`கொட்டுக்காளி’ கிராமத்து வாழ்வனுபவத்தை சொல்லும் அருமையான திரைப்படம் !
அந்த வாழ்வில் பெண்ணைத் திட்டுவதும், அடிப்பதும், அவள் விருப்பங்களை, உரிமைகளை ஒடுக்குவதும், ஆணாதிக்கத்தையும், ஆணின் விருப்பத்தையும் தூக்கிப்பிடிப்பதும் `இயல்பானதாக’ ஆக்கப்பட்டிருப்பதை தோலுரித்துக் காட்டுகிறது.
ஒரு நாளின் அதிகாலையில் ஆரம்பித்து, மாலையில் முடியும் எளிய கதை. அதனுள் எத்தனை எத்தனை அடுக்குகள், நுட்பங்கள் !
கதாபாத்திரங்களை மட்டுமல்ல, ஒவ்வொரு காட்சியையும் உண்மைக்கு வெகு நெருக்கத்தில் பார்த்துப் பார்த்து செதுக்கியிருக்கிறார் இயக்குநர் தோழர் பி.எஸ்.வினோத்ராஜ்!
கதாநாயகியாக அன்னா பென். கடைசிக்காட்சியைத் தவிர மொத்தப்படத்திலும் அவருக்கு வசனமே இல்லை. அதுவும் பொட்டில் அறையும் ஒரு வரி வசனம் மட்டுமே. பெரும்பாலும் அழுத்தமான, வெறுமை உணர்வை வெளிப்படுத்தும் முகபாவம்தான். அதிலேயே தனது துயரத்தை, உறுதியை நமக்கு கடத்திவிடுகிறார்.
கதாநாயகனாக சூரி. கோபம் வந்தால் அக்கா தங்கைகள், முறைப்பெண் என்று அனைவரையும் காட்டுத்தனமாக அடிக்கிறார். வரைமுறையில்லாமல் அப்பா, மாமா, நண்பன் எல்லோரையும் மோசமாக ஏசுகிறார். முறைப்பெண் தனக்கு மனைவியாக வேண்டும், அதில் அவளுக்கு விருப்பம் இருக்கிறதா இல்லையா என்பதையெல்லாம் பொருட்படுத்தாத ஆணாதிக்க மனப்பான்மையின் உச்சத்தைக் காட்டுகிறார்.
வசனங்கள் வெகு இயல்பு. ஒவ்வொருவரின் பேச்சிலும் பெண்ணின் வாழ்க்கை அரைபடுகிறது. முறைப்பையனின் அப்பா, சகோதரிகள், நண்பர்கள்கூட முன்முடிவுடன் தீர்ப்பெழுதுகிறார்கள். எதிலும் அறிவுறுத்தும் தொனி இல்லை. அழுத்தமாக அடம்பிடிக்கும் கதாநாயகியை சாடையாகத் திட்டும் பெண்கள்கூட, அவளை நாயகன் அடிக்கும்போது தடுத்து காப்பாற்றுகிறார்கள்.
ஆங்காங்கே நகைச்சுவை இழையோடுகிறது. பின்பக்கம் கயிறுகட்டி இழுத்து ஸ்டார்ட் செய்யும் ஆட்டோ, அனைவரையும் மிரட்டும் ஜல்லிக்கட்டு காளையை குட்டிப்பெண் அனாயசமாக இழுத்துப் போவது என்று பல காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. படம் முழுக்க வரும் சேவலின் கம்பீரமும், பார்வையும் அட்டகாசம் !
பைக் பயணத்திலும், ஆட்டோ பயணத்திலும் நாமே போவது போன்ற உணர்வை ஒளிப்பதிவு தருகிறது. காடு மேடு, குண்டுகுழியில் வண்டியுடன் நாமும் ஏறி இறங்குகிறோம். ஒளிப்பதிவாளர் சக்திவேல் அவர்களுக்கு பாராட்டுகள் !
ஒலியமைப்பு அற்புதம். ஒவ்வொரு காட்சியிலும் வரும் சத்தங்கள் அந்தச் சூழலை நம்முன் நிறுத்துகின்றன. கச்சிதமாக எடிட் செய்திருக்கும் கணேஷ் சிவா அவர்களுக்கும் பாராட்டுகள் !
உறவுவிட்டுப் போகக்கூடாது என்று சொந்தத்திற்குள், ஜாதிக்குள் கல்யாணம் என்பது சம்பந்தப்பட்ட பெண்ணின் உரிமைகளைப் பந்தாடுவதையும், அவளை ஒடுக்க `அனைத்து’ வழிமுறைகளையும், வன்முறையையும் ஜாதியசமூகம் கையில் எடுப்பதையும் `கொட்டுக்காளி’ அப்பட்டமாக சித்தரிக்கிறது. தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், இயக்குநர் பி.எஸ்.வினோத் குமார் அவர்களுக்கும், மொத்த படக்குழுவினருக்கும் நிறைய அன்பும், வாழ்த்துகளும் 💐😍 ❤
படம் ஆகஸ்ட் 23 திரைக்கு வருகிறது. பார்த்துவிடுங்கள்
எழுதியவர்:
கீதா இளங்கோவன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.