நூல் அறிமுகம்: எழுத்தாளர் அகிலாவின் *பேரும், பேறும் (தவ்வை நாவலை முன்வைத்து)* – எஸ்.ஜெயஸ்ரீஅகிலா அவர்கள் கவிதை, சிறுகதை, ஓவியம் என பன்முக ஆளுமை உடைய ஒரு மனநல ஆலோசகர். இந்த நாவல் மூலம் இன்னும் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கிறார்.

ஆண்களில்தான் எத்தனை விதம்? அத்தனை விதத்திலும், குறைந்த சதவீத ஆண்களைத்தவிர, பெரும்பாலான ஆண்கள், தாங்கள் ஆண்கள் என்று தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பெண்களையே தாக்குதல் இடமாகக் கொள்கிறார்கள். பல விதமான துன்புறுத்தல்களில் ஒன்று, பெண்ணை. தன் வாரிசை உருவாக்கித் தரச் சொல்லி வற்புறுத்துவது. தன்னிடம் இருக்கும் குறையை ஒருபோதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், பெண்ணையே இவ்வுலகத்தார் முன்னால் ஓர் இழி பிறவி போன்று நிறுத்துவதில் ஆண் அடையும் சந்தோஷம் என்பது அளவில்லாதது. உலகம், அறிவியல், கலாச்சாரம், பண்பாடு என பல விதங்களில் மாறியிருந்தாலும், பெண்ணின் மேலான இந்தத் தாக்குதலைக் கருவாய் முன்வைத்து அகிலா அவர்கள் “தவ்வை “ என்ற நாவலைப் படைத்திருக்கிறார்.

பணம் படைத்த வீட்டுப் பிள்ளை ராமநாதன். குடும்ப விவகாரங்களில் ஈடுபட்டுக் கொள்ளாமல், பொறுப்பற்று, தான்தோன்றித்தனமாக இருக்கிறான். திருமணம் செய்து வைத்தால் எல்லம் சரியாகும் என்ற ஒரு போக்கில்,பொருளாதாரத்தில் அவர்களுக்கு சம அந்தஸ்தில்லாத, தந்தையில்லாத, தாய் மட்டுமே இருக்கிற வீட்டுப் பெண்ணை மணம் முடித்து வைக்கிறார்கள். ராமநாதனோ ஆண்மையற்றவன். இது வெளி உலகிற்கு எப்படித் தெரியும்? அவன் தன் இயலாமையை மறைக்க, தவ்வையுடனான ஒவ்வொரு இரவையும் நரகமாக்குகிறான். அவளை, தங்கள் வீட்டுப் பண்ணையாள் ரங்கனுடன் உறவு கொள்ள வைத்து, பிறக்கும் பிள்ளையை தன் பிள்ளை என்று ஊரும், உலகமும் நம்ப வைத்து விடுகிறான். , அதன் விளைவாக தவ்வை, பிள்ளைப் பேற்றிற்குப் பிறகு, மன நோய்ப் படுகிறாள். தன் பிள்ளையை கவனித்துக் கொள்ள முடியவில்லை. ராமநாதனின் கோபமும், இயலாமையும் இன்னும் அதிகமாகிறது. போதைக்கு அடிமையாகிறான். அந்தப் பண்ணையாள் ரங்கனையும் கொல்கிறான். இது எதுவுமே ஊராருக்குத் தெரியாது. ரங்கன் பாம்பு கடித்து இறந்ததாக நம்ப வைக்கப்படுகிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான ராமநாதனும் இறக்கிறான். மாமனார், சங்கரலிங்கம் தவ்வை மேல் மிகுந்த அன்பு பாராட்டுகிறார். அவர் அவளை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்து ஆசிரியை பயிற்சி எடுக்க வைத்து ஆசிரியையாக்குகிறார். ஆனாலும், தவ்வை, அந்த பெரிய வீடெல்லாம் தனக்கு வேண்டாம் என்று துறந்து, பக்கத்திலேயே, அவர்களுக்குச் சொந்தமான ஒரு ஓட்டு வீட்டில் தன் வாழ்க்கையைத் தொடர்கிறாள்.

நாவல், தவ்வையின், பேரனும், அவன் மனைவி, கொள்ளுப் பேரக் குழந்தைகளும் ரெட்டிப்பட்டி என்ற அந்த கிராமத்திற்கு வரப் போகிறார்கள் என்பதில் தொடங்கி, பின்னோக்கி கதையைச் சொல்கிறது. அந்தப் பேரன் விசாகன் என்பவன் தோல் நிறத்தில் கறுப்பாக இருக்கிறான். ஏன் அப்படி என்று தவ்வையின் மருமகள் பல முறை கேட்கிறாள். அப்போதெல்லாம் முந்திய தலைமுறையில் யாராவது அப்படி இருந்திருப்பார்கள் என்று தவ்வையின் மகன் பதில் சொல்கிறார். விசாகனின் மனைவி வைசாலிதான் தவ்வையின் வாழ்க்கையில் நடந்த அந்த ரகசியத்தைத் தான் தெரிந்து கொண்டு, அந்த ரகசியத்தைத் தன்னோடு பாதுகாத்துக் கொள்வோம் என்று மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். இப்படி நாவல் முடிகிறது.

தவ்வை நாவல் அறிமுகம் - முனைவர் பிரேமா - YouTube
எழுத்தாளர் அகிலா

இது சாதாரணக் கதை போன்றுதான் தோன்றுகிறது. ஆனால், உளவியல் சிக்கலையும் சேர்த்தே பேசுகிறது. ராமநாதன் திருமணத்திற்கு முன்பே, தன் அப்பாவுடன் சுமுகமான உறவு பேணுவதில்லை. எப்போதும் தனியாகவே பொழுதைக் கழிக்க விரும்புகிறான். அப்பா, பலமுறை அவனைக் கண்டிக்கும்போதெல்லாம், அவனுடைய தாய், அவனைப் பாதுகாக்கிறாள். அவன் கணக்குப் பிள்ளையோடு வேலை செய்து கொண்டிருந்ததாக பொய் சொல்கிறாள். அவனுடைய தனிப்பட்ட நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்கத் தவறுகிறார்கள். ஒரு வேளை, தந்தை அவனுடன் ஆரம்பத்திலேயே நட்புடன் நெருங்கியிருந்தால், ராமநாதனும் சாதாரண ஆண்மகனாக வளர்ந்திருப்பான். தாய் என்பவள் அவனை பொத்திப் பொத்திக் காப்பாற்றுவது அவனுக்கு தீமையாகவே முடிகிறது என்பதெல்லாம் நாவலின் ஊடே வாசகர் உணர முடியக் கூடிய செய்திகள்.

அதே போல், தவ்வை திருமணம் ஆன புதிதில் ராமநாதன் படுத்தும் பாட்டையெல்லாம், யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. திருமண உறவு எப்படி இருக்கும் என்பதையே அவள் அறியவில்லை. அவள் தன் தாயாருடன் மனம் விட்டுப் பேசலாம் என்று நினைக்கும்போதெல்லாம், அவள் தாயோ, தன் மகனைப் பற்றிய கவலைகளையே பேசுகிறாள். அதனால், தவ்வை, அவளுடைய தாயுடன் பேசுவதையும் குறைத்துக் கொள்கிறாள். ஆண்கள் இப்படி அப்படித்தான் இருப்பார்கள் என்ற சிந்தனையே பெண் என்பவளுக்கு உருவேற்றப்பட்டிருப்பதால், வெளியில் சொல்லவும் முடியாமல், பெண் என்பவள் எப்படி தவிக்கிறாள் என்பதை தவ்வை பாத்திரப்படைப்பு மூலம் உணர முடிகிறது.

ரங்கனை, தவ்வைக்கு, அந்த வீட்டிற்கு மருமகளாக வந்த நாள் முதலே பிடிக்கிறது. இந்த அன்பை அவளும் வித்தியாசமாக உணரவில்லை. இந்த அன்பு எந்த இடத்திலும் இடரலாகவே சித்தரிக்கப்படவில்லை. அவனுக்கு சாப்பாடு போடும் வேலையைத் தவிர, அவனுக்கும் அவளுக்குமான உரையாடல்கள் கூட கிடையாது. ராமநாதனின் குறுக்குப் புத்தி மட்டுமே இந்த உறவை தவறாகப் பார்க்கிறது. அதையே தனக்கு சாதகமானதாகவும் ஆக்கிக் கொள்கிறது.

நாவலில் தவ்வைக்கும், ரங்கனுக்கும் நடந்த உறவு பற்றியும், தவ்வைக்கு அவனைப் பிடித்திருந்தது என்பதைப் பற்றியும் எல்லாம்., எதையுமே நாவலாசிரியர் வெளிப்படையாகச் சொல்லாமல், பூடகமாகச் சொல்லியிருப்பது அவரது திறமை என்றும், அது நாவலின் வெற்றி என்றும் சொல்லலாம்.

தவ்வை என்பதற்கு என்பது ஜேஷ்டாதேவி என்று அர்த்தம். ஜேஷ்டாதேவி என்பதற்கு, மூதேவி என்று அர்த்தம். மூதேவி என்ற சொல்லை நாம் தொடர்ந்து பேச்சு வழக்கில் வசவுச் சொல்லாகவே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், அதற்கு, மூத்த தேவி என்றும் பொருள் கொள்ளலாம். அதுவும், பல குடும்பங்களில், குடும்ப ரகசியங்களைக் காப்பதில் பெண்களே வழிவழியாக வாழவைக்கும் தெய்வங்களாக இருக்கிறார்கள். பெண்கள் தனக்குத் தெர்நித குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்ல ஆரம்பித்தால், குடும்ப நிலைமைகளே மாறி அமைதி கெட்டுவிடும். அதனாலேயே, காலங்காலமாக, வழி வழியாக, ஒவ்வொரு குடும்பத்திலும்,. குடும்ப ரகசியங்கள் தெரிந்த பெண்கள், அவற்றை மனதில் புதையலாகப் போட்டுப் புதைத்துக் கொள்கிறார்கள். அதனால், அந்தக் குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றும் ஒளி விளக்கேந்திய காரிகையாகவே, வழிநடத்திச் செல்லும் மூத்த குடிமகளாக இருக்கிறாள். அப்படித்தான், தவ்வை, தனக்கு நடந்த எதையும் யாரிடமும் சொல்லவில்லை. பிறகு, அதை தெரிந்து கொண்ட வைசாலியும், தொடர் ஓட்டத்தில் ஒளி விளக்கை வாங்கிக் கொள்வது போல, அடுத்த தலைமுறையின் வழிகாட்டியாக அந்த ரகசியத்தைப் பாதுகாத்துச் செல்ல முடிவெடுக்கிறாள்.பெண்கள் இப்படி காலங்காலமாக குடும்பத்தின் கௌரவம் காக்கும் தவ்வைகளாகவே இருப்பதனால்தான், பல குடும்பங்களில் ராமநாதன் போன்ற ஆண்களும் உயிர் பிழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குல கௌரவத்தையும், குடும்ப கௌரவத்தையும் காக்கின்ற பெண்கள் எல்லாருமே தவ்வைகள்தான்.

தவ்வை, இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்த போதிலும், அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதும், மன அழுத்தத்திற்குப் பிறகும் அவர் மீண்டு வந்து ஆசிரியை ஆனார் என்பதும், இப்படி அவரை அன்பால் அரவணைத்து மீட்டெடுத்ததில் சங்கரலிங்கத்திற்குப் பெரும்பங்கு என்பதன் மூலம், பெண்கள் பால் கரிசனமாக இருக்கும் ஆண்களும் உண்டு என்பதும் எல்லாம் நாவலாசிரியர் காட்டும் நேர்மறைச் சிந்தனைகள். பெண்கள் என்றால் கஷ்டங்கள் அனுபவித்தால், தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லாமல், அது நடந்து விட்டது என்று தள்ளி விட்டு எழுந்திருந்து மேலே வருவதும், வாழ்ந்து காட்டுவதும் பெண்களின் மன உறுதியைக் காட்டுகிறது. இப்படியான மன உறுதி கொண்ட பெண்ணாக தவ்வையைப் படைத்திருப்பதும் நாவலின் வெற்றி. தவ்வை அந்தப் பெரிய பணக்கார வீடு, அந்தச் சொத்து எல்லாம் துறந்து, தனியாக பக்கத்தில் ஓட்டு வீட்டில் வந்து வாழ்வது என்பது, பெண்களின் மன உறுதிய, “போங்கடா…நீங்களும், உங்க சொத்தும்” என்று தூக்கியெறியும் மனோபாவம் பெண்ணின் மன உறுதிக்கு ஒரு குறியீடு.

நாவலில் விரித்துச் சொல்வதற்கும், வர்ணனைகளுக்கும் நிறைய இடமிருந்த போதும், அகிலா அவர்கள் அதைத் தவற விட்டிருப்பது இந்த நாவலின் குறையாகச் சொல்லலாம். ஆனால், அது எந்த விதத்திலும் நாவலைக் குறைத்து மதிப்பிட வைக்கவில்லை என்பதுதான் நாவலின் வெற்றி. அகிலாவுக்கு பாரட்டுகள். சிறப்பான முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வந்திருக்கும் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் பாராட்டுக்குரியவர்கள்.

—————————————