சிறுகதை : தவிப்பு (Thavippu Short Story) Jaathi - Theendaamai Kodumaigal | Atrocity of untouchability - தீண்டாமைக் கொடுமை - https://bookday.in/

சிறுகதை : தவிப்பு

சிறுகதை : தவிப்பு

– பெரணமல்லூர் சேகரன் 

அதிகாலை வேளை. சிவகாமி துணி தைக்கும் அறையிலேயே படுக்கையிலிருந்து எழுந்து கூடத்திற்கு வந்தாள். லைட்டைப் போட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஐந்தரை. வழக்கமாக எழுந்திருக்கும் நேரந்தான். ஏன் அலாரம் அடிக்கவில்லை என்று நினைத்தபோதே அலாரம் அடித்தது. மொபைலை சமையலறையிலேயே விட்டுச் சென்றிருக்கிறாள். இப்போது அண்ணன் இளவரசுக்குத் தூக்கம் கெட்டு விட்டது. முனுமுனுத்தபடி போர்வையில் புகுந்து கொண்டான்.

சீக்கிரம் வேலைகளை முடித்துத் துணி தைக்க உட்கார வேண்டும். இன்னும் பத்து தினங்களே தீபாவளிக்கு இருக்கிறது. இந்த முறை துணி அதிகம்தான் வந்திருக்கிறது. வெளியூர் துணிகளும் வந்திருக்கின்றன. டவுனுக்குப் போனால் தையல் கூலி அதிகம். மேலும் அடிக்கடி போய் வர முடியாது. தீபாவளிக்குத் தைத்த துணியைத் தரவில்லையென்றால் சண்டை கட்டுவார்கள்.

காலைக் கடன்களை முடித்து பிரஷ்ஷால் பல் துலக்கித் தெருவுக்கு வந்தாள் சிவகாமி. தெருக்குழாயில் தண்ணீர் வரும். பிடித்து சீக்கிரமாக சமையல் வேலையைத் துவங்கி முடிக்க வேண்டும் என்று அவளை வேகப்படுத்தியது மனம். தெருக்குழாயைத் திறந்து தண்ணீர் பிடிக்கும்போதே வாடை அடித்தது. டேங்க் ஆபரேட்டர் டேங்கைக் கழுவினால் தானே!. அவன் ஒரு தண்ணிப் பார்ட்டி என்று மனதுக்குள்ளே திட்டிக் கொண்டே தண்ணீர் குடத்தை வீட்டுக்குள் எடுத்துச் சென்றாள்.

டீ போட்டுக் குடித்துவிட்டுத்தான் சமையல் ஆரம்பிக்க வேண்டும். மூனு வேளைக்கும் சேர்த்து கத்தரிக்காய் சாம்பார் வைத்துவிட்டு சாதம் வடித்துவிட்டால் தான்பாட்டுக்குத் துணி தைக்கலாம் என்று திட்டம் போட்டாள் சிவகாமி. டீ போடும் போதும் வாடை வந்து தொலைத்தது. அண்ணன் இளவரசுக்குப் பெரிய தம்ளரில் போட்டு வைத்துவிட்டுத் தான் சிறிய தம்ளர் டீயைக் குடித்தாள். டீ குமட்டிக் கொண்டு வந்தது. அரை கிளாஸ் டீ குடித்தவள் மீதி அரை கிளாசை மூடி வைத்து விட்டுக் குழம்பிக் கொண்டே தெருவுக்கு வந்தாள்.

ஒரே கூச்சலாக இருந்தது. வார்டு மெம்பர் சிலுப்பனிடம் பணி தளப் பொறுப்பாளர் முனியம்மா சத்தம் போட்டுப் பேசிக் கொண்டே தனது அம்மாவைக் கைத்தாங்கலாகப் பிடித்து வந்தாள். பின்னாலேயே தலப்பா பெரியவர் தனது மனைவியைத் தாங்கிக் கொண்டு வந்தார். மேலும் குழப்பமானாள் சிவகாமி. இப்போது அருகில் வந்துவிட்டார்கள்.

“அண்ணே, என்னாச்சின்னே முனிமா அம்மாவுக்கு? பின்னாடி தலைப்பா பெருசு பாட்டியக் கைத்தாங்கலா பிடிச்சிட்டு வர்றாரு?”

குறுக்கிட்ட சிலுப்பன், “வந்து விலாவாரியா சொல்றேன். மொதல்ல கொழா தண்ணியப் பிடிக்காத. ராட்ன கெணத்தண்ணிய சேந்தி காயவச்சிக் குடி. எல்லா வீட்டுக்கும் சொல்லிட்டேன். உனக்குத்தான் கடைசி. இப்ப பாதிக்கப்பட்ட இவங்க ரெண்டு பேரையும் டவுன் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போறேன். நூத்தி எட்டுக்கும் போன் பன்னியாச்சி. டேங்க் ஆபரேட்டர டேங்க்ல ஏறிப் பார்க்கச் சொல்லியிருக்கேன். இப்பத்தான் விடியுது. அனேகமா இந்நேரம் பாத்திருப்பான். இளவரச எழுப்பி வரச்சொல்லு.”

விடாமல் ஒப்பிப்பது போலப் பேசிக் கொண்டே ரோட்டுக்குப் போனான் சிலுப்பன். இப்போது ரோட்டில் இருக்கும் சிறுபாலத்தில் நால்வரையும் உட்கார வைத்தான் சிலுப்பன். ரெண்டு கிழவிகளும் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர். இப்படி வாந்தியெடுத்தால் வரப்போற கவர்மென்ட் டிரான்ஸ்போர்ட் பஸ் ஏத்துவானான்னு தெரியலயே! சண்டை கட்டியாவது ஏத்தித்தான் ஆகனும். டேங்க் ஆப்ரேட்டர் சிங்காரம் வேற ஆளக்காணமே!

மனதின் நச்சரிப்பு திசை மாறியது சிலுப்பனுக்கு. இப்போது லுங்கியுடன் ரோட்டுக்கு வந்துவிட்டான் இளவரசு. நூத்தி எட்டும் வந்தது. கூச்சல் போட்டபடி வந்து சேர்ந்தான் சிங்காரம்.

“சிலுப்பா! நா என்னத்த சொல்வேன்” என்றபடி வண்டியை ஸ்டேண்ட் போட்டான். டேங்க் மேல ஏறிப்பாத்தா பீயாக் கெடக்கு சிலுப்பா. ராத்திரி பதினோரு மணிக்கு டேங்க்ல தண்ணி ஏத்திட்டு நான் போய் படுத்திட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்திருக்கும்னு தெரியல”

குறுக்கிட்டனர் ரெண்டு கிழவிகளும். “பீ வாடத்தான் வந்துது சிங்காரம். எப்டி சொல்றதுன்னு தெரியாம பல்லக்கடிச்சிக்கிட்டு சுடத்தண்ணியக் குடிச்சேன். விடிகால வர்ற இருமலுக்கு சூடா தண்ணி குடிச்சா எதமா இருக்குன்னு கொழாயில தண்ணி பிடிச்சி சுடவச்சிக் குடிச்சேன். ஐயோ பீத்தண்ணியா?” என்றபடி வாந்தி எடுத்தாள் தலப்பா பெரியவரின் சம்சாரம்.

“ஐயோ முனிமா டீ போட்டுக் குடுத்துட்டு நான் பெறகு குடிச்சிக்கிறேன்னு படுக்கப் போயிட்டா. குடிச்ச எனக்குத்தான இப்ப வாந்தியா வருது.” வாந்தியெடுத்தாள்பணித்தள பொறுப்பாளர் முனியம்மாவின் அம்மா. இளவரசும் தலப்பா பெருசும் டேங்கில் மலத்தைக் கொட்டியவர்களைப் பொரிந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

குறுக்கிட்ட சிங்காரம், “சில பசங்க என்னத்தா திட்டும். அடிக்கவும் செய்யும். எவனோ பன்னத் தப்புக்கு நா என்ன பன்னுவேன். இளவரசு எங்கூட வரட்டும்” என்றபடி சிலுப்பனைப் பார்த்தான். சைகை செய்து ரெண்டு பேரையும் சேரிக்குப் போகச் சொல்லிவிட்டு ஆம்புலன்சுக்குள் ஏறினான். ரெண்டு படுக்கைகளிலும் ரெண்டு பேரையும் படுக்க வைத்து அவரவர் அருகில் சொந்தங்களை உட்கார வைத்துவிட்டு கேபினுக்குள் டிரைவர் பக்கத்தில் சிங்காரத்தை உட்காரச் சொல்லிவிட்டு வண்டியிலிருந்து இறங்கினான். வண்டி புறப்பட்டது.

சிறுபாலத்தில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு நம்பராகப் போட்டான். ஒருவர்கூட போன் எடுக்கவில்லை. மொபைலில் மணியைப் பார்த்தான். மணி ஆறரை. இப்போது லைனில் வந்தார் தாசில்தார். சிலுப்பன் நடந்ததைச் சுருக்கமாக சொன்னான். ஒரு மணி நேரத்துக்குள் போலீஸ், ஹெல்த் ஸ்டாபுடன் வருவதாகத் தெரிவித்தார். பெருமூச்சு விட்டான் சிலுப்பன். ‘இனி தாசில்தார் பார்த்துக் கொள்வார்’ என்று சொன்னது உள்மனம்.

“இதுவரை கேள்விப்படாத, சந்திக்காத தீண்டாமைக் கொடுமையாக இருப்பது சிலுப்பனைப் படுத்தியது. இப்பேர்ப்பட்ட நெருக்கடியான காலகட்டத்தில் மிலிட்டரி ஆளுங்க பூவரசோ, கோபியோ இல்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டே கோபிக்குப் போன் போட முயற்சித்தான். ஆச்சரியமாக லைன் கிடைத்தது.

“அண்ணே, தகவல் தெரிஞ்சி தொடர்ந்து முயற்சி பன்னேன். கிடைக்கல. கட்டாகறதுக்குள்ள விசயத்துக்கு வரேன். சிவகாமி பேசிச்சி. அதுவும் ஒரு முறை வாந்தி எடுத்துச்சாம். ஒரு முழுங்கு டீத்தண்ணி குடிச்சிருக்கு. அதையும் ஆஸ்பத்திரிக்குப் போகச் சொல்லியிருக்கேன். கலெக்டர்‌, எஸ்.பி, மெடிகல் டிபார்ட்மெண்டுக்கெல்லாம் மிலிட்டரி மேலதிகாரிங்க மூலமா தகவல் குடுத்துட்டேன். பூவரசு தீபாவளிக்கு வருவானான்னு தெரியல. அவனுக்கு பார்டர்ல பிரச்சினை. எனக்கு லீவ் சேங்ஷன் ஆயிடுச்சி. ஒரு வாரத்துல வருவேன். அதுவரைக்கும் நீங்கதான்”

போன் கட் ஆகிவிட்டது. கனெக்சன் கிடைத்து கோபி இவ்வளவு நேரம் பேசியதே பெரிய விசயம். இப்போது இளவரசு சிவகாமியுடன் மோட்டார் சைக்கிளில் வந்தான்.

சிறுபாலத்தின் மீதமர்ந்திருந்த சிலுப்பன் அவர்கள் அருகில் ஓடிவர இளவரசு மோட்டார் சைக்கிளிலிருந்து காலை ஊன்றினான். சிவகாமி இளவரசு முதுகில் சாய்ந்திருந்தாள்.

“என்ன சிவகாமி, ஒரு முழுங்கு டீத்தண்ணிதான குடிச்ச, ஒருதரம்தான வாந்தி எடுத்த, கோபி போன் பன்னிச்சி” இப்போது நிமிர்ந்தாள். மந்திரச் சொல் மாதிரிதான் ‘கோபி’ இருக்கிறது சிவகாமிக்கு.

“ஆமாண்ணே! ஒரு தரம்தான் வாந்தி எடுத்தேன். ஆனா குமட்டிக் கிட்டே இருக்கு”

“கண்டிப்பா இருக்கும்மா. அதுவும் சிங்காரம் வாயால அப்படிச் சொன்ன பிறகு அதே ஞாபகந்தான வரும். ஒப்பாதில்ல. வேதனையா இருக்கும்மா”

நூத்தி எட்டு வண்டி மீண்டும் வந்து நின்றது. மடமடவென அதிலிருந்து ரெண்டு பேர் இறங்கவும் இளவரசு சிவகாமியை வண்டியில் ஏற்றினான். இப்போது சிலுப்பனைப் பார்த்தான்.

“இளவரசு, ஆஸ்பத்திரிக்குப் போனதும் போன் பன்னு. எமர்ஜென்சியா நம்ம ஆட்கள டாக்டருங்க பாக்கலன்னா நாம ரோட்ல உக்காந்துருவோம்”
குறுக்கிட்ட இளவரசு, “நாம உக்கார வேண்டியது அதுக்கிருக்காது. ஏன்னா மெடிக்கல் டிபார்ட்மெண்ட்ல கோபி பேசிட்டான். ட்ரீட்மெண்ட் போய்கிட்டிருக்கு. ஆனா குற்றவாளிங்களக் கண்டுபிடிச்சி ஜெயில்ல‌ அடைக்கிறதுக்கும் பாதிக்கப்பட்ட நமக்கு நீதி கிடைக்கிறதுக்கும் நாம தொடர்ந்து ரோட்ல உக்கார வேண்டி வரும்.”

நூத்தி எட்டு வண்டி ட்ரைவர் ஹாரன் அடித்துக் கொண்டே இருந்தார். சைகை செய்து இருவரையும் சிலுப்பன் போகச் சொல்ல நூத்தி எட்டில் பயணமானார்கள் சிவகாமியும் இளவரசுவும்.

தெருவுக்குப் போய் யாரையும் அந்தப் பீத்தண்ணியப் பயன்படுத்தாமப் பார்த்துக்கனும். குடிக்க பொட்டுத் தண்ணி இல்லன்ற காரணத்தால கரிச்சிக் கொட்றாங்க மக்க. ராட்ன கெணத்துல தண்ணிய சேந்திக் குடிக்கனும். அதுவும் உப்பாப் போச்சி. வசதி உள்ளவங்க ஊர்ல கடையில போய் கேன் தண்ணியும் வாங்க முடியாதில்ல. பாழாப்போன ஊர்க்கட்டுப்பாடு இருக்குதில்ல. அந்தக் கோபம், எரிச்சல் எல்லாம் சேர்ந்துக்கொண்டது சிலுப்பனுக்கு.

மிலிட்டரியிலிருந்து இப்போது எல்லா அதிகாரிகளிடமும் கோபி பேசினான். சிலுப்பனும் தாசில்தாரிடம் பேசினான். இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவதாகத் தெரிவித்தார்.

சிலுப்பன் தனது பைக்கை உதைத்தான். மலம் கலந்த மகாபாவிகளை உதைத்ததாய் எண்ணிக் கொண்டான். ஏனோ மனக்கண்ணில் தலைவரும் இமாலயனுமே நிலையாய் நின்றார்கள்.

கலெக்டர், ஆர்.டி.ஓ. தாசில்தார், பி.டி.ஓ. எஸ்.பி, டி.எஸ்.பி என எல்லோருக்கும் மனு கொடுத்து பத்து நாட்கள் ஓடிவிட்டன. எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் அவற்றின் துணிச்சலுக்கேற்ப செய்தியை ஒலியும் ஒளியும் ஆக்கின.

சேரிப் பகுதி வார்டு மெம்பர் என்ற முறையில் சிலுப்பன் தைரியமாகத்தான் பேட்டி கொடுத்தான். ஆனால் ஓரிரு சேனல்கள் மட்டுமே அவன் பேசிய எல்லாவற்றையும்  ஒளி பரப்பின. மிலிட்டரியிலிருந்து கோபியும் பூவரசம் அவர்களது உயரதிகாரிகள் மூலமாக அழுத்தம் கொடுத்தனர். என்னதான் அழுத்தம் கொடுத்தாலும் அமுல்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் நேர்மையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமே!

பதினைந்து நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் புதியதாக எஸ்.பி. பலராமன் பொறுப்பேற்றார். முதல் பத்திரிகை நிருபர்கள் சந்திப்பிலேயே பூவயல் கிராமத்தில் சேரிப் பகுதியின் தண்ணீர் டேங்கில் மலம் கலந்த விவகாரம் பற்றித்தான் கேள்விகள் எழுந்தன.

“நான் வேறு மாவட்ட எஸ்.பி. ஆக இருந்தபோதே இந்த விவகாரம் பற்றிக் கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். இப்போது என்னிடமே இந்த வழக்கு வந்திருக்கிறது. பத்தே நாளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவேன்” என்று எஸ்.பி. பலராமன் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது.

பேட்டியில் சொன்ன மாதிரியே தனக்கு நம்பகமான இன்ஸ்பெக்டர், ஸ்பெஷல் பிராஞ்ச் போலீசை வைத்துக் கொண்டு பூவயல் ஊரிலும் சேரியிலும் தினமும் வலம் வந்தார்.

ஏற்கெனவே சுடுகாடு பிரச்சினையில் ஊருக்கும் சேரிக்கும் ஊர்க்கட்டுப்பாடும் சோரிக்கட்டுப்பாடும் இருந்து வந்த நிலையில் அதன் விவரங்களை அக்குவேர் ஆணிவேராகத் தெரிந்து கொண்டார் எஸ்.பி. ஊர்க்கட்டுப்பாட்டை ஊர்த்தலைவர் வலுக்கட்டாயமாக்கியதும் எதிர்வினையாக சேரிக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்ட விவரங்களைத் துருவித் துருவிக் கேட்டுத் தெரிந்து கொண்டார் எஸ் பி. மிலிட்டரியிலிருந்து கோபியும் பூவரசும் ஊர்த் தலைவர் மற்றும் அவரது அடியாள் இமாலயன் செய்து வரும் அட்டூழியங்களைப் பட்டியலிட்டிருந்தனர். சேரியில் இறப்பு ஏற்பட்டால் பிணத்தைப் புதைக்க இடம் தராமல் அட்டூழியம் செய்து வந்ததை ஊர்க்காரனாக இருந்தாலும் மிலிட்டரி கோபியின் மூலம் தெரிந்து கொண்டார் எஸ்.பி.

சேரி வார்டு மெம்பர் சிலுப்பன் தவிர எல்லோருமே தலைவரின் ஜால்ரா மெம்பர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டார் எஸ்.பி. ஒருநாள் துணைத்தலைவர் சங்கரைப் பக்குவமாகப் பேசி தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு டவுனுக்குக் கொண்டு போய் தனது அறையில் ரகசிய விசாரணை நடத்தினார்.

எல்லா உண்மையையும் சொல்லிவிட்டால் துணைத்தலைவர் இன்பார்மர் ஆகிவிடலாம். எந்த பாதிப்பும் இருக்காது என்ற எஸ்.பி யின் வார்த்தைகளில் சங்கருக்கு நம்பிக்கை வந்தது. தனது மொபைலில் தலைவரின் வாட்ஸ்அப் ஆடியோவை ஆன் செய்தான் சங்கர். அங்கு இவர்கள் இருவரைத் தவிர வேறு எவருமில்லை.

“டேய். சங்கர். நானும் இமாலயனும் ஊர விட்டு வந்து பதினைந்து நாளாவுதே..ஒரு நாளாவது போன் போட்டிருப்பியா”

“தலைவரே, நீங்க எங்கிட்ட சொல்லிட்டாப் போனீங்க. உங்க வீடு பூட்டிக் கிடக்கு. சேரி டேங்கில் மலங்கலந்துட்டாங்கன்னு ஊரும் சேரியம் களேபரமா ஆயிடுச்சி. போனப் போட்டா போனே போகல. உங்க கூடவே திரியுற இமாலயனயும் பார்க்க முடியல. அவனோட வீடும் பூட்டிக்கிடக்கு. நான் என்ன செய்யட்டும். போன மாசம் சம்பளமும் யாருக்கும் கொடுக்கல. பி.டி.ஓ. கிட்ட புகாரா குடுத்திருக்காங்க டேங்க் ஆப்ரேட்டர்களும் துப்புரவுப் பணியாளர்களும். நீங்க இல்லாததால நூறுநாள் வேலை செய்றவங்களுக்கும் சம்பளம் போட முடியல. எனக்கும் செலவுக்கு ஒத்த ரூவா இல்லாம சிக்கலாயிடுச்சி. ஒயின்ஷாப்ல உங்க அக்கௌன்ட்ல சரக்கு கேட்டா நீங்க சொன்னாதான் குடுப்பேன்னு சொல்லிட்டாங்க. சேரியில உங்களப்பத்தியும் இமாலயனப்பத்தியும்தான் சந்தேகப்படுறாங்க.”

“டேய் சங்கர். எங்க ரெண்டுப் பேரையும் யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. சேரிப் பசங்களும் மிலிட்டரி பசங்களும் தலகீழாத் தண்ணி குடிச்சலும் ஒன்னும் பண்ண முடியாது. மந்திரி, எம்.எல்.ஏ சப்போர்ட் இருக்கும்போது எங்கள என்ன செய்ய முடியும். எதுக்குமே சாட்சி வேணும். நடுராத்திரியில் நானும் இமாலயனும் மட்டுமே டேங்க்ல பீயக் கொட்னோம். இதுக்கு ஒரு சாட்சியும் இல்ல. எங்கால சுத்தற நாயி நீ. பஞ்சாயத்துல உனக்கு நான் படியளக்கறப்ப நீயா என்னக் காட்டிக் குடுக்கப்போற. அடிக்கடி சொல்வியே, ‘சேரிப்பசங்களுக்குக் காலத்துக்கும் வடுவா இருக்கிற மாதிரி ஒன்னு செய்ங்க தலைவரே’ன்னு. அதைத்தான் செஞ்சிருக்கோம். இனி ஒரு சேரிப் பயலும் வாலாட்ட மாட்டானில்ல. ஆமா, எதோ புது எஸ்.பி. வந்திருக்கானாமே, சின்னப்பய அவனோட வீக்னெஸ் என்னன்னு கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கேன். நீயும் விசாரி. சரி. வச்சிரவா”

“தலைவரே, சீக்கிரம் வாங்க, எனக்கு இங்க ரொம்ப சிரமமா இருக்கு”

“கட்டாயம் வருவன்டா, தீபாவளிக்கு நம்ப பஞ்சாயத்து ஆட்களுக்கும் அதிகாரிகளுக்கும் கிப்ட் கொடுக்கனும்ல.”

“என்ன மறந்துடாதீங்க தலைவரே”

“உன்ன மறக்க முடியுமாடா நாயே! மொத வேலயா நான் சொன்ன விவரங்களத் தெரிஞ்சிக்கிட்டு போன் பண்ணு. மத்த அதிகாரிகள்ளாம் எம்பக்கம்தான.”

நின்றுபோனது ஆடியோ. முகம் வியர்த்தது சங்கருக்கு.

முகம் மலர்ந்தது எஸ்.பிக்கு. இவ்வளவு எளிமையாக வேலை முடியும் என எதிர்பார்க்கவில்லை எஸ்.பி.

நாளை தீபாவளி. பூவயல் கிராம மக்கள் பெரும்பாலோர் மனதளவில் சங்கடப்பட்டனர். நல்ல நாளில் கூட சேரி மக்கள் தங்களது தண்ணீர் டேங்கில் மலம் கலந்தவர்கள் கைது செய்யப்படாமல் வேறு டேங்க், வேறு பைப்லைன் அமைக்காமல் தினம் தினம் குடிநீருக்காக அல்லாட வேண்டி இருக்கிறதே என்று வருத்தப்பட்டனர். தலைவரும் இமாலயனும் பதினைந்து நாளாய் ஊரில் இல்லாததால் சேரி மக்கள் அவர்களை சந்தேகப்படுவது ஊர் மக்களுக்கும் ஊர்ஜிதப் படுத்துவதைப் போலானது. புது எஸ்.பி. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விடுவார் என சிலர் நம்பினர்.

புதிய சிவப்பு நிறக் கார் தலைவர் வீட்டு முன்பு வந்து நின்றது. தலைவரும் இமாலயனும் காரிலிருந்து இறங்குவதை தூர இருந்தே வேடிக்கை பார்த்தனர் பலர். ஐந்து நிமிடங்களில் வரிசையாக ஜீப்புகள் சரசரவென வந்தன. திபுதிபுவென போலீஸ் அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்தனர். ஒரு ஜீப்பில் இன்ஸ்பெக்டருடன் சங்கரும் இறங்குவது தெரிந்தது.

பத்து நிமிடத்தில் தலைவரையும் இமாலயனையும் விலங்கிட்டு அழைத்து வந்தார் எஸ்.பி. தலை குனிந்தபடி இருவரும் ஜீப்பில் ஏறினர். துணைத்தலைவர் சங்கர் எஸ்.பி. வண்டியில் ஏற்றிக் கொண்டான்.‌ ஐந்து ஜீப்புகளும் மெதுவாக நகர்ந்தன.

இப்போது இளைஞர்கள் ஆயிரம் வாலா பட்டாசைக் கொளுத்தினர். சத்தம் காதுகளைத் துளைத்தன. அந்தக் காட்சியைக் கண்டு கொண்டிருந்த சிலுப்பனுக்கும் இளவரசுக்கும் இன்னிசை போலத்தான் கேட்டது. அவர்களது தவிப்பு முடிவுக்கு வந்து முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது. அதற்கு அளவே இல்லை.

எழுதியவர் :

– பெரணமல்லூர் சேகரன்

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *