாங்குறான். கொஞ்சுறான். வீட்டை விட்டு வந்த நினைவு அவளுக்கும் இருக்கும். அந்த வருத்தம் தலைகாட்டாமலிருக்க எப்படி குலாவுகிறான். இப்படி ஒருத்தன் நம்ம சாதியில் இருக்கிறானா… மகள் விருப்பபடி அமைந்த வாழ்க்கையை கெடுக்க நினைத்தோமே…’ தலையில் அடித்துக் கொண்டு துண்டை விரித்து வாசலில் அப்பா படுத்தார். அவருக்கு கொசுக்கள் தாலாட்டு பாடின…